லைஃப்ஸ்டைல்

பெல்ட் லூப்ஸ் உருவானது எப்படி? #JeansPant

1900- ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெல்ட் அணியும் பழக்கம் மக்களிடத்தில் உருவானது. இடுப்பில், பேண்ட் ஃபிட்டாக இல்லையென்றால்,மக்கள் பெல்ட் அணியத் தொடங்கினர்.

எம். குமரேசன்

கடந்த 1853 களில் அமெரிக்காவைச் சேர்ந்த லெவி ஸ்ட்ராஸ் ( Levi Strauss) முதல் ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்கினார்.1873-ஆம் ஆண்டில் லெவி ஸ்ட்ராஸ் மற்றும் ஜேக்கப் டேவிஸ் (Jacob Davis) சேர்ந்து முதல் மற்றும் தற்போதைய நீல நிற ஜீன்ஸை வடிவமைத்து காப்புரிமை பெற்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனம்தான் 'லெவி ஸ்ட்ராஸ் & கோ (Levi Strauss & Co) ஜீன்ஸ் தயாரிக்கப் பயன்படும் பருத்தித் துணியின் பெயர்தான் டெனிம். முதன்முதலில் சுரங்கத் தொழிலாளர்களுக்காக இந்த ஆடை உருவாக்கப்பட்டது. மே 20-ஆம் தேதிதான் ஜீன்ஸ் பேண்ட் பிறந்தது. நாளடைவில் ஜீன்ஸ் பேண்ட்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிடித்தமான ஆடையாக மாறிப் போனது. ஜீன்ஸ் பேண்ட் கதை அனைவருக்கும் தெரியும்!

ஆனால், இந்த ஜீன்ஸ் பேண்டுகளில் பெல்ட் லூப்ஸ் (Belt loops) உருவான கதைதான் பலரும் அறியாதது. உண்மையைச் சொல்லப் போனால் 1920-ஆம் ஆண்டு வரை, ஜீன்ஸ் பேண்ட்கள் பெல்ட் லூப்ஸ் வைக்கப்படாமல்தான் தயாரிக்கப்பட்டது. 1920-களுக்கு முன்பு வரை பேண்ட்கள் இடுப்பில் இருந்து நழுவாமல் இருக்கத் தோள்பட்டையில் மாட்டிக்கொள்ளும் வகையிலான சஸ்பெண்டர்களே பயன்பாட்டில் இருந்தன. சில பேண்ட்களில் பொத்தான்களும் வைக்கப்பட்டு தைக்கப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் பெல்ட் அணியும் பழக்கமும் அனைவரிடமும் இல்லை.

ஆனால்,1900- ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெல்ட் அணியும் பழக்கம் மக்களிடத்தில் பரவலாக உருவானது. இடுப்பில், பேண்ட் ஃபிட்டாக இல்லையென்றால், மக்கள் பெல்ட் அணியத் தொடங்கினர். ஆனால்,பெல்ட் லூப் இல்லாததால், நிலையாக அது நிற்பதில்லை. இந்த தருணத்தில் உருவானதுதான் பெல்ட் லூப்ஸ். 1922-ம் ஆண்டில்,பெல்ட்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், மாறிவரும் ஃபேஷனுக்கு ஏற்பவும், 'லெவி ஸ்ட்ராஸ் & கோ நிறுவனம் தனது புகழ்பெற்ற '501' ஜீன்ஸ் மாடல்களில் பெல்ட் லூப்களை சேர்த்துத் தயாரிக்கத் தொடங்கியது. இடுப்பைச் சுற்றி பேண்ட் நிற்க பெல்ட்டும், பெல்ட் நிற்க லூப்பும் உதவிகரமாக இருந்ததால், மக்களிடத்தில் அமோக வரவேற்பும் கிடைத்தது. அப்போதிலிருந்து, பெல்ட் லூப்ஸ் இல்லாமல் ஜீன்ஸ் பேண்டுகள் தயாரிக்கப்படுவதில்லை. ஜீன்ஸ் பேண்ட்களின் புதிய அடையாளமாக பெல்ட் லூப்ஸ் மாறிப் போனது.ச்

பொதுவாக, ஜீன்ஸ் பேண்ட்களில் 5 அல்லது 7 பெல்ட் லூப்கள்தான் இருக்கும். இரண்டு பக்கவாட்டிலும் இரண்டு முன் பக்கத்திலும் இரண்டு பின்பக்கத்திலும் ஒன்று பின்பக்கத்தில் மத்தியிலும் அமைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. சில பிராண்டு ஜீன்ஸ்களில் இந்த எண்ணிக்கையை விட அதிக லூப்கள் அமைக்கப்படும். ஜீன்ஸ் தைக்கப்படும் துணிகளின் எடையை வைத்து, இது தீர்மானிக்கப்படுகிறது. பெல்ட் அணிந்தாலும், அணியா விட்டாலும் பெல்ட் லூப்கள் இல்லாமல் இப்போது, ஜீன்ஸ் பேண்ட்கள் தயாரிக்கப்படுவதில்லை.

சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லெவி ஸ்ட்ராஸ் & கோதான் தற்போது 'லெவிஸ்' (levi's) என்ற பிராண்டில் அறியப்படுகிறது. இது, டெனிம் ஜீன்ஸ்களுக்காக உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்க பிராண்டாகும். இந்த நிறுவனத்தின் 501 மாடல் இன்றுவரை பிரபலமாக உள்ளது.167 ஆண்டுகளாகத் தனியார் நிறுவனமாக வளர்ந்த இந்த நிறுவனம் 2019ம் நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகளைப் பட்டியலிட்டுப் பொது நிறுவனமாக மாறியது. தற்போது, இந்த நிறுவனத்தில் 20 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.