சென்ற வாரம், மகள் படிக்கும் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்குப் போயிருந்தேன். அப்படி ஒன்றும் அது, ஒன் டு ஒன்னாக அமர்ந்து பிள்ளையின் குறைகளையும், சிறப்புகளையும் பேசித் தீர்த்துவிடக்கூடிய சந்திப்பு அல்ல. அரசியல் கட்சி பொதுக்குழு மீட்டிங் போல அனைவரையும் ஒரு ஹாலில் அமர வைத்துவிட்டு, தாளாளர் ஒரு 20 நிமிடம், பிரின்சிபல் ஒரு 30 நிமிடம், சிறப்பு விருந்தினர் ஒரு 40 நிமிடம், பின்னர் ஆசிரியப்பெருமக்கள் என வரிசையாக உரையாற்றுவார்கள். எல்லாம் முடித்துப் பின்னர், விருப்பமிருந்தால் அவரவர் பிள்ளைகளின் வகுப்பாசிரியரை தனியே சந்தித்து உரையாடலாம் என்ற செய்தி தரப்பட்டிருக்கும். நமக்கு வகுப்பாசிரியருடன் பேசலாம் எனும் எண்ணமிருந்தாலுமே கூட இந்த 2 மணி நேர உரை கேட்ட அசதியில், ஆர்வமே வடிந்து வற்றிப்போயிருக்கும். சென்ற ஆண்டு இப்படித்தான் ரொம்ப ஆர்வமாகப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்துவிட்டு, முழு மீட்டிங்கையும் அனுபவிக்க நேர்ந்தது. இம்முறை அந்தத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று பாதியில் எழுந்து ஓடிவிட வசதியாக, பின்வரிசையில் உட்கார்ந்துவிட வேண்டும் எனும் நினைப்பில் போனேன். போன பிறகுதான் தெரிந்தது பின் வரிசையில் ஓரிடம் கூட இல்லை. பின்னாலிருந்து அத்தனை வரிசைகளும் நிரம்பத்தொடங்கி முதல் வரிசையிலேயே என்னை மீண்டும் இருக்க வைத்துவிட்டார்கள். பின் வரிசைகளில் இடம்பிடிக்க அத்தனை அடிதடி. பாவம், எல்லோரும் நம்மைப்போலத்தானே!
நம்மிடையே இரண்டு வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று... முதல் வரிசையில் அமர்பவர்கள். இரண்டு, முதல் வரிசையைத் தவிர்ப்பவர்கள். இது பள்ளிக்கூடத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது, முதல் வரிசையில் இடம்பிடிக்கும் மாணவர்கள் நன்றாகப் படிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகக்குறைவான சதவீதத்தினர்தான். மற்ற எல்லோருமே கடைசி பெஞ்ச் கிடைக்குதோ இல்லையோ, முதல் பெஞ்ச் வேண்டாம் என்போர்தான். கடைசி பெஞ்சில் இடம்பிடிப்பதற்கு சரியான போட்டி வேறு இருக்கும்.
கல்லூரிக்குப் போனாலும் இதே கதை. செமினாருக்குப் போனாலும் இதே கதை. அலுவலக மீட்டிங்குக்குப் போனாலும் இதே கதை. ஒரு ஹாலில் நூறு நாற்காலிகள் இருந்தால், முதல் வரிசையிலிருக்கும் பத்து நாற்காலிகள் நிரம்புவதற்குள் கடைசி ஐந்து வரிசைகளில் ஐம்பது நாற்காலிகள் நிரம்பிவிடும். இதை யாரும் திட்டமிட்டுச் செய்வதில்லை. ஆனால் எல்லோரும் செய்கிறார்கள். ஏன் அப்படி?
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில் அமர்வது என்பது ஒரு பொறுப்பு. நீங்கள் அங்கே அமர்ந்தவுடன், நீங்களே நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகிவிடுகிறீர்கள். பேச்சாளர் என்னவோ உங்களுக்காகத்தான் பேசவே வந்தது போல உங்களையே கண்ணோடு கண்ணோக்கிப் பேசிக்கொண்டிருப்பார். அவர் சிரித்தால் நீங்களும் சிரிக்க வேண்டும். அவர் சீரியஸாக ஏதாவது சொல்லும் போது நீங்கள் சிரித்துவிடக்கூடாது. அதற்கு அவர் என்னத்தை அப்படி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை கூர்ந்து கவனித்தாக வேண்டும். அரங்கிலிருக்கும் வேறு யாருக்கும் இல்லாத இந்தத் தொல்லை உங்களுக்கு மட்டும் இருக்கும். போரடித்தால் மொபைலைப் பார்க்க முடியாது. அவர் பேசும் அழகில் கொட்டாவி வந்துவிட்டால் நம் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும்.
கடைசி வரிசை அப்படியில்லை. அங்கே ஒரு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கலாம். பிடிக்கவில்லை என்றால் மொபைலைப் பார்க்கலாம். நடுவில் எழுந்து வெளியே போகலாம். தேநீர் குடித்துவிட்டு வரலாம். அப்படியே வீட்டுக்கும் போய்விடலாம். யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். திருமண மண்டபங்களிலும் அதே நிலைதான். காரணம், திருமணத்திற்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு மணமக்களைப் பார்க்க வருவதில்லை. மணமகனின் அப்பா, மணமகளின் தாய்மாமா போன்று யாராவது குறிப்பிட்ட உறவினர்களைப் பார்த்து ‘நான் வந்துவிட்டேன் ஐயா, பிடியுங்கள் மொய்க்கவரை... நான் வந்ததை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்’ என்று சொல்லிப்போகத்தான் வருகிறார்கள். அதற்குக் கடைசி வரிசைதான் சரியானது. முதல் வரிசையில் உட்கார்ந்தால் கேமராமேன்களின் பின்புறத்தைப் பார்த்துக்கொண்டு தேமேவென்று உட்காரத்தான் முடியும். வந்த வேலை முடிந்ததென சட்டென கிளம்பிவிடவும் முடியாது. எழுந்தால் எல்லோரும் நம்மையே பார்ப்பதாக ஓர் உணர்வு ஏற்படும். பந்தி ஆரம்பித்துவிட்ட தகவல் வந்தால், முதல் ஆளாக ஓடிப்போய் இடம் பிடிக்கவும் முடியாது. பின்னிருக்கையில் இருப்பவர்களுக்கு இப்படி எந்தத் தொல்லையும் இல்லை.
மனிதர்கள் பெரும்பாலும் பார்க்கப்படுபவர்களாக அல்ல, பார்ப்பவர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். மேடையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை விட, மேடையைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம். அதே மனநிலைதான் முதல் வரிசை விஷயத்திலும் வேலை செய்கிறது. அது மேடையைப் போலவே காட்சியின் மையம். அங்கே இருக்க பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதன் விளிம்பில் நின்று அதை ரசிக்கவே விரும்புகிறார்கள். முதல் வரிசையில் இத்தனை இடர்ப்பாடுகள் இருந்தாலும், அது வாய்ப்புகளுக்கான இடம். ஆசிரியரிடம் கேள்வி கேட்பது, பேச்சாளருடன் உரையாடுவது, முக்கியமானவர்களின் கவனத்தில் படுவது போன்றவை எல்லாம் அங்குதான் நடக்கின்றன. அவை நம்மைப் பல வழிகளிலும் மேம்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடியவை என்பதை மறுக்கமுடியாது!
அடுத்த முறை ஏதாவது ஒரு கூட்டத்திற்குப் போகும்போது முதல் வரிசையைப் பாருங்கள். அங்கே அமர்ந்திருப்பவர்களிலும் இரண்டு வகையினர் இருக்கலாம். ஒன்று, நிகழ்ச்சியை உண்மையாக ரசிப்பவர்கள். இரண்டு, கடைசி வரிசையில் இடம் கிடைக்காதவர்கள்.