dhoni family and his home  
லைஃப்ஸ்டைல்

நாய், குதிரை, கிளி... தோனியின் செல்லங்கள்! #MSDhoni

கேப்டன் 'கூல்' என்று அழைக்கப்படும் தோனி பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக வரி கட்டும் தனிநபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

எம். குமரேசன்

சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பரத்திலும் ஒரு முக்கியமான ஸ்டார். விளம்பரம், கிரிக்கெட் என்று சம்பாதித்து அதன்மூலம் பீகார், ஜார்கண்ட் இரு மாநிலங்களிலும் சேர்த்து அதிக வரி செலுத்தும் தனிநபர் என்ற பெருமையும் தோனிக்கு உண்டு.

இந்த இரு மாநிலங்களின் வருமான வரித் துறையின் முதன்மைத் தலைமை ஆணையர் சுதாகர ராவ் கூறுகையில், "2025-26 நிதியாண்டில் பீகார் மற்றும் ஜார்கண்டில் இருந்து மொத்தமாக சுமார் ரூ. 20,000 கோடி வசூலிக்கப்பட்டது. இதில் ரூ.12,000 கோடி மட்டும் ஜார்க்கண்டில் இருந்து பெறப்பட்டது. பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கும் சேர்த்து தோனியே அதிகமாக தனிநபர் வரி செலுத்தியுள்ளார் '' என்று தெரிவித்துள்ளார். எனினும், தோனி சரியாக செலுத்திய வரித் தொகை, வருமான விவரங்களை அவர் வெளியிடவில்லை. தோனி தொடர்ந்து 6வது ஆண்டாக வருமான வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் மட்டும் நான்கு வீடுகள் உள்ளன. இதில், தோனி வசிக்கும் வீடு ராஞ்சி ரிங் ரோட்டருகே சிம்லியா என்ற இடத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் பெயர் 'கைலாஷ்பதி' என்பதாகும். முற்றிலும் இயற்கை சூழலுடன் இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், உள்விளையாட்டரங்கம், சினிமா தியேட்டர் போன்ற நவீன வசதிகள் இந்த வீட்டில் உள்ளன. இந்த பிரமாண்டமான வீட்டில், தோனி அவரது மனைவி சாக்ஷி மகள் ஸிவா (Ziva) ஆகியோர் வசிக்கின்றனர். இந்த வீட்டில் செல்ல நாய்கள் மற்றும் குதிரைகள், கிளிகள், பறவைகள் என பல உயிரினங்கள் வசிக்கின்றன.

தோனியின் மனைவி சாக்ஷிக்கும் விலங்குகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அவற்றை பராமரிப்பது, உணவுகள் சமைத்து வழங்குவது என விலங்குகள் மீது மிகுந்த பரிவு காட்டுவார். சாக்ஷி தனது ஓய்வு நேரத்தை செல்லப்பிராணிகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டவர்.

dhoni and honey

வீட்டிலுள்ள செல்ல நாய்கள் தோனிக்கு ரொம்பவே ஸ்பெஷல். சாம் என்ற பெயர் கொண்ட பெல்ஜியன் மலினாய்ஸ் நாய் தோனிக்கு ரொம்பவே நெருக்கம். லில்லி மற்றும் கபார் என பெயர் கொண்ட ஹஸ்கிகள் மற்றும் ஸோயா என்ற பெயர் கொண்ட டச்சு ஷெப்பர்ட் நாய்களும் தோனியின் வீட்டில் உள்ளன. ஓய்வு நேரத்தில் தனது செல்ல நாய்களுடன் விளையாடுவதுதான் தோனியின் பொழுது போக்கு.

கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும் ஜெயித்தாலும் நாய்கள் நிபந்தனையற்ற அன்பை வழங்குவதாக தோனி குறிப்பிடுவது வழக்கம். அடிக்கடி, தனது செல்ல நாய்கள் பற்றி தோனி வீடியோக்கள் வெளியிடுவதும் உண்டு. நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஒரு சிறப்பு பயிற்சி மையத்தை தனது வீட்டில் தோனி உருவாக்கியுள்ளார்.

இதுதவிர, இந்திய நாட்டுக்குதிரை இனமான மார்வாரி குதிரையையும் தோனி வளர்க்கிறார். இதன் பெயர் சேதக். போனி என்ற பெயரில் குட்டி குதிரையும் தோனியிடம் உள்ளது. இந்த குதிரைகளுடன் தனது செல்ல நாய்கள் விளையாடும் வீடியோவையும் தோனி அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

தனது செல்லப்பிராணிகள் குறித்து தோனி கூறுகையில், ''எனது பண்ணை வீட்டில் என்னால் போதுமான நேரத்தைச் செலவிட முடியவில்லை. நான் குதிரை சவாரி செய்வதற்காக எனது நண்பரின் பண்ணைக்கு செல்வது வழக்கம். படிப்படியாக, எனக்குக் குதிரைகள் மற்றும் குதிரை வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது. 2010ம் ஆண்டு எனது பண்ணை வீட்டுக்காக சில குதிரைகளை வாங்கினேன். அவற்றை நான் மகிழ்ச்சியுடன் பராமரிக்கிறேன். நான் எனக்காக மட்டுமே குதிரைகளை வளர்க்கிறேன், அவற்றை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை'' என்கிறார்.

இது தவிர, 'ஹனி' என்ற பெயர் கொண்ட கிளியும் தோனியின் வீட்டில் உள்ளது. வாயாடி கிளியான இது, அடிக்கடி தோனியின் தோளில் அமர்ந்திருக்கும் காட்சிகளை காண முடியும். தோனியின் தோளில் இந்த கிளி அமர்ந்திருக்கும் போட்டோவை சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில், “Mahi” and his “Honey” ! என்ற கேப்ஷனுடன் பகிர்ந்ததும் உண்டு.