Parenting Chat GPT AI Image
லைஃப்ஸ்டைல்

பெற்றோர் - பிள்ளைகள் உறவு; கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நாம் எவ்வளவுதான் நவீனமான உலகிற்குள் நுழைந்தாலும், நம்மைச் செதுக்கிய சிற்பிகளிடம் நாம் ஒருபோதும் மீறக்கூடாத சில எல்லைக்கோடுகள் இருக்கின்றன.

ஆதி தாமிரா

நண்பரோடு ஒரு வேலையாய் வெளியே போயிருந்தேன். சென்ற இடத்தில், எதிர்பார்த்ததை விடவும் தாமதமாகிக் கொண்டிருந்தது. எனக்கு என் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. காரணத்தைச் சொன்னேன். நண்பரின் மனைவியிடமிருந்து அவருக்கும் அழைப்பு. அவரும் காரணத்தைச் சொல்லிவிட்டு வைத்தார். சற்று நேரத்தில் நண்பருக்கு இன்னொரு அழைப்பும் வந்தது. அது அவரது அம்மாவிடமிருந்து! ஏற்கனவே வந்த வேலை நடக்காத எரிச்சல், தாமதம், பசி எல்லாம் சேர்ந்து அவர் அம்மாவிடம், ‘அதான் 10 மணிக்குள்ள வந்துடுவேன்னு சொல்றேன்ல, ஏம்மா நொய்யி நொய்யினு உசிரை வாங்குறீங்க?’ என்று எரிந்து விழுந்தார். நண்பரின் தோளில் கையை வைத்தேன். சற்றே, ஆசுவாசமடைந்து குரலைத் தணித்தார். நாம் வளர வளர நமக்கும் நம் பெற்றோருக்குமான இடைவெளி 'தலைமுறை இடைவெளி' (Generation Gap) என்ற பெயரில் விரிவடையத் தொடங்குகிறது. சமகால நண்பர்களோடு பழகும் சுதந்திரமும், ஒத்த சிந்தனைகளும் நம்மைப் புதியவர்களாக உணர வைக்கலாம். ஆனால், ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்குவதற்குப் பின்னால் இருக்கும் தியாகங்களின் மதிப்பை எதைக் கொண்டும் நம்மால் அளந்துவிட முடியாது. நாம் எவ்வளவுதான் நவீனமான உலகிற்குள் நுழைந்தாலும், நம்மைச் செதுக்கிய சிற்பிகளிடம் நாம் ஒருபோதும் மீறக்கூடாத சில எல்லைக்கோடுகள் இருக்கின்றன.

பேச்சில் கண்ணியம்!

இன்றைய நட்புடன் கூடிய வளர்ப்பு முறை (Friendly Parenting) மிகவும் ஆரோக்கியமானதுதான். தங்களின் பிள்ளைகளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் தோழமையோடு அவர்கள் பழகலாம். ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை நாம் நம் சக நண்பர்களைப் போலக் கருதிவிட முடியாது! நண்பர்களிடம் நாம் கோபப்படலாம், வாதாடலாம், சில நேரங்களில் தடித்த வார்த்தைகளைக்கூட பேசிவிடலாம். ஆனால், அதைப்போலவே நம் பெற்றோரிடம் குரலை உயர்த்துவதோ, கோபம் கொள்வதோ சரியாகாது. சில நேரங்களில் அவர்கள் செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்யக்கூடும். அவர்களுடைய புரிதல், காலத்தால் வளராமலே போயிருக்கலாம். நமது கோபத்துக்கான காரணம் நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால், இது எதுவுமே அவர்களிடம் நாம் கோபப்படுவதற்கான நியாயமாக மாறிவிடாது. நாம் தூக்கியெறிந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், அவர்களது கண்ணியத்தை சிதைக்கிறோம்.

Generation Gap

கட்டுப்பாடல்ல, கவலை!

"நான் எங்கே போனால் உங்களுக்கென்ன? ஏன் எப்போதும் என்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?" என்பது பதின்ம வயதுப் பிள்ளைகளின் பொதுவான குமுறல். ஆனால், பதின்ம வயது என்றில்லை, பாட்டி வயதிலிருந்தாலும் நாம் நம் பெற்றோருக்குப் பிள்ளைகள்தான். நம் பிள்ளைகளின் பள்ளி வேன் வர 5 நிமிடம் தாமதமானால் நாம் எப்படிப் பதறிப்போகிறோம்? அதுவேதான் நமக்கு ஐம்பது வயதானாலும், நம் பெற்றோரின் நிலை. பெற்றோரிடம் சொல்லாமல் நாம் வெளியே சென்றால், அல்லது எப்போது வீடு திரும்புவோம் எனும் சூழ்நிலையை விளக்காமல் இருந்தால் பெற்றோருக்கு ஏற்படுவது கவலை. அதுதான் நாம் நம் உள்ளூரில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்ப தாமதமானாலும் ஏற்படுகிறது. அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு, வீடு திரும்ப தாமதமானாலும் ஏற்படுகிறது. அவர்களுக்குத் தேவை தகவல். அதைத்தான் நாம் நம் சுதந்திரத்துக்கான எதிரியாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.

பொறுப்பு!

எட்டு வயதில் "அம்மா... என் சாக்ஸ் எங்கே?", பதினெட்டு வயதில், "அப்பா... என் வண்டிய துடைச்சி வைச்சிட்டீங்களா?", இருபத்தெட்டு வயதில், "அம்மா, என் பேங்க் பாஸ்புக்க எங்க வைச்சிருக்கீங்க?" — எத்தனை வயதைக் கடந்தாலும் பல வீடுகளில் பிள்ளைகளின் நிலவரம் இதுதான். தங்களுக்குரிய வேலைகளைக் கூட தாங்கள் செய்யாமல், எல்லாவற்றையும் பெற்றோரின் தலையிலேயே கட்டிவிடும் ஒரு சோம்பேறித்தனம். இந்தியச் சமூகச் சூழலில் இது இன்னுமே அதிகம்தான். நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், அந்தந்த வயதுக்குரிய பொறுப்புகளையும், வீட்டு வேலைகளில் உங்கள் பங்கையும் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கான வேலைகளைச் செய்வது மட்டுமல்லாமல், பெற்றோர்களின், உடன்பிறப்புகளின் வேலைகளில் பங்கெடுத்து உதவி செய்வது என்பது உண்மையில் மகிழ்ச்சி. அதுவே உறவைப் பலப்படுத்தும் பண்பு. அவர்கள் உங்களை நேசிப்பதால் அத்தனை வேலைகளையும் சலிப்பில்லாமல் செய்கிறார்கள். அதற்காக, அவர்களை உங்களின் 'வேலைக்காரர்களாக' மாற்றிவிடும் அற்பத்தனத்தை ஒருபோதும் செய்துவிடக் கூடாது. நம் பிள்ளைகள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ, அதை இன்று நம் பெற்றோரிடம் நாம் காட்ட வேண்டும்.

அன்பின் வெளிப்பாடு என்பது அள்ளித் தருவது மட்டுமல்ல, நம்மை உருவாக்கியவர்களை எந்நாளும் மரியாதையோடும், பொறுப்புணர்வோடும் தாங்கிப் பிடிப்பதும்தான்.