உடலால் உணவை ஆற்றலாக மாற்ற இயலாத போது, நீரிழிவு நோய் மனிதர்களுக்குள் உருவாகிறது. இன்சுலின் என்பது நமது உடலிலுள்ள செல்களுக்கு குளுக்கோஸைக் (ஆற்றலாகப் பயன்படுத்தப்படும் சர்க்கரை) கொண்டு செல்லும் ஒரு முக்கியமான ஹார்மோன் ஆகும். நீரிழிவு நோய் இருக்கும்போது, உடல் இன்சுலினை உற்பத்தி செய்வதில்லை. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது.
கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள் அழிக்கப்படும்போது முதல்வகை நீரிழிவு நோய் உருவாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்குப் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய, தினசரி இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய அவசியம் இருந்தது. தற்போது, வாரத்துக்கு ஒரு மறை ஒரு ஊசி செலுத்தும் மருந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவிக்லி (Awiqli ) என்ற பெயரில் டென்மார்க்கைச் சேர்ந்த நோவா நார்டிஸ்க் (Novo Nordisk ) நிறுவனம் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதான், உலகில் வாரத்துக்கு ஒருமுறை இன்சுலின் உற்பத்திக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மருந்து ஆகும். ஒரு வாரத்துக்கு இந்த மருந்து தொடர்ந்து நமது உடலில் வேலை செய்யும். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் வாரத்திற்கு ஒருமுறை இந்த மருந்தைச் செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 365 முறை செலுத்தப்படும் இன்சுலின் ஊசிகளின் எண்ணிக்கையை 52 ஆகக் குறைத்து விடுகிறது.
இன்சுலின் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் தேங்குவதைத் தடுத்து, ரத்த ஓட்டத்திலிருந்து செல்களுக்குள் நகர்த்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறையும், சில சமயங்களில் ஒரு நாளைக்குப் பல முறையும் இன்சுலின் ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நிலை, இந்த ஊசியின் வரவால் மாறியுள்ளது.
முக்கியக்குறிப்பு: எந்த மருந்து, ஊசி பயன்படுத்தும் முன், முறையாக உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்படி பயன்படுத்தவும்.
700 யூனிட்கள் கொண்ட அவிக்லி மருந்தின் விலை ரூ. 2,611 ஆகும். அதாவது, ஒரு யூனிட்டிற்கு ரூ. 3.73 என்ற விலையில் விற்கப்படுகிறது. தற்போது, சந்தையில் கிடைக்கும் தினசரி இன்சுலின் மருந்துகளின் விலையை விட இந்த மருந்து சுமார் 30 முதல் 40 சதவீதம் மலிவானது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பல நோயாளிகளுக்கு, தினமும் 10 யூனிட்கள் வரை தேவைப்படுகிறது. அத்தகைய, நோயாளிகளுக்கு வாரத்திற்கு 70 யூனிட்கள் இன்சுலின் தேவைப்படும், இதன் வாராந்திர செலவு சுமார் ரூ. 261 ஆகும்.
பல மருத்துவர்களுக்கு இந்தப் புதிய மருந்தின் விலை ஆச்சரியத்தை அளித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த நீரிழிவு நோய் மருத்துவர் ராஜீவ் கூறுகையில், ''சந்தையில் மிகவும் போட்டியுள்ள நிலையில், மலிவு விலையில் ஆவிக்லி மருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. அனைவரும், இந்த மருந்தை எளிதாக வாங்கக் கூடியதாக உள்ளது. இந்த மருந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்கோப்பாக வைத்திருக்கச் சிறப்பாக செயல்படுகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 10.1 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 13.6 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட இளம் வயதினரில் 3 லட்சம் பேருக்கு டைப் 1 சர்க்கரை நோய் தாக்கியுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. லைஃப்ஸ்டைல் காரணமாக வருங்காலத்தில் இளம் தலைமுறையினரிடத்தில் சர்க்கரை நோய்ப் பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.