ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தபோது, அவர்கள் வீட்டுக் கழிவறைக்குள் கிளாஸட் அருகே சிறியதான ஸ்கிரிப்ளிங் பேட் (Scribbling Pad) ஒன்று இருந்ததைக் கவனித்தேன். கழிவறைக்கு ஃபோன் கொண்டுபோகிறவர்களைப் பார்த்திருக்கிறோம், பேப்பர் மற்றும் வார இதழ்களைக் கொண்டு செல்பவர்களையும் பார்த்திருக்கிறோம். ‘என்னங்க இது குறிப்பேடு?’ என்று அவரைக் கேட்டால், ‘என்ன செய்யச் சொல்கிறீர்கள், காலங்காத்தால அமைதியாக அங்கே உட்கார்ந்திருக்கும் போதுதான் நல்ல நல்ல யோசனைகள் வருகின்றன. செய்ய வேண்டிய வேலைகள் நினைவுக்கு வருகின்றன, காலைக் கடன்களை முடித்துக் குளித்துவிட்டு வெளியே வருவதற்குள் அத்தனையும் மறந்துவிடுகின்றன. அதனால்தான்!’ என்றார்.
இந்தப் பிரச்சினை அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் இருக்கிறது. உங்களுக்கும் இருக்கலாம். அவ்வளவு ஏன் 23-ம் புலிகேசிக்கும் இதே பழக்கம்தான். கழிவறையில் அமர்ந்திருக்கும் கணநேரத்தில்தான், அவரை வரலாற்றில் இடம்பெறச்செய்வதற்காக, ஒரு கட்டுமான உடற்கட்டு உள்ள உடலோடு, அவரது தலையைச் சேர்த்து வரைந்துவைக்கும் ஒரு யோசனை வந்ததாக அந்தப் படத்தில் சொல்லுவார். நகைச்சுவை ஒருபுறமிருந்தாலும் இதில் உண்மையில்லாமல் இல்லை. அகதா கிறிஸ்டி, வூடி ஆலன் போன்ற எழுத்து, சினிமாப் பிரபலங்களும் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
குளியலறையில் இருக்கும்போது மனித மூளை திடீரென்று வேறொரு தளத்துக்குப் போய்விடுகிறது. புறவுலகின் எவ்விதமான தொல்லையும் இல்லை. மனைவி, பிள்ளைகள், டிவி, ஸ்மார்ட்போன் என எவ்விதப் பரபரப்புமில்லை. பசி, தூக்கம், சோர்வு போன்ற அகவுலகின் பிரச்சினைகளும் கூடக் கிடையாது. மாறாக, இயல்பான காலைச் சுறுசுறுப்பு, தண்ணீர் தலையில் விழுவதால் கிடைக்கும் புத்துணர்வு என நாம் உற்சாகமாக இருக்கிறோம். அதனால், நம் மூளை சின்னச்சின்னதாய் பல ஜன்னல்களையும் திறந்துபோட்டுவிடுகிறது. நேற்று நண்பனோடு சண்டை போடும்போது வந்திருக்க வேண்டிய சரியான வசனம் இப்போது குளிக்கும் போதுதான் தோன்றும். போன வாரம் நடந்த இன்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ’இந்தப் பதிலைத்தான் சொல்லியிருக்கணும்’ என்று தோன்றும். மருத்துவரிடம் நேற்று கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி நினைவுக்கு வரும். இப்படி, இவை மட்டுமல்லாது, பத்து வருடங்களாக மனதை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சம்பவத்துக்கு, அசத்தலான விடை கிடைக்கும். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக நண்பன் ஒருவன் வாங்கிச்சென்ற கடன் ஞாபகத்துக்கு வரும். வேலை செய்பவர்களுக்கு வேலை சார்ந்த தீர்வுகள், புதிய யோசனைகளும் தோன்றலாம்.
இப்படி உலகின் மிகச்சிறந்த வணிகத் திட்டங்கள், சிறுகதைகள், காதல் வசனங்கள், பழிவாங்கும் பதில்கள் எல்லாம் குளியலறையில்தான் பிறக்கின்றன. ஆனால், தலைதுவட்டியபடியே வெளியே வந்ததும் முதலில் ஆடையணிவோம். சட்டைக்கையை மடித்துவிடுவதா, பட்டன் போட்டுக்கொள்வதா என்ற கேள்வி பிறக்கும். மெத்தையில் கிடக்கும் ஃபோனுக்கு ஒரு நோடிபிகேஷன் வரும். பையன் ரிப்போர்ட் கார்டில் கையெழுத்துப் போடச் சொல்லுவான். காலிங் பெல் அடிக்கும், வியாபாரி புளி வேண்டுமா என்று கேட்பார். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கமாட்டார், ‘உங்களுக்கு தெரியாது சார், மேடத்தைக் கேட்டுச் சொல்லுங்க, அப்பதான் போவேன்’ என்பார். மனைவி தரும் காபியைக் குடிப்போம். மனைவி கூப்பிட்டு முட்டை ஆம்லெட் ஒன்று போதுமா என்று உலக முக்கியத்துவமான கேள்வி ஒன்றைக் கேட்பார். அவ்வளவுதான். ஐந்து நிமிடத்திற்கு முன்பு தோன்றிய உலகையே மாற்றப்போகும் ஐடியா, இப்போது எவ்வளவு யோசித்தாலும் நினைவுக்கு வராது.
உலகில் எத்தனைப் பெரிய கண்டுபிடிப்புகள் குளியலறையில் பிறந்தன என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அதைவிட லட்சம் மடங்கு கண்டுபிடிப்புகள் குளியலறையிலேயே பிறந்து, அங்கேயே மறந்துபோயிருக்கும் என்பது மட்டும் உறுதி.