The Grim Reaper 
லைஃப்ஸ்டைல்

தொட்டுவிடும் தூரத்தில் க்ரிம் ரீப்பர் #GrimReaper

விபத்து என்பது உண்மையில் விதியின் விளையாட்டல்ல. ஓர் அவசரம், ஓர் அலட்சியம், ஒரு கவனக்குறைவு- இவற்றின் கூட்டுவிளைவுதான் விபத்து.

ஆதி தாமிரா

சமீபத்தில் என் மனதை மிகவும் பாதித்த விசயங்கள் இரண்டு. ஒன்று, 28 வயதே ஆன உறவினர் ஒருவர், நெல் வயலுக்கு நீர் பாய்ச்சச் சென்றிருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்துபோனார். அவருக்குத் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. டிகிரி வரை படித்திருந்தும், கிராமத்திலேயே இருக்க வேண்டும் என்ற ஆசையில் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டு விவசாயம் செய்துகொண்டிருந்தார். சில சல்லிப்பயல்களைப்போல மதுவருந்துவது போன்ற எந்தக் கெட்டப் பழக்கங்களும்கூட கிடையாது. அவரது இளம் மனைவியையும், பிள்ளையையும் பார்க்கப் பார்க்க கண்கள் பனித்தன. எத்தனைக் கனவுகள் சிதைந்து போயிருக்கும்? இன்னொன்றும் இறப்புதான். 19 வயதேயான இளைஞன் ஒருவன் ரேஸர் பைக் ஓட்டிச் சென்று ஹைவேஸில் விபத்துக்குள்ளாகி மாண்டுபோனான். பெற்றோர் இருவருமே அரசு ஊழியர்கள். +2 வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தான். அதற்கான பரிசாகத்தான் அந்த பைக் வாங்கித் தரப்பட்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று சொல்லியும் கேளாமல், பெற்றோரை வற்புறுத்தி வாங்கிக்கொண்டிருந்தான். இருந்த ஒரே பையனையும் இழந்துவிட்டு அந்தப் பெற்றோர் செய்வதறியாது திகைத்து நிற்பதைப் பார்க்கும்போது, இந்த நிலையில்லா வாழ்க்கையைக் குறித்த பயம்தான் ஏற்படுகிறது.

எப்போதோ எங்கோ படித்த ஒரு பழைய வரி இது. ’மரணம் நம்மை நோக்கி வருவதில்லை. நாம்தான் அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்’. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் நேரலாம். மனித வாழ்க்கை நிலையில்லாதது. ஆனால், விபத்துகளை நாம் விதிவசம்தான் ஒப்படைக்கப் போகிறோமா? விபத்துகளை நம்மால் தவிர்க்க முடியாதா?

இளம் வயதின் பலம் என்பது துணிச்சல். ஆனால், அந்த வயதுக்கேயுரிய எச்சரிக்கையும், பொறுப்புணர்வும் குறையும் போது அதே துணிச்சல் பலவீனமாகவும் ஆகிப்போகிறது. அதோடு அனுபவமின்மையும் சேர்ந்துகொண்டால் இது இன்னும் ஆபத்தான சேர்க்கையாகிவிடும். இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. அதில் சுமார் 180000 பேர் இறக்கிறார்கள். இதில் 40 சதவீதம் பேர் 30 வயதைத் தாண்டாத இளைஞர்கள். இந்த வயதுகளில் ஆபத்தை விலைகொடுத்து வாங்காமலிருக்க வேண்டுமானால், பெற்றோர்களின் எச்சரிக்கைகளை மதிப்பதும், பொதுவிதிகளை கடைபிடிப்பதும் அவசியம். மிக இளம் வயதிலேயே ஆண்களின் உள்ளுணர்வு வாகனங்களை நோக்கி இழுக்கிறது. பொறுமையின்றி 12-14 வயதிலேயே பைக் ஓட்ட ஆசைப்படுகிறார்கள். அவர்களின் பிடிவாதம் பொறுக்க முடியாமல் பெற்றோரும் பைக் ஓட்டக் கற்றுக்கொடுக்கின்றனர். இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நம் வீட்டு முற்றத்துக்குள்தானே, நம் தெருவுக்குள்தானே எனும் எண்ணம் முற்றிலும் மாற வேண்டும். அதுதான் ஆளில்லாத ஓர் நாளில் மெயின் ரோட்டுக்கு அவர்களை வரச்செய்கிறது. 18 வயதுக்கு முன்னர் பைக், கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்பதை பெற்றோரும், பிள்ளைகளும் உணரவேண்டும். அதில் எந்த விதிவிலக்குமில்லை. சொல்லப்போனால், முன்னமே உயரம் போதாமல், பேலன்ஸ் கிடைக்காமல், முதிர்ச்சியில்லாமல் அரைகுறையாகக் கற்றுக்கொண்டு விபத்துக்கான வாய்ப்பை அதிகரிப்பதை விட, 18 வயது கடந்தவுடன் சில தினங்களிலேயே சரியாகவும், விரைவாகவும் பிள்ளைகளால் பைக் ஓட்டக்கற்றுக்கொள்ள முடியும்.

நம் எல்லோருக்குமே, நமக்கு நடக்கும் வரை ஒரு விசயத்தின் தீவிரம் புரிவதேயில்லை. இளைஞர்கள் இந்த விசயத்தில் இன்னும் மோசம். இதுதான் தகர்க்கமுடியாத கற்பனை (Invincibility Fable) எனப்படுகிறது. நமக்கு எதுவுமே ஆகாது, நம்மை யாரும், எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது எனும் கற்பனை நம்பிக்கை. நாம் உலோகங்களால் செய்யப்படவில்லை. உலோகங்களால் செய்யப்பட்ட 9 டன் எடையின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய உலகின் மிக வலுவான காரான டெஸ்லா மாடல் ஒய்யைச் (Tesla Model Y) சிதைக்கவே வேகமாக வரும் ஒற்றைக் கல் போதும்! சாலையில் ஓடும் பேருந்தின் டயர்களில் சிக்கி, சுழற்றியெறியப்படும் ஒரு கல் நம் உயிரை சில விநாடிகளுக்குள் எடுத்துவிடும்.

இந்த எச்சரிக்கைகள் சாலை விபத்துக்கு மட்டுமே உரியவை அல்ல. மின்சாரம், தண்ணீர், நெருப்பு, உயரம், வாகனங்கள், கூர்மையான கருவிகள், ஆபத்தான விலங்குகள் என அனைத்துக்குமே இவை பொருந்தும். இத்தகைய ஆற்றலின் வடிவங்களை மதிப்பதுதான் உண்மையான பாதுகாப்பு.

விபத்து என்பது உண்மையில் விதியின் விளையாட்டல்ல. ஓர் அவசரம், ஓர் அலட்சியம், ஒரு கவனக்குறைவு- இவற்றின் கூட்டுவிளைவுதான் விபத்து. கொஞ்சம் கவனமாகவும், பொறுப்பாகவும் இருந்தால் பெரும்பாலான விபத்துகளை நம்மால் தவிர்த்துவிட முடியும். எப்போதும், எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால், எப்போதும், எங்கே இருக்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம், சுற்றுப்புறத்தில் என்ன இருக்கிறது எனும் விழிப்போடிருக்க வேண்டும் என்பதுதான் செய்தி. க்ரிம் ரீப்பர் (Grim Reaper) எனும் காலன், நமது முதுகுக்குப் பின்னே மூச்சுக்காற்று நம்மீது படும்படியான நெருக்கத்தில்தான் எப்போதும் நம்மைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.