AI Image 
லைஃப்ஸ்டைல்

அவரச யுகத்தில் நாம் தவறவிடும் காத்திருப்பின் சுக நொடிகள்! #Waiting

ரஜினிகாந்த் போல யாராவது ஸ்டார் படம், அதுவும் பெரிய ஹிட் படமென்றால், டிக்கெட்டுகள் முடிந்து கவுண்டர் மூடப்பட்டால் கூட, யாரும் வெளியேற மாட்டார்கள். அடுத்த காட்சிக்கான டிக்கெட்டுக்காக அதே குகை வாழ்க்கையை மணிக்கணக்காக வாழத் தயாராகிவிடுவார்கள்.

ஆதி தாமிரா

நேற்று எங்கள் வீட்டின் இளம் பெண் ஒருத்திக்காக, மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) தேர்வு ஒன்றுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தோம். அதன் பதிவேற்றத்தின் இறுதிக் கட்டத்தில் OTP (One Time Password) உறுதி ஒன்றினை வழங்க வேண்டியிருந்தது. செல்போனில் வரக்கூடிய ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்திட எங்களுக்கு சரியாக 120 வினாடிகள் அவகாசம் தரப்பட்டது. விநாடிகள் இறங்கிக்கொண்டே இருந்தன. எல்லா அரசு இணையதளங்களையும் போல ஓடிபி உடனே வந்து விடவில்லை. 100 வினாடிகள் கழித்து வந்த ஓடிபியை விரைவாக உள்ளிட்டு விண்ணப்பத்தை 120 விநாடிகளுக்குள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து விட்டோம். ஆனால், அந்த ஓடிபிக்காகக் காத்திருந்த 100 வினாடிகளில் நாங்கள் இருவரும் மொபைல் ஸ்க்ரீனை பார்த்தபடியே, ஒரு சின்னப் பதற்றத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். வேறெந்த சிந்தனையும் எங்களுக்குள் இல்லை. மேஜையில் இருந்த காபியையும் கூட நாங்கள் கவனிக்கவில்லை. எங்கே தப்பு நடந்திருக்கலாம்? ஒருவேளை பதிவு எண்ணை தவறாக உள்ளிட்டுவிட்டோமா அல்லது செல்போன் எண்ணை தவறாகக் கொடுத்து விட்டோமா அல்லது சர்வர் டவுன் ஆக இருக்குமா? முதலில் போன் கட்டணம் சரியாக கட்டப்பட்டிருக்கிறதா, செல்போன் சிக்னல் சரியாக இருக்கிறதா? இப்படியான கேள்விகள் எங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. ஒரு 100 வினாடிகள் காத்திருப்புக்குள் மனதுக்குள் இத்தனைப் போராட்டம்!

ஒரு காலத்தில், எத்தனை இடங்களில், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்று நினைக்கையில் வியக்காமலிருக்க முடியவில்லை. சினிமா தியேட்டர்களில் நிச்சயம் 'கியூ'வில் காத்திருந்தாக வேண்டும். டிக்கெட் கவுண்டருக்கு செல்வதற்கென்றே, அகலத்தில் ஓர் ஆள் மட்டுமே செல்லும்படியாக குகைப்பாதை ஒன்றை அமைத்திருப்பார்கள். அதற்குள் முன்னும் பின்னுமாக மக்கள் நெருக்கடியில் குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். அதுவும் ரஜினிகாந்த் போல யாராவது ஸ்டார் படம், அதுவும் பெரிய ஹிட் படமென்றால், டிக்கெட்டுகள் முடிந்து கவுண்டர் மூடப்பட்டால் கூட, யாரும் வெளியேற மாட்டார்கள். அடுத்தக் காட்சிக்கான டிக்கெட்டுக்காக அதே குகை வாழ்க்கையை மணிக்கணக்காக வாழத் தயாராகிவிடுவார்கள்.

1992 வாக்கில், எங்கள் அப்பா ஒரு பத்து நாள் பயிற்சி வகுப்புக்காக சென்னைக்குப் போயிருந்தார். அதுவரை எங்கள் அம்மாவோ, நாங்களோ எங்கள் அப்பாவை ஒரு நாள் கூடப் பிரிந்திருந்ததில்லை. இதென்ன உலகம் இத்தனைப் பெரிதானதா, வெளியூருக்கெல்லாம் மனிதர்கள் பயணிப்பார்களா என்றெல்லாம் அந்த வயதில் யோசனை ஓடின. அந்தப் பத்து நாட்களில் 10 கடிதங்களை நாங்கள் அப்பாவுக்கு எழுதினோம். கடைசிக் கடிதமெல்லாம் அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவரும் தினமும் எங்களுக்குப் பதில் எழுதினார். அப்பாவின் பாசம் வெளிப்படையாக வார்த்தைகளில் வெளிப்பட்டது அப்போதுதான். போஸ்ட் மேனுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தோம். அவரது சைக்கிளின் மணியொலி கூட இன்னும் ஞாபகமிருக்கிறது.

AI Image

காதலிக்காக அம்பாசமுத்திரம் ரயிலடியில் காத்துக்கிடந்த நாட்கள் வாழ்க்கையின் ஈர நிலத்தில் பதிந்து போன காற்சுவடுகளாக உள்ளன. ரயில்கள் அப்போதெல்லாம் குறித்த நேரத்தில் வந்ததில்லை. பூவரசம் மரத்தின் மீது குருவிகள்தான் கூட்டமாய் வந்து உட்கார்ந்து கத்திக் கொண்டிருக்கும். ரயில் நிலையத்தின் வாசலில் இருந்த சுமைதாங்கிக் கல்லில் அமர்ந்திருப்பேன். அதன் பெயர்தான் சுமைதாங்கிக் கல் என்றும், அதன் பெயர்க்காரணத்தையும் ஒரு முதியவர் ஒரு நாள் சொல்லிச் சென்றார். அதில் காத்திருந்த பொழுதில்தான், ’நானுமே கூட இதயத்துக்குள் ஒரு சுமையைத் தாங்கிக் கொண்டுதானே இருக்கிறேன்’ என்று கவிதையெல்லாம் எழுத முயன்றேன்.

இன்று, தொழில்நுட்பம் நம்மிடமிருந்து இப்படியான பெரும்பாலான காத்திருப்புகளைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது. அதனால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல, அதன் கூடவே நமது பொறுமையையும் கொடுத்தனுப்பிவிட்டோம்.

இன்று நொடிகள் நேர தாமதத்தைக் கூட நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. நெட்பிளிக்ஸில் படம் பார்க்கும்போது ஸ்கிப் இண்ட்ரோ (Skip Intro) பட்டனை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் பார்க்கவிருக்கும் படத்தை, கனவுகளோடு உருவாக்கித் தந்த கலைஞர்களின் பெயர்கள் கூட நமக்குத் தேவையில்லை. யூடியூப் விடியோக்களை இரு மடங்கு (2x Speed) வேகத்தில் ஓட்டி, கருத்துகளை அறிய முற்படுகிறோம். இளையராஜாவின் பாடலை நீங்கள் அப்படிக் கேட்க முடியுமா? இன்ஸ்டாகிராம் ரீல்ஸுகளுக்கெல்லாம் நம்மைக் கவர ஒரு சில விநாடிகள்தான் நேரம். அதற்குள் அது நம்மை ஈர்க்கவில்லை என்றால், ஸ்கிப்தான். கண்டெண்ட் கடலில் அது காணாமல் போய்விடும்.

ஆனாலும், காத்திருப்பின் அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ள இன்னும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பள்ளியின் இறுதி வகுப்பில் வகுப்புகள் முடியும் மணியொலி, காதலியிடமிருந்து வர வேண்டிய பதில் மெசேஜ், மாத இறுதியில் சம்பளத்துக்கான காத்திருக்கும் நாட்கள், ஒரு சான்றிதழுக்காக அமர்ந்திருக்கும் அரசு அலுவலகத்தின் இருக்கைகள், டோக்கன் வாங்கிவிட்டு மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரம் என அந்தப் பட்டியல் நீள்கிறது. இவற்றின் மூலமாகவாவது இழந்த நம் பொறுமையை மீட்போம். இயற்கை எதையுமே அவசரமாகச் செய்வதில்லை. ஒரு விதை மரமாவதற்கும், ஒரு காய் கனிவதற்கும் தனக்கான காலத்தை எடுத்துக் கொள்கிறது. காத்திருப்பு என்பது கால விரயமல்ல; நாம் எப்போதுமே இலக்குகளை அடைவதிலேயே அவசரம் காட்டுகிறோம். ஆனால், பயணம் தரும் பேரனுபவத்தை அந்தக் காத்திருப்புதான் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அது ஒரு பொருளின் அல்லது இலக்கின் மதிப்பை அதிகப்படுத்தும் ஒரு காரணி. காத்திருப்பு என்பது ஒரு தவம்; அதற்குப் பின் கிடைக்கும் வரத்துக்கு மதிப்பு அதிகம்!