காலையில் உணவைக் கட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு ஓடுகிறோம். வேலை செய்கிறோம். அங்கீகாரம் கிடைக்காமல் மனம் சோர்கிறோம். மாலையில் நெரிசலில் சிக்கியபடி வீடு திரும்புகிறோம். அந்தச் சோர்வுக்கு நடுவே, 'இந்த வேலையை இன்னும் எத்தனை வருடம்தான் செய்யப் போகிறோம்?' என்ற கேள்வி நம் எல்லோருக்கும் ஒரு முறையாவது வந்திருக்கும். ஆனால், காலையில் பள்ளிக்குக் கிளம்பும் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் நம் குழந்தையைப் பார்த்ததும், அந்த நினைப்பை அழித்துவிட்டு மீண்டும் அலுவலகத்துக்கு ஓடுவோம்!
அந்த நினைப்பிலிருந்து தோன்றிய, வழக்கமான விதிகளை உடைத்து உருவான ஒரு சிந்தனைதான் இந்த F.I.R.E. (Financial Independence, Retire Early). பொதுவாக, 60 வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று அதன் பிறகு பேரக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்க நினைப்பதுதான் பாரம்பரியமான வழக்கம். ஆனால், இப்போது அந்தச் சிந்தனை மாறியிருக்கிறது. இருப்பது இந்த ஒரு வாழ்க்கைதான்! அதுவும் ரொம்பச்சின்னது. இதை நம் விருப்பப்படி வாழ்வதா? அல்லது பொறுப்புகளின் பாற்பட்டு கடைசிவரை உழன்றுகொண்டே கழிப்பதா?
F.I.R.E.- 'நிதிச் சுதந்திரம், சீக்கிரமே ஓய்வு' எனும் இந்தக் கருத்து 1990-களிலேயே அரும்பியிருந்தாலும், 2010-க்கு பிறகே உலகளவில் அதிகளவு பரவியது. இதற்குக் காரணம் 2008-ஆம் ஆண்டின் உலகப் பொருளாதாரப் பின்னடைவு (Recession) மற்றும் இணையத்தின் வளர்ச்சி. ’மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருப்பது பாதுகாப்பானது அல்ல’ என்ற உண்மையை புதிய தலைமுறை உணர்ந்த தருணம் அது. இணைய வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இந்தச் சிந்தனை ஓர் இயக்கமாகவே மாறியது.
FIRE எப்படி செயல்படுகிறது? & புகழ்பெற்ற 4% விதி (4% Rule)
FIRE கோட்பாடு மிகவும் எளிமையானது, ஆனால் அதைச் செய்வது அத்தனை எளிதானதல்ல. உங்களின் வருமானத்தில் 50% முதல் 70% வரை சேமித்து, அதைச் சரியான முதலீடுகளில் (Index Funds, Mutual Funds, Real Estate) கூட்டு வட்டி (Compounding) பெருகும்படி முதலீடு செய்வதுதான் இதன் அடிப்படை. இதைக் கணக்கிடத் தேவைப்படுவதுதான் 4% விதி. உங்களின் ஒரு வருடச் செலவுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைப் போல 25 மடங்கு தொகையை நீங்கள் சேமித்துவிட்டால், நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
உதாரணமாக, உங்கள் மாதத் தேவை 50 ஆயிரம், ஆண்டுச் செலவு ₹6 லட்சம் எனில், உங்களின் FIRE இலக்கு 6*25 = ₹1.5 கோடி. இந்த ₹1.5 கோடியை நல்ல முதலீடுகளில் வைத்திருந்து, அதிலிருந்து ஆண்டுதோறும் 4% தொகையை (₹6 லட்சம்) மட்டும் உங்கள் செலவுக்கு எடுத்துப் பயன்படுத்தினால், பணவீக்கத்தையும் (Inflation) தாண்டி, தரவுகளின் அடிப்படையில் உங்கள் அசல் பணம் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பது கணக்கு.
எல்லோரின் வாழ்க்கையும், செலவுகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. அதனால் FIRE இயக்கத்தில் பல வகைகள் உருவாயின. மிகக் குறைந்த செலவில், எளிமையான (Minimalist) வாழ்க்கை வாழ்ந்து சீக்கிரம் ஓய்வு பெறுவது லீன் ஃபயர் (Lean FIRE). ஆடம்பரமான வாழ்க்கையை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வாழ பெரிய அளவிலான நிதியைச் சேமித்து ஓய்வு பெறுவது ஃபேட் ஃபயர் (Fat FIRE). பகுதி நேரமாக அல்லது பிடித்தமான சிறு வேலைகளைச் செய்துகொண்டே ஓய்வில் இருப்பது பாரிஸ்டா ஃபயர் (Barista FIRE). இளம் வயதிலேயே ஓய்வுக்காலத்திற்கான நிதியைச் சேமித்துவிட்டு, அசலை வளர விட்டுவிடுவது. அதன்பின் அன்றாடச் செலவுக்கு மட்டும் வேலை செய்வது கோஸ்ட் ஃபயர் (Coast FIRE).
ஆனால், ’வருமானத்தில் 60% சேமிப்பது என்பது சாமானியர்களுக்குச் சாத்தியமா?’ என்ற கேள்வி மிக முக்கியமானது.
உண்மையில், அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கும், கடுமையான நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும்தான் இந்த FIRE பொருந்தும். அதில் கொஞ்சம் பிசகு ஏற்பட்டாலும், தீவிரமாக முயற்சி செய்தால் சற்று தாமதமாக 50 வயதிலாவது ஓய்வு பெற இது வழிவகுக்கும். ஆனால், முழு சம்பளத்தையும் செலவு செய்துவிட்டு, மாதக் கடைசியில் கைமாத்து வாங்க ஆள் தேடிக்கொண்டிருக்கும் நமக்கு அது அத்தனை எளிதானதல்ல.
இத்தனைச் சிரமப்பட்டு இதைத் திட்டமிடுவது எதற்காக? ஓய்வுக்குப் பின்னர் வேலை செய்யாமல் சோம்பேறியாய்ப் பொழுதைக் கழிக்கவா? நிச்சயம் இல்லை! பிடிக்காத வேலையை, பிடிக்காத மேலதிகாரிகளுடன் போராடியபடியே, கடமைக்காக மட்டுமே செய்ய வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபடுவதுதான் FIRE-ன் நிஜமான நோக்கம்! இந்த நிலையை எட்டியவர்கள் பணத்துக்காக வேலை செய்வதை நிறுத்துகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்து, ஓவியம், பயணம், சமூக சேவை, அல்லது சொந்த பிசினஸ் எனத் தங்களின் விருப்பமானப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சமூகம் நமக்குச் சொல்லித் தந்திருப்பது, ’60 வயதுதான் ஓய்வுக்கான தகுதி.’ ஆனால் FIRE சொல்வது, ஓய்வு என்பது வயதைச் சார்ந்ததல்ல; அது உங்களின் வங்கிக் கையிருப்பையும், உங்கள் மனநிலையையும் சார்ந்த விஷயம். ஆரோக்கியமாக இருக்கும்போதே எவ்விதப் பொருளாதாரப் பயமும் இன்றி நமக்குத் பிடித்த வாழ்க்கையை வாழ்வதே உண்மையான சுதந்திரம். FIRE என்பது வெறும் பணத்தைச் சேமிக்கும் கணக்கு மட்டுமல்ல; அது உங்கள் வாழ்க்கையின் மீதான முழு அதிகாரத்தையும் உங்கள் கைக்கே கொண்டுவரும் ஒரு தத்துவப் பயணம்!