Pointless speech 
கிரேஸி கார்னர்

நான் சொல்ல வந்தது என்னவென்றால்...

நானும் அவர் சொல்ல வந்த விசயத்தைக் கேட்பதை விட்டுவிட்டு, மொட்டை மண்டையில் முடி வளரவைப்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவருடைய பேச்சுக்கு எல்லைகளே கிடையாது.

ஆதி தாமிரா

நேற்று கந்தசாமியிடமிருந்து ஒரு போன் வந்தது, “எப்பிடியிருக்க மாப்ள” என்று ஆரம்பித்தார்.

  
சில மனிதர்களிடம் பேச ஆரம்பித்தால், பேச்சு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கும் தெரியாது. பேசிக்கொண்டிருக்கும் அவர்களுக்கும் தெரியாது. ஆனால், சிட்டிக்குள் ஓடுகிற ஆட்டோ மாதிரி கிடைக்கிற கேப்பில் எல்லாம் போய்க்கொண்டே இருக்கும். நடுவில் “நான் சொல்ல வந்தது என்னவென்றால்...” என்று பாயிண்டுக்கு வருவது போல தோன்றும். அதற்குப் பிறகும், அவர்கள் சொல்ல வந்தது என்னவென்று தெரிந்துகொள்ள நாம் அரைமணி நேரமாவது காத்திருக்க வேண்டியிருக்கும்.

“போன வாரம் வீட்டுக்கு வந்திருந்தேனே, எங்க போயிருந்த?”

“போன வாரமா, என்னிக்கு?”

“அது, களக்காடு தங்கச்சி மாப்ளைக்கு உடம்பு சரியில்லைனு போய்ப் பாத்தம்லாடே, அன்னிக்கு”

“அதான் என்னிக்கு?”

“அதாம்ப்பா, சுப்ரமணி வீட்டுக் காதுகுத்துக்குப் போயிட்டு, அப்படியே களக்காட்டுக்கும் போய்ட்டு, உங்கிட்ட தகவல் சொல்லிட்டுப் போயிரலாம்னு உன் வீட்டுக்கும் வந்தேன், நீதான் இல்ல…”

“என்ன விசயம் மாமா?”

“அது… ஆமா, போன வாரம் சென்னையிலருந்து ராசசுந்தரம் வந்திருந்தாரு. சேர்மாதேவியில ஏதோ இடம் சம்பந்தமா அண்ணந்தம்பிகளுக்குள்ள பஞ்சாயத்து போலருக்கு. வந்த இடத்துல எங்கண்ணுல பட்டுட்டாரு. உடுப்பி ஓட்டல்ல, காப்பி குடிக்கப்போனோம். பக்கத்துல சேர்மாதேவியில பஸ்ஸ்டாண்டை இடிச்சி ஒரு வருசமா கட்டிகிட்டு கிடக்கானுவோ, வேலை நடக்குதா இல்லையா ஒரு இழவும் புரியல. ஒரே புழுதிக்காடு. கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். அவரு பையனுக்கும் மருமவளுக்கும் ஒரே தகறாலா இருக்குதாம். மனுசன் வயசான காலத்துல நிம்மதியில்லாம சுத்திகிட்டிருக்காரு. உன்னைப் பத்தி ரொம்பக் கேட்டாருடே, அண்ணாச்சிக்கு அப்புறம் ஆளாகி நல்லபடியா குடும்பம், சித்தப்பா, மாமாமாருனு எல்லார்கிட்டயும் அரவணைச்சுப் பவுசா பழகுறான், அப்படியே அண்ணாச்சிய பாத்தமாதிரியிருக்குன்னு சொன்னாரு, அவரு உன்னைய எங்க பாத்தாருனு தெரியல…”

“அது…”

“மனுசனுக்கு பொண்ணை உனக்கே கொடுத்துருக்கலாம்னு ஒரு ஆதங்கம் இருக்குறாப்பல இருக்கு மாப்ள.”

“ஆமா, கல்யாணமாகி 20 வருசம் கழிச்சிப் பேசற பேச்சா இது. சரி, விசயத்தை சொல்லுங்க, நீங்க எதுக்கு கூப்புட்டீங்க”

“ஆமா, எதுக்கு கூப்புட்டேன்?”

“சுத்தம்”

“ரொம்பதாம் சலிச்சிக்காதடே, அப்படியே அம்மா எங்கன்னுலா வர்றான்… ஆமா... அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரரு ஒருத்தரு, டிஎம்பில வேலை பாத்தாருல்ல, அந்தாளோட தம்பி கூட என்னோட வேலை பார்த்தவன்னு சொன்னேன்ல. அவன் நேத்து வீரவநல்லூர் பஸ்ஸ்டாண்டு பக்கத்துல பைக்கைக் கொண்டுபோய் லாரில மோதி பெரிய ஆக்சிடெண்ட் ஆயிப்போச்சு. கால்ல பெரிய அடி. அவனை அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரிக்குப் பாக்கப்போனேன். அங்கதான் நம்ம சிவன்பாண்டி டாக்டரா இருக்காரு. டாக்டருன்னதும்தான் ஞாபகம் வருது. உம் பிரண்டு செல்வசண்முகம் டாக்டரு இருக்காருல்ல, அவரை டிவியில பாத்தேன். ஏதோ சேனல்ல பேட்டி குடுத்துக்கிட்டிருந்தாரு. சின்னப்பையனா பத்து ரூவாய்க்கு சுத்தமல்லியில ஊசிபோட்டுகிட்டிருந்தாரு. நேத்து பாத்த மாதிரி இருக்கு. இப்ப ஆளுக்கு மண்டை முடியெல்லாம் கொட்டிப்போய் எவ்ளோ பெரியாளாயிட்டாரு. எனக்கும் முடி ரொம்பக் கொட்டுதுடா, அந்தாளு லீவுக்கு நெல்லைக்கு வந்தா சொல்றியா, முடி கொட்டுறதுக்கு மருந்து இருக்கான்னு கேட்டுப்பாப்போம்”

”அவரு எத்தா பெரிய டாக்டரு, அவரால அவரு மண்டைக்கே முடி வளரவைக்க முடியல. அவரைப் பாத்து நீங்க உங்க மண்டையில முடிவளர மருந்து கேக்கப்போறிங்களா? அதுக்கு நான் சிபாரிசு வேற பண்ணனுமா? 60 வயசுக்கு மேல முடியை வைச்சி என்ன பண்ணப்போறீங்க… எந்தம்பிக்கு என்ன வயசாவுது, அவனுக்கே அதுக்குள்ள முடியெல்லாம் கொட்டிப்போச்சுது”

அவர் திக்கு திசை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதைப் போலவே என்னையும் அவர் போக்குக்கே இழுத்துவிட்டார். நானும் அவர் சொல்ல வந்த விசயத்தைக் கேட்பதை விட்டுவிட்டு, மொட்டை மண்டையில் முடி வளரவைப்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவருடைய பேச்சுக்கு எல்லைகளே கிடையாது. ஒரு சம்பவம் இன்னொரு சம்பவத்தை அழைக்கும். அந்தச் சம்பவத்தில் வரும் ஒருவர் இன்னொருவரை நினைவுபடுத்துவார். அந்தச் சம்பவத்தில் வந்த ஊர் இன்னொரு ஊரை ஞாபகப்படுத்தும். அந்த ஊரிலிருக்கும் அவருடைய அத்தை நினைவுக்கு வருவார். அத்தைக்கு சர்க்கரை நோய் இருந்தது நினைவுக்கு வரும். சர்க்கரை என்றதும் ரேஷன்கடை நினைவுக்கு வரும். அவர்கள் அப்படித்தான்!

“மூர்த்திக்கா? ரொம்ப நாளாச்சு, அவனத்தான் பாக்கவே முடியல மாப்ள. எங்க மதுரைலதான இருக்கான்? அவன் எப்படியிருக்கானாம்”

”நல்லாருக்கான். போன மாசம்தான வந்துட்டுப் போனான், அப்பா திதிக்கு!”

“நானும் தாத்தா திதிக்கு உன்னைக் கூப்பிடத்தானே போனே பண்ணினேன். வர்ற சனிக்கிழமை! மறக்காம புள்ளைகள கூட்டிகிட்டு வந்துரு!”

என்று சொல்லிவிட்டு வைத்தார். உலகம் மட்டுமல்ல, நாம் நம் உறவுகளுக்குள் பேசக்கூடிய டாபிக்குகளும் சின்னதுதான். ஒரு சுற்று சுற்றி வந்தால், அரைமணி நேரத்தில் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுவோம். இப்போது இதிலிருந்து நான் சொல்ல வந்தது என்னவென்றால்...