It is simple 
கிரேஸி கார்னர்

'இவங்க ரொம்ப சிம்பிள்னு ஆரம்பிச்சாங்கன்னாலே...' #Fun #Simple

அது வந்து, நாம ஒரு பாடத்துல எடுத்த கிரேடு பாயிண்டைத் தூக்கி, அந்தப் பாடத்தோட வெயிட்டேஜ் நம்பரோட பெருக்கி, அதுல வர்ற நம்பரைப்பூராம் கூட்டி மொத்தம் எடுத்து, அதை, மொத்த வெயிட்டேஜோட வகுத்துக் கிடைக்கிற நம்பர்தான் ஜிபிஏ…

ஆதி தாமிரா

கல்லூரித் தேர்வு முடிவுகள் வந்ததும், ’என்ன மார்க் எடுத்தே’ என்று கேட்ட பாட்டியிடம் சிஜிபிஏ மதிப்பைச் சொல்லிக்கொண்டிருந்தான் பையன். ’சிஜிபிஏ-ன்னா என்ன?’ என்று கேட்டார் அவர். அதற்குப் பதிலாக அவன்,

’அது ரொம்ப சிம்பிள்தான் ஆச்சி. அது வந்து, நாம ஒரு பாடத்துல எடுத்த கிரேடு பாயிண்டைத் தூக்கி, அந்தப் பாடத்தோட வெயிட்டேஜ் நம்பரோட பெருக்கி, அதுல வர்ற நம்பரைப்பூராம் கூட்டி மொத்தம் எடுத்து, அதை, மொத்த வெயிட்டேஜோட வகுத்துக் கிடைக்கிற நம்பர்தான் ஜிபிஏ… அப்புறமா அந்த ஜிபிஏவை…’

என்று தொடங்கிப் போய்க்கொண்டிருந்தான். அவன் விளக்க முற்பட்டதெல்லாம் சரிதான். ஆனால், ’அது ரொம்ப சிம்பிள்தான் ஆச்சி’ என்று ஆரம்பித்ததைத்தான் யோசித்துப் பார்க்கிறேன். மிகவும் சிக்கலான விஷயங்களை விளக்க ஆரம்பிப்பவர்கள்தான் ரொம்ப சிம்பிளாக, ‘அது ரொம்ப சிம்பிள்தான்’ என்ற வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறார்கள்.

உண்மையில், ஒரு விஷயம் சிம்பிளா இல்லையா என்பதை முடிவு செய்வது, அந்த விஷயத்தின் சிக்கல் அல்ல; அதைப் பார்க்கிற, கேட்கிற மனிதரின் அனுபவமும், அதைக் குறித்து அவருக்கிருக்கிற அறிவும்தான்.

’கீய்ய்ச்சு கீய்ய்ச்சு’ என்று சத்தம் போடும் நமது காரைக் கொண்டு போய் ஒரு மெக்கானிக்கிடம் காண்பித்தால், சத்தத்தை வைத்தே, “ரொம்ப சிம்பிள் சார், கிளட்ச் பிளேட்டுதான் போயிருக்கு. விட்டுட்டுப் போங்க, சாய்ங்காலம் எடுத்துக்குங்க” என்பார். அதே வேலையை நம்மால் செய்ய முடியுமா? காரின் பானெட்டைத் திறப்பதற்கே லிவர் எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக்கொண்டிருப்போம்.

முட்டிவலி என்று ஒரு மருத்துவரிடம் போய்க் காண்பித்துவிட்டு, “என்ன பிரச்னை டாக்டர்?” என்று கேட்டால், “ரொம்ப சிம்பிள்! பயப்படவே வேண்டாம், முட்டியில் ஒரு சின்ன சர்ஜரி. நட்டு போல்ட்டு போட்டு முடிச்சிடலாம்” என்பார். முட்டியில நட்டு போல்ட்டா? அதன் ஸ்பேனர் சைஸ் என்ன, துருப்பிடிக்காம இருக்க எப்படி கிரீஸ் போடறது போன்ற சிந்தனைகளிலிருந்து மீளவே நமக்கு மூன்று நாட்களாகிவிடும். அதைத்தான் அவர் ரொம்ப சிம்பிள் என்றது!

கணினி நிரலாளர்கள் இன்னும் சுவாரஸ்யமானவர்கள். “ரொம்ப சிம்பிள்! ஒரு சின்ன பக் தான். ஐந்து நிமிஷத்தில் ஃபிக்ஸ் பண்ணிடலாம்.” என்று சொல்லிவிட்டு, அடுத்த ஐந்து நாட்கள் மானிட்டரையே முறைத்துப் பார்த்துக்கொண்டு முங்கு நீச்சல் அடித்துக்கொண்டிருப்பார்கள்.

அதுபோலத்தான் ஆசிரியர்களும். “இது ரொம்ப சிம்பிள் பாடம்டா. இரண்டே ஃபார்முலாதான்.” என்று சொல்லிவிட்டு, கரும்பலகை முழுக்க, ஒரு இண்டு இடுக்கு பாக்கியில்லாமல் கணக்குகளை கிறுக்கித் தள்ளி வைப்பார்கள். அனுமார் வால் மாதிரி அது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று தெரிவதற்கே, வகுப்புக்கு ஒரு கணக்குப் புலி என்று ஒருத்தன் இருப்பானில்லையா, அவனைத்தான் கேட்க வேண்டும் என்ற நிலையில்தான் நாம் இருப்போம்.

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு துறையில் பல வருடங்கள் கற்று, பயிற்சி பெற்று, வாழ்ந்து அந்தத் துறையின் விசயங்களை முழுதுமாக உள்வாங்கிக்கொள்கிறோம். ஆனால், அந்த நீண்ட அனுபவத்தின்பாற்பட்டு நமக்கு இயல்பாகத் தோன்றும் பல விஷயங்கள், மற்றவர்களுக்கு முற்றிலும் புதியவை என்பதையே மறந்துவிடுகிறோம்.

அதனால்தான், “அது ரொம்ப சிம்பிள்” என்ற வாக்கியம் நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. இங்கே விளக்கம் சொல்பவர் யாருடைய இடத்தில் நின்று யோசிக்கிறார் என்பதுதான் அவருடைய முதிர்ச்சியைக் காண்பிக்கிறது. அதுதான் முக்கியம். நல்ல ஆசிரியர்கள், நல்ல எழுத்தாளர்கள், நல்ல பேச்சாளர்கள் ஆகியோரின் சிறப்பே இதுதான். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த இடத்திலிருந்து பேசுவதில்லை. கேட்பவருக்குத் தெரிந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். அதனால்தான் மிகக் கடினமான விஷயங்கள்கூட சொல்லுபவர்கள் சொன்னால் நமக்கு ரொம்ப சிம்பிளாகப் புரிந்துவிடுகிறது.