வாழ்க்கை சில நேரங்களில் மிகச் சாதாரணமான ஒரு நாளில், எதிர்பாராத திசையில் திரும்பிவிடுவதுண்டு. என் நண்பர் ஒருவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர்பதவியில் இருக்கிறார். பெரிய சம்பளம், பெரிய செல்வாக்கு. எல்லாம் அவரது படிப்பு, திறமை, உழைப்பால் ஈட்டியது. வீடு, கார், பிள்ளைகளின் படிப்பு என எல்லாம் சிறப்பான முறையில் அமைந்து சீக்கிரமே முன்கூட்டிய ஓய்வுக்கும்கூட திட்டமிட்டுக்கொண்டிருந்தார். ஆனால், திடுமென இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு, ’சிறுநீரகச் செயலிழப்பு’ ஏற்பட்டுவிட்டது. வாரத்திற்கு மூன்று முறை ஹீமோடயாலிசிஸ் (Haemodialysis), மருந்துகளின் பட்டியல், திரவக் கட்டுப்பாடுகள் என வாழ்க்கை ஒரே இரவில் மருத்துவமனையைச் சுற்றிச் சுழலத் தொடங்கிட்டது.
துயரம் தாக்கும்போதெல்லாம் ’எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று உடைந்துபோவது மனித இயல்பு. நண்பர் ஒரு நல்ல சிந்தனையாளரும் கூட. அதனால், விரைவிலேயே அமைதியாகி அடுத்தக் கட்டத்தை யோசிக்கத் தொடங்கிவிட்டார். ’நடந்தது நடந்துவிட்டது... இனிமேலான வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுவது?’ என்ற அந்த ஒற்றைக் கேள்விதான், வெற்றியைப் பற்றிய ஒரு மனிதனின் ஒட்டுமொத்த இலக்கணத்தையே மாற்றியமைக்கிறது.
மாறும் முன்னுரிமைகள்
நோய் கண்டறியப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு வரை, அவரின் எண்ணம் ‘முன்கூட்டிய ஓய்வு’ (Early Retirement) பெறுவதிலேயே இருந்தது. பல்லாண்டு கால உழைப்பு, கவனமான முதலீடுகள், பொருளாதாரப் பாதுகாப்பு என எல்லாம் கைக்கூடி வந்த நிலையில், வேலையிலிருந்து விலகுவதுதான் அடுத்த இலக்காகத் தெரிந்தது. இப்போது, அவருக்கு முன்கூட்டிய ஓய்வின் மீது எந்த ஈர்ப்பும் இல்லை. அதற்கு திடீர் செலவினால் அவருக்கு ஏற்பட்ட பணத்தேவை என்பது காரணமல்ல.
’வேலை என்பது சம்பாதிப்பதற்கான ஒரு வழி மட்டுமல்ல. நாம் கற்றதை, நம் திறமையை இந்தச் சமூகத்துக்கு திரும்பச் செலுத்தும் ஒரு வழியும் கூட! நமக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது, நமது பங்களிப்பதை 60 வயதில் நிறுத்திக்கொள்ளலாம் என்பதையோ, அல்லது 40 வயதில் நிறுத்திக்கொள்ளலாம் என்பதையோ யார், எப்படித் தீர்மானிக்க முடியும்? 60 வயதில் ஓய்வு (Retirement) என்பது அரசு நிர்ணயித்த ஒரு சராசரி அளவு. ஆனால், யாரும் 60 வயதில் சட்டென வேலை செய்யும் தகுதியை இழந்துவிடுவதில்லை. பதிலாக ஓய்வு இலக்கு என்பது எப்படி இருக்க வேண்டும்? நமக்கு இருக்கும் நாட்களை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மாற்றுவது என்பதாகவே இருக்க வேண்டும்.
வேலையோடு ஒரு புதிய பிணைப்பு
பொதுவாகவே பல நிறுவனங்களில், அதன் தலைவர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லா விஷயங்களுக்கும் நடுநாயகமாகத் தங்களையே நிறுத்திக் கொள்வார்கள். ஒவ்வொரு அவசரப் பிரச்சினை, கடினமான முடிவு, முக்கியத் திட்டம் என எல்லாவற்றிலும் தங்களின் பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆரம்பத்தில் அது அர்ப்பணிப்பாகத் தெரிந்தாலும், உண்மையில் அது ஒரு 'சார்புநிலையை' (Dependence) உருவாக்குகிறது. அவர்களுடைய முக்கியத்துவத்தை விட்டுக்கொடுக்காத அவர்களின் தன்மையையே அது காட்டுகிறது. ஆனால், ஒரு நல்ல அமைப்பு என்பது அதுவல்ல. தலைவர் இல்லாதபோதும் மிகச் சரியாக இயங்கும் அமைப்பே வலுவான அமைப்பு.
சென்ற வாரம் அவரை மருத்துவமனையில் சந்தித்த போது அவர், ‘இனி அதிகமாக ஓடி ஓடி உழைப்பதை விட, வழிகாட்டியாக (Mentor) மாறுவது, எல்லாப் பிரச்சினைகளையும் நானே முன்னின்று தீர்ப்பதை விட, அதைச் சிறப்பாகத் தீர்க்கக்கூடிய அடுத்தக் கட்டத் தலைவர்களை உருவாக்கப்போகிறேன். ஓய்வு எடுப்பது என் திட்டத்தில் இப்போதில்லை. அது வரும்போது வரட்டும்’ என்றார்.
செல்வத்தின் உண்மையான நோக்கம் என்ன?
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையின் மாபெரும் செலவைக்கண்டு வியக்கும்போதுதான், ஒரு முக்கியமான விடை கிடைக்கிறது. இத்தனை நாட்கள் செல்வத்தைச் சேர்த்து வைத்ததன் நோக்கம் என்ன? பிரமிப்பான முதலீட்டுப் பட்டியலைப் பார்த்து (Portfolio) உற்சாகமடைவதா? அல்லது தேவைப்படும்போது அதைத் தைரியமாகப் பயன்படுத்துவதா? பல ஆண்டுகால சேமிப்பும், முதலீடுகளும், காப்பீடுகளும் வாழ்வின் எதிர்பாராத நெருக்கடிகள் வரும்போது பயன்படுத்துவதற்காகத்தான். அறுவைச் சிகிச்சை என்பது பண விரயம் அல்ல; அது எதிர்வரும் ஆண்டுகளுக்காகச் செய்யப்படும் முதலீடு.
பதவிகளாலோ, பட்டங்களாலோ, சேமிப்பினாலோ வெற்றியை அளவிடாமல், நமது வழிகாட்டுதலால் வளர்ந்த மனிதர்களின் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றியை அளவிடும்போது, வேலை என்பது சுமையாக இல்லாமல் ஒரு வரமாகிவிடுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு பல விஷயங்களை அவரிடமிருந்து பறித்துக் கொண்டாலும், அதற்கு ஈடாக அது வாழ்க்கையைப் பற்றிய, வேலையைப் பற்றிய தெளிவான ஒரு பார்வைக்கோணத்தை (Perspective) கொடுத்திருக்கிறது. இந்தத் தெளிவுக்கு யாரும் இப்படி ஒரு விலையைக் கொடுக்கக் கூடாதுதான். ஆனால், வாழ்க்கை நமது கட்டுப்பாட்டிலில்லை. சில நேரங்களில், துயரங்களும் இப்படியான பரிசுகளைக் கொண்டுவந்துவிடுகின்றனதான்!