Nitya flying in drone  
லைஃப்ஸ்டைல்

மனிதர்களின் பறவைப் பாசம்!

கொலோண்டாவின் நண்பர் ஒருவரின் தோளில் நித்யா அமர்ந்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பூனை ஒன்று சட்டென்று பாய்ந்து நித்யாவை பிடித்துக் கொண்டது.

எம். குமரேசன்

பிலிப்பைன்ஸ் நாட்டில் டாவோவைச் (Davao) சேர்ந்த மார்க் ஜோசப் கொலாண்டோ (Marc Joseph Colando) என்பவர் நித்யா (Nitya) என்ற பெயரில் 'லவ்பேர்ட்' கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இந்தக் கிளி மீது அவருக்கு உயிர். குடும்பத்தில் ஒருவர் போல, அந்த வீட்டில் நித்யா வளர்ந்து வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை நித்யாவுக்கு பூனை வடிவில் ஆபத்து காத்திருந்தது. ஒருமுறை, கொலோண்டாவின் நண்பர் ஒருவரின் தோளில் நித்யா அமர்ந்துக் கொண்டிருந்தது. அப்போது, அங்க வந்த பூனை ஒன்று சட்டென்று பாய்ந்து, நித்யாவை பிடித்துக் கொண்டது. பூனை தாக்கியதில் நித்யா படுகாயமடைந்தது. அதன் கால்கள் நிற்கவில்லை. சிகிச்சை அளித்தும் நடக்க முடியாமல் தவித்தது. கிளியால் பறக்கவும் முடியவில்லை. இதனால் கொலோண்டோவின் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்தனர்.

தாங்கள் வளர்த்த செல்லக்கிளியின் நிலை அவர்களின் மனதில் சொல்ல முடியாத வேதனையை ஏற்படுத்தியது. அதனால், பறக்க முடியாத தனது கிளியை எப்படியாவது மீண்டும் பறக்க வைத்துவிட வேண்டுமென்று மட்டும் கொலோண்டோ முடிவு செய்தார்.

இதையடுத்து, நித்யா மட்டும் பயணிக்கும் வகையில் சிறிய கூண்டு போன்ற பாட்டிலை உருவாக்கினார். பின்னர், அதனுள் நித்யாவை அமர வைத்து, ட்ரோன் மூலம் வானத்தில் பறக்கச் செய்தார். கூண்டுக்குள் 'கீச் கீச்' என்று சத்தமித்தப்படி நித்யா மீண்டும் வானத்தில் பறந்தது. தனது பறவை மீண்டும் வானத்தில் பறப்பதைப் பார்த்து கொலோண்டோ ஆனந்த கண்ணீர் வடித்தார்.

Baby under sea

இது குறித்து கொலோண்டோ கூறியதாவது, ''எனது காலை தியானத்தின்போதுதான் இந்த யோசனை எனக்குத் தோன்றியது. நான் உடனே அதைச் செய்து பார்த்தேன். ட்ரோனில் பறக்கவிட்ட பிறகு அவள் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்ந்தாள் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. நித்யா மிகவும் நட்பான அன்பான ஒரு பறவை. அவள் எனது இரண்டாவது இதயத் துடிப்பு. இப்போது,தினமும் 20 நிமிடங்கள் நித்யா வானத்தில் பறக்கிறாள்'' என்கிறார்

மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, லவ்பேர்ட்ஸ் வண்ண வண்ணக் கிளிகள் ஆகும். இந்தக் கிளிகள் தங்களது துணைக்கு மிகுந்த ஆதரவாக இருப்பவை. ஒரே தாரத்துடன் வாழும் குணம் கொண்டவை. எப்போதும், அருகருகே, ஜோடியாக அமர்ந்திருக்கும்.

இதேபோல, மத்திய லாவோ (central Iowa) நாட்டைச் சேர்ந்த ஸ்டீவன் லாயர் (Steven Lawyer) என்பவர் வெள்ளை இறக்கைக் கொண்ட பேபி என்ற கிளியை வளர்த்து வந்தார். சமீபத்தில், பஹாமாஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, தனது கிளியையும் அழைத்துச் சென்றார். அங்கு, பேபி நீருக்கு அடியில் செல்வதற்காக சிறிய நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தார். பின்னர், அதற்குள் பேபியை வைத்து கடலுக்கடியில் அட்வெஞ்சருக்காக அழைத்துச் சென்றார். கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளைக் கண்டு பேபி உற்சாகமடைந்தது.

இது குறித்து ஸ்டீவன் லாயர் கூறுகையில்,''நான் 2020ம் ஆண்டு ஒரு கடையில் பேபியைச் சந்தித்தேன். அவனை நோக்கி எனது கையை நீட்டியதும் ஏறி அமர்ந்து கொண்டான். அப்போது முதல் அவனைவிட்டு நான் பிரிந்ததில்லை. எங்கு சென்றாலும் கூடவே வருவான். அவனுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவே, கடலுக்கடியில் பயணிக்கச் செய்தேன். பேபி உற்சாகமாக கடலுக்கடியில் பயணித்தான். அவனுக்கு விருப்பம் இல்லையென்றால், கூண்டுக்குள் சென்றிருக்க மாட்டான். அதோடு, மன உளைச்சலிலும் பேபி இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, இந்தப் பயணத்தை அவனுக்காக ஏற்பாடு செய்தேன். கரையில் ஒரு கூண்டில் சும்மா உட்கார்ந்திருப்பதை விட, இதைச் செய்வதையே அவன் அதிகமாக விரும்புவான்'' என்று தெரிவித்துள்ளார்.

கடலுக்கடியில் பேபி பயணித்த இன்ஸ்டா வீடியோவை 43 லட்சம் பேர் பார்த்திருந்தனர். எனினும், சிலர் ஸ்டீவன் லாயரின் செயலை கடுமையாக விமர்சித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.