salman khan  instagram
மருத்துவம்

சாப்பிட முடியாமல் தவிப்பு: சல்மானை மீண்டும் தாக்கியதா ட்ரைஜீமினல் நியூராலஜியா?

மனிதர்களை பலவிதமான விசித்திரமான நோய்கள் தாக்குகின்றன. அதில், இந்த நோயும் ஒன்று. உணவு சாப்பிட்டால் வலி, பல் துலக்க முடியாத அளவுக்கு வலி என இந்த நோய் மனிதர்களை உயிருடன் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடக் கூடியது.

எம். குமரேசன்

சமீபத்தில் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் நடிகர் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் 'என்ன இவர், சல்மான்கானா?' என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். சல்மான் தலையில் தொப்பி அணிந்திருந்தார். முகம் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டது. பலரும் அவரது தோற்றத்தைப் பார்த்து வருத்தமடைந்தனர். சல்மானுக்கு என்ன ஆயிற்று என்றும் கேள்வி எழுப்பினர்.

எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், நோய் என்று வந்து விட்டால் சோர்ந்துவிடுவார்கள்தானே. சல்மான் வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது. கடந்த 2007ம் ஆண்டு சல்மான்கானை ட்ரைஜீமினல் நியூராலஜியா (Trigeminal neuralgia) என்ற விசித்திர நோய் தாக்கியது. இந்த நோய் தாக்கினால் திடீர் திடீரென மின்னல் முகத்தைத் தாக்கியது போன்று வலி ஏற்படும். உணவு சாப்பிட முடியாது. ஏனென்றால், முகத்தில் சிறிய அசைவு ஏற்பட்டால் கூட வலி வந்து விடும்.

இது குறித்து, சல்மான் ஒரு பேட்டியில் கூறுகையில், ''காலை பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடக் கூட ஒரு மணி நேரம் பிடிக்கும். மனதார வயிறு நிரம்பச் சாப்பிட்டு நீண்ட நாட்களாகின்றன. பல ஆண்டுக்காலமாக வலியுடன் வாழ்கிறேன்'' என்று உருக்கமுடன் கூறியிருந்தார்.

மனிதர்களை பலவிதமான விசித்திரமான நோய்கள் தாக்குகின்றன. அதில், இந்த நோயும் ஒன்று. உணவு சாப்பிட்டால் வலி, பல் துலக்க முடியாத அளவுக்கு வலி என இந்த நோய் மனிதர்களை உயிருடன் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடக் கூடியது. முகத்தில், இந்த வலி சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கலாம். முகத்தில் இருந்து மூளைக்கு சிக்னல்களை எடுத்துச் செல்லலும் ட்ரைஜீமினல் நரம்பு பாதிக்கப்படுவதால், இந்த நோய் மனிதர்களைத் தாக்குகிறது. இந்த நோய் வந்தால், முகத்தில் காற்று பட்டால் கூட வலி ஏற்பட்டுவிடும்.

Doctor Rajkumar

இந்த நோய் குறித்து கோவை கே.ஜி மருத்துவமனை நரம்பியல் நிபுணர் ராஜ்குமாரிடத்தில் பேசிய போது, அவர் கூறியதாவது ''இந்த நோய் தாக்கினால் முகத்தில் காற்று பட்டால் கூட வலி ஏற்பட்டுவிடும். இந்த வலி சிலருக்கு 20 விநாடிகள் இருக்கும். சிலருக்கு ஒரு நிமிடம் வரை இருக்கலாம். நாள் ஒன்றுக்கு 10 முறை கூட இந்த வலி வரும். மாத்திரை போட்டாலும், வலி குறையாத நிலையே இருக்கும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தால் , இந்த நோயை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ட்ரைஜீமினல் நரம்பு மூளையில் உருவாகி முகத்துக்குச் செல்கிறது. அருகிலுள்ள ரத்தக் குழாய் இந்த நரம்பு மேல் ஒட்டிக் கொண்டால், அந்த அழுத்தம் காரணமாக, ட்ரைஜீமினல் நரம்பு சேதமடைந்து விடும். இந்த அழுத்தம் காரணமாகவே முகத்தில் திடீர் திடீரென வலி ஏற்படுகிறது.

இந்த நோயை மருந்து, மாத்திரையால் குணப்படுத்துவது கடினம். இதற்கு, ஒரே நிரந்தரத் தீர்வு... மூளையில் சின்னதாக ஒரு அறுவை சிகிச்சை செய்வதுதான். அறுவை சிகிச்சை செய்து, நரம்பையும் , ரத்தக் குழாயையும் பிரித்துவிட்டால், உடனடியாக வலி போய் விடும். மயக்கம் தெளிந்தவுடனே நோயாளிகள் சாதாரணமாகி விடுவார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. அதுவரை வலி இருந்ததால் சாப்பிட மாட்டார்கள். முகம் மலர்ந்து, சிரித்துப் பேசக்கூடப் பயப்படுவார்கள். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்தவுடனே, நோயாளிகள் முகத்தில் சிரிப்பு வந்து விடும். அறுவை சிகிச்சை நடந்த மூன்றாவது நாளே டிஸ்சார்ஜ் செய்து விடுவோம்.

இந்த நோய் வந்தால், பயம் காரணமாக பலரும் மருத்துவர்களை அணுக மாட்டார்கள். இது, குணப்படுத்த முடியாத வியாதி கிடையாது. உயிருக்கு ஆபத்தான வியாதி இல்லை. தீராத வியாதியோ, அடுத்தவர்களுக்குப் பரவும் வியாதியும் கிடையாது. முகத்தில் மின்னல் மாதிரி வலி வருகிறது அல்லது பல்லுக்குக் கீழே தாங்க முடியாத வலி என்றாலே, உடனே நரம்பியல் நிபுணர்களை அணுகி விட வேண்டும். ஆரம்பக்கட்டத்திலேயே வந்து விட்டால், அறுவை சிகிச்சை செய்து, நரம்பையும், ரத்த நாளத்தையும் எளிதாகப் பிரித்து விடலாம். இந்த அறுவை கிசிச்சை செய்துவிட்டாலே, வாழ்நாள் முழுவதும் வலி இல்லாமல் வாழலாம். சிரிக்க பயந்தவர்களை, மெய்மறந்து சிரிக்க வைத்து விடலாம் '' என்றார்.

நடிகர் சல்மான்கான் ஃபிட்னெஸ்சுக்கு பெயர் போனவர். 60 வயதானாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். அப்படியிருந்தும், இந்த விசித்திர நோய் அவரை உருக்குலைத்துள்ளது பாலிவுட்டில் வட்டாரத்தில் , சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.