Courage 
லைஃப்ஸ்டைல்

படங்கள் சொல்லும் நெறிகள்! #Virtues

இந்தக் குணங்கள் அனைத்தையும் அதன் சரியான பொருளோடு புரிந்துகொள்ளுதலும், அவற்றைக் கடைபிடிக்க முயலுவதும் நம்மை மாண்பமை ஆன்றோர் எனும் இடத்தை நோக்கி அழைத்துச் செல்லும். அப்படியான நபர்களால்தான் இந்த மனித சமூகம் மேன்மையை அடைந்திருக்கிறது.

ஆதி தாமிரா

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் என்கிறோம், தகைசால் ஆன்றோர் பெருமக்கள் என்கிறோம். இந்த மாண்பு, தகைமை என்பதெல்லாம் என்ன? எங்கே கிடைக்கிறது? கிலோ என்ன விலையிருக்கும்?

தகைமை என்பது ஒரு நிலை! பெருமை கொள்ளத்தக்க, சிறப்புமிக்க, கண்ணியமிக்கதொரு நிலை! எம்.எல்.ஏ ஆவதாலோ, அமைச்சர் ஆவதாலோ, படித்து பெரும்பதவிகளை அடைவதாலோ மட்டும் நாம் அந்த நிலையை அடைந்துவிட முடியாது. நம்முள்ளிருக்கும் பண்புகளின் விளைவாக நாம் அந்த நிலையை அடைய முடியும், அடைய வேண்டும். அதென்ன பண்புகள்? அதெல்லாம் ஒரு நல்ல மனிதனுக்கு இயல்பிலேயே இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளாக 10 குணங்கள் வரையறுக்கப்படுகின்றன. இப்போது நடப்பவற்றையெல்லாம் பார்க்கும் போது, மீண்டும் மீண்டும் இவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.

மனிதனின் அடிப்படைப் பண்புகள் (Character traits/Virtues):

நேர்மை (Honesty/Integrity) — சொல்லும், செயலும் உண்மையாக இருக்கும் தன்மை. இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குவதுதான் சமூகத்தின் சீரழிவுகளுக்குக் காரணம் என்று நம்பும் சேனாபதி, அதைத் தான் பெற்ற பையனே செய்கிறான் என்று தெரியவரும் போது சற்றும் தயங்காமல் பிறருக்கு வழங்கிய அதே மரணதண்டனையை அவனுக்கும் வழங்குகிறார். அதுதான் ஹானஸ்டி!

தைரியம் (Courage) —சரியானதைச் செய்யப் பயப்படாத மனோபலமே தைரியம். ஜெய்பீம் படத்தில், ஒரு மிக எளிய பெண்ணாக இருந்தாலும், தனக்கான நீதியைப் பெற சக்திவாய்ந்த அரசாங்கத்தையே எதிர்த்து நிற்கிறாள் செங்கேணி. அதுவே துணிவு.

பொறுப்புணர்வு (Responsibility) — தன் செயல்களுக்குத் தானே பொறுப்பு என்ற உறுதி. ரமணா படத்தின் இறுதியில், புரொஃபசர் ரமணா சரணடையாமலிருக்கவும், மரணதண்டனை அளிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து விலக்குக் கோரவும் வழியிருந்தும் அவற்றைத் தவிர்க்கிறார். தான் செய்த காரியத்துக்கு, அது எந்த நோக்கத்துக்காக செய்யப்பட்டிருந்தாலும் அதற்காக, தானே பொறுப்பேற்கிறார். அதுவே பொறுப்புணர்வு.

பொறுமை (Patience) — உடனடி பலனை எதிர்பாராமல், காலம் கனியக் காத்திருக்கும் தன்மை. அசுரன் படத்தில் இந்தப் போர் எளிதில் முடிவடையாது என்பதை அறிந்த சிவசாமி, தன் மகன் சிதம்பரத்திடம் விடுதலைக்கான ஒரே வழி படிப்புதான் என்று சொல்கிறான். ஆனால், அது உடனடியாகவும் நடக்காது, சிதம்பரம் ஒருவனால் மட்டும் ஆகிற காரியமும் இல்லை. அந்தப் புரிதல்தான் பொறுமை.

கருணை/இரக்கம் (Compassion) — மற்றவர் வலியை உணரவும், அதைப்போக்கவும் முன்வரக்கூடிய தன்மை. அன்பே சிவம் படத்தில் தான் இப்படிச் சிதைவடைந்துபோன பேருந்து விபத்துக்குக் காரணமான ஒரு நாய் அங்குள்ளோரின் கோபத்துக்காளாகி, காதறுந்து, காலுடைந்துபோய் கிடப்பதைக் காணும் சிவம், அதன் மீது காட்டும் பரிவே கருணை.

நீதி உணர்வு (Sense of Justice/Fairness) — ஏழை, பணக்காரன்; ஆண், பெண் என்பது போன்ற எந்த வர்க்கப் பாகுபாடுமின்றி நீதியின் பக்கம் நிற்கும் தன்மை. ஜெய்பீம் படத்தில் செங்கேணிக்கான ஆயுதமாக களத்தில் நிற்கும் சந்துருவிடமிருப்பதே நீதியுணர்வு.

சகிப்புத்தன்மை (Tolerance) — மதம், சாதி, மொழி என பிறப்பாலமைந்த வர்க்க வேறுபாடுகளைக் கடந்த, சக மனிதன் மீதான அன்பே சகிப்புத்தன்மை. சிறை படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அப்துல் ரவூஃபுக்காக கலையரசி அங்கு வணங்கிக் கொண்டிருக்கிறாள். அங்கேயே அப்துலை தொழுகை செய்ய அனுமதிக்கிறான் கான்ஸ்டபிள் கதிரவன். அங்கு வரும் இன்னொரு போலீஸ்காரர் கண்களுக்கு அங்கு ஒரு கோயில் இருப்பதோ, கலையரசி அங்கு வணங்குவதோ பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால், அப்துல் தொழுவது மட்டும் சிக்கலாகப்படுகிறது. அவரைத் தடுத்து அனுப்பி அப்துலின் உரிமையைக் காக்கிறான் கதிரவன். அதுவே சகிப்புத்தன்மை.

ஒழுக்கம்/சுயக்கட்டுப்பாடு (Discipline/Self-control) — தன் உணர்வுகளையும், செயல்களையும் நிர்வகிக்கும் திறன். மாநாடு படத்தில் அப்துல் காலிக் ஒரு மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகிறான். எத்தனை முயன்றும் நடக்கவிருக்கும் தீமையை தடுத்து நிறுத்தும் வழியை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும் பெரும் ஒழுங்கோடு மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான். அது டிசிப்ளின். தோல்விகளில் கலங்காத சுய கட்டுப்பாடு.

நன்றியுணர்வு (Gratitude) — ஒருவர் காலத்தால் தனக்குச் செய்த உதவியை மறக்காமல், அதனால் ஏற்பட்ட தம் வாழ்வின் மாற்றத்தை மதிக்கும் மனநிலை. பிதாமகன் படத்தில், சிறை வாழ்வின் போது, சக்தி, சித்தன் மீது அன்பு காட்டுகிறான். அவனை ஒரு சக மனிதனாக மதிக்கிறான். அந்த அன்புக்காக காலம் முழுதும் சக்தியின் மீது காட்டும் பதிலன்பு, நன்றியுணர்விலிருந்து ஏற்படுகிறது.

Forgiveness

மன்னிக்கும் தன்மை (Forgiveness) —குறைகளைச் சுமக்காத மனநிலை. பிறரை மன்னிப்பதன் மூலம் இருவருக்குமான நிம்மதியை உருவாக்கும் உன்னதமான பண்பு. பரியேறும் பெருமாள் படத்தில் தன்னை அத்தனை விதங்களிலும் அவமானப்படுத்திய, துன்பப்படுத்திய, கொல்ல முயன்ற ஜோதியின் தந்தையை பரியன் மன்னிக்கிறான்.

இந்தக் குணங்கள் அனைத்தையும் அதன் சரியான பொருளோடு புரிந்துகொள்ளுதலும், அவற்றைக் கடைபிடிக்க முயலுவதும் நம்மை மாண்பமை ஆன்றோர் எனும் இடத்தை நோக்கி அழைத்துச் செல்லும். அப்படியான நபர்களால்தான் இந்த மனித சமூகம் மேன்மையை அடைந்திருக்கிறது.