கசகசப்பில்லாத ஏஸி அறை. ஒலியமைப்பு இருக்கிறதா என்று கேட்குமளவுக்கு மிக மெல்லிய பின்னணி இசை, அனைவரிடமும் சிரித்துப் பேச, கட்டியணைத்து வாழ்த்த ஏற்ற சூழல். மணமக்களுக்கென தனி மேடை அமைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அதைப் பயன்படுத்தாமல், இறங்கி அனைவரோடும் அளவளாவினார்கள். புகைப்படக்காரர்களும் தொல்லையில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் அதை மட்டுமே படமெடுத்துக்கொண்டார்கள். ஆஹா, எங்கே என்று கேட்கிறீர்களா? அது ஒரு கல்யாண ரிசப்ஷன். வீட்டிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ நடக்கவில்லை. மாறாக ஒரு ஹோட்டல் ஹாலில் நடந்தது. இது போன்ற ஹால்கள் பெரும்பாலும் பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழு கூட்டம், ஊழியர்கள் சந்திப்பு, வாடிக்கையாளர்கள் சந்திப்பு போன்றவற்றுக்கு வசதியாக இருப்பதோடு, எளிமையான பிறந்தநாள், கல்யாண ரிசப்ஷன் போன்ற எளிய வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. ஓரமாக வைக்கப்பட்டிருந்த பஃபே அமைப்பில் எளிய, சுவையான உணவு தரப்பட்டது. ஒரு விநாடி நேரம், அதற்கு முந்தைய வாரத்தில் நடந்த ஒரு கல்யாணம் நினைவுக்கு வந்துபோனது. நினைவுகளில் ஒரு பேரிரைச்சல்!
தமிழ்நாட்டில், தமிழர்களின் குடும்பவிழா ஏற்பாடுகள் எப்போது இப்படி அநாகரிகமாக மாறிப் போயின என்பது தெரியவில்லை. கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு, புதுமனைப் புகுவிழா என்று எங்கு போனாலும் இரைச்சலில் சிக்கிச் சீரழிய வேண்டியதாக இருக்கிறது. வீட்டில் நடத்தினாலும், மண்டபங்களில் நடத்தினாலும் இந்த இரைச்சல் மட்டும் எங்கும் ஓய்வதேயில்லை.
குடும்ப விழாக்கள் எதற்காக நடத்தப்படுகின்றன? உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை, வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதற்காக! அந்த வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றியாக முகமலர, அகமலர அவர்களுக்கு உணவளித்து, விருந்தோம்பல் செய்து அனுப்புவதற்காக! சமீப வருடங்களில் எத்தனை நெருங்கிய நண்பராக, உறவினராக இருந்தாலும், யாராவது ஏதாவது விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தாலே முதலில் எரிச்சல்தான் வருகிறது. ஏன்தான் இந்த விழாக்களுக்குச் செல்கிறோமோ எனும் வெறுப்புதான் ஏற்படுகிறது. அத்தனைக்கும் காரணம் இரண்டு விசயங்கள். ஒன்று, இந்த இசையமைப்பு எனும் சித்திரவதை! மற்றொன்று, விருந்தில் பரிமாறப்படும் உணவுகள்.
இசைக்கச்சேரி என்ற ஒன்றை ஏற்பாடு வைத்துக்கொண்டு, ஒரு சிறிய ஹாலுக்குள் அத்தனை பேரையும் அடைத்து வைத்து, அறையைச் சுற்றிலும் 50 ஸ்பீக்கர்களை வைத்து அலற விட்டு, பைத்தியம் பிடிக்க வைக்கிறார்கள். அந்தப் பாடகர்கள் சற்று ஓய்வெடுத்துக்கொள்ளும் போது, அந்த நேரத்தில், கேரள செண்டை மேளம் என்ற லைவ் சவுண்ட் புரடியூஸிங் கேங்ஸ் பொறுப்பெடுத்துக்கொண்டு நம் காதுகளையும், காதுகளைத் தாண்டி மூளையையும் பதம் பார்க்கிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குள் நுழைந்ததுமே, எப்போதடா இந்த இடத்தை விட்டுப் போய்த்தொலைவோம் என்றுதான் தோன்றுகிறது. யாரும் யாருடனும் ஒரு வார்த்தை கூட பேச முடிவதில்லை.
அடுத்தது விருந்துபசரிப்பு. சின்ன வயதில் ஏதாவது இப்படி நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகள் வராதா என்று காத்திருந்தது எல்லாம் நினைவிலிருக்கிறது. காரணம் உணவு. அப்போதெல்லாம் நம் வீடுகளில் மூன்று வேளையும் சோற்றைத்தான் போடுவார்கள். இட்லி, பொங்கல், பூரி போன்றவற்றையெல்லாம் கடையில்தான் கண்ணால் பார்க்க முடியும். கடையில் சாப்பிடுவது என்பது அப்போது மிக ஆடம்பரமான விசயம். எப்போதாவது இப்படியான விசேஷ வீட்டு காலைகளில்தான் பொங்கலையும், இட்லியையும் சாப்பிட முடியும். பொங்கல் ஆறி, உலர்ந்து போயிருந்தாலும், இட்லி காய்ந்து போயிருந்தாலும் அதில் சிரட்டைக் கரண்டியால் சாம்பாரை அள்ளி ஊற்றி, தேங்காய்ச் சட்னியையும் கொத்தாக வைப்பார்கள். மாமாவும், சித்தப்பாவும் சிரித்த முகமாக அதைப் பரிமாறுவார்கள். அந்தச் சுவையும், மணமும் இப்போதும் மனதில் தங்கியிருக்கின்றன. ஆனால், இப்போது விதவிதமாக, என்னென்னவோ பரிமாறப்படுகிறது. அதில் சுவை என்பதுதான் பெயரளவுக்கும் இல்லை. அதுவும் மதிய உணவில் தரப்படும், சாம்பார், கறிகாய்கள் எல்லாம் ஏன்தான் இதற்காக உட்கார்ந்தோம் எனுமளவில்தான் இருக்கின்றன. இலைகளில் பாதி உணவுகள் அப்படியே இருப்பதும், வீணாகக் குப்பையில் கொட்டப்படுவதும்தான் நான் சொல்வதற்கான ஆதாரம். அதோடு விழாவுக்கு அழைத்த உறவினர்களே நம்மோடு சேர்ந்தமர்ந்து, ஒரு விருந்தினராகத்தான் அதைச் சாப்பிட முடிகிறது. முழுக்க தொழில்மயமாகிவிட்ட திருமண சமையல் காண்ட்ராக்ட் எனும் அமைப்பின் திருவிளையாடல் இது.
இதையெல்லாம் தயை கூர்ந்து மாற்றித் தொலையுங்கள் தமிழர்களே!
ஒருவேளை மேற்சொன்னது போன்ற அமைதியான ஹோட்டல் ரிசப்ஷன், எல்லோருக்கும் முடியாமல் போகலாம். ஆனால், குடும்ப விழாக்களுக்கு குறைவான நபர்களை அழையுங்கள். இசையமைப்பு எனும் எந்தக் கொடுமைகளையும் ஏற்பாடு செய்யாதீர்கள். உணவு ஏற்பாட்டை காண்ட்ராக்டரிடம் கொடுத்தாலும், கொஞ்சமேனும் பொறுப்பெடுத்துக் கொண்டு அதைக் கண்காணியுங்கள். விழாக்களை மீண்டும் இனிமையாக்குங்கள். விழாக்கள் மேளச் சத்தத்தால் முக்கியமாவதில்லை; மனிதர்களின் சிரிப்புச் சத்தத்தால்தான் சிறப்புறுகிறது.