idly  
உணவு

இட்லியின் தலைநகரம் எது தெரியுமா?

இந்தியாவிலுள்ள ஒரு நகரம் இட்லியின் சுவை மற்றும் வரலாற்றுடன் ஆழமாகப் பிண்ணிப் பிணைந்துள்ளதால், அந்த நகரம் 'உலகின் இட்லி தலைநகரம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

எம். குமரேசன்

தென்னிந்திய உணவு என்றலே முதலில் நினைவுக்கு வருவது அனேகமாக இட்லியாகத்தான் இருக்கும். மென்மையாகவும், சுவையாகவுமுள்ள இட்லி, லட்சக்கணக்கான மக்களின் காலை உணவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. எளிதாக மற்றும் விரைவாக சமைக்க முடியும் என்பதால் , இன்று இந்தியா முழுவதுமே மக்கள் இட்லியை விரும்பி உண்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள ஒரு நகரம் இட்லியின் சுவை மற்றும் வரலாற்றுடன் ஆழமாகப் பிண்ணிப் பிணைந்துள்ளதால், அந்த நகரம் 'உலகின் இட்லி தலைநகரம்' (Idli Capital of the World) என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நமது சென்னைதான் அந்த நகரம்.

சென்னையின் உணவு கலாசாரத்தில் இட்லிக்குள்ள முக்கிய இடத்தின்காரணமாக, சென்னை இத்தகைய பெருமையை பெற்றுள்ளது. 'இன்க்ரெடிபிள் இந்தியா' (Incredible India) இணையதளத்திலும் சென்னையின் உணவு அடையாளங்களில் ஒன்றாக இட்லி குறிப்பிடப்பட்டுள்ளது. காலை, மாலை, இரவு வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் இட்லியை உணவாக எடுத்துக் கொள்ள முடியும்.

அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றைக் கொண்டு புளிக்கவைக்கப்பட்ட மாவை நீராவியில் வேக வைத்தால் சுடசுடத் தயார். பொதுவாக, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து இட்லியை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறப்படும் இட்லி, சென்னை மக்களில் விருப்பமான உணவாக உள்ளது.

பாரம்பரியமான வெள்ளை நிற இட்லியுடன் பொடி இட்லி, ஸ்டஃப்ட் (உள்ளே மசாலா அல்லது காய்கறிகள் நிரப்பப்பட்ட) இட்லி எனப் பல வகைகள் கிடைக்கின்றன. இட்லி மீதான ஆர்வத்தின் காரணமாக பல பரிசோதனை முயற்சிகளும் சென்னையில் நடந்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் 1,000 வகையான இட்லிகளைத் தயாரித்தார். விலங்குகள், எண்கள் மற்றும் பல்வேறு வடிவங்களில் அந்த இட்லிகள் சமைக்கப்பட்டிருந்தன.

idly rice

சென்னையின் 'இட்லி மனிதர் ' என்று அழைக்கப்படும் இனியவன் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி உலக இட்லி தினத்தை முன்னிட்டு, 2000 வகை இட்லிகளை சமைத்து சாதனை படைத்தார். கோவையைச் சேர்ந்த இனியவன், இட்லி மீதுள்ள காதலால் ஆட்டோ டிரைவராக இருந்து, தொழில்முனைவோராக மாறியவர். 'மல்லிப்பூ இட்லி' என்ற பெயரில் சென்னையில் ரெஸ்ட்டாரன்டுகளை நடத்தி வருகிறார். சென்னையில் இட்லியைத் தேடி அலைய வேண்டியதில்லை. தடுக்கி விழுந்த இடமெல்லாம் சிற்றுண்டி நிலையங்கள் முதல் நவீன உணவகங்கள் வரை நகரின் அனைத்து இடங்களிலும் இட்லி தாராளமாக கிடைக்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதுதான் இப்போது இட்லிக்கு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. தமிழ்நாடு விவசாய மாநிலமாக இருந்தாலும் அரிசி தேவையில் தட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது.

தமிழகத்துக்கு ஒட்டுமொத்தமாகத் தேவைப்படும் அரிசியில் 70% வரை மட்டுமே தமிழ்நாட்டில் விளைவிக்கப்படுகிறது. 30 சதவீதம் அரிசி வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில் 75 முதல் 80 லட்சம் டன் மட்டுமே தமிழகத்தில் விளைகிறது.

இந்தச் சூழலில்தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அரிசியின் விலை கிலோவுக்கு குறைந்தபட்சம் 6 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யக் கூடிய தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதாலும், மின் கட்டண உயர்வு, கூலி உயர்வு போன்ற காரணிகளாலும் அரிசி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தின் அரிசி உற்பத்தி 70 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாகவும் குறைந்து போனது. இட்லி அரிசி கிலோ 37 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 41 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ''தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியே காரணம். இனிமேல், தை மாத அறுவைடக்கு பிறகுதான் நெல் வரத்து அதிகமாகும். அதற்குப் பின்னரே, இட்லி அரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் விலை குறையக் கூடும் '' என வியாபாரிகள் கூறுகின்றனர்.