நன்கு பொரித்த சிவப்பு நிற சிக்கன் 65 அனைவருக்கும் தெரியும். காரமான, பொரித்த கோழி இறைச்சியான இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரியாணி பரிமாறப்பட்டாலும், உடன் சிக்கன் 65 கண்டிப்பாக சைட் டிஷ்ஷாக வழங்கப்படும். எலும்புடனோ அல்லது எலும்பு இல்லாமலோ கோழி இறைச்சியைப் பொரித்து வெங்காயம் மற்றும் எலுமிச்சைத் துண்டுகளுடன் சேர்த்து உணவாகப் பரிமாறப்படுகிறது. சைவத்திலும் "பன்னீர் 65" அல்லது "கோபி 65" போன்ற உணவுகளும் விரும்பி உண்ணப்படுகிறது.
இந்தியா முழுவதுமே சிக்கன் 65 மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், ... இந்த சிக்கன் 65 என்ற பெயர் எப்படி வந்தது என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. குழப்பம் ஏற்பட்டு விடும். இந்தியா முழுக்க இந்த சிக்கன் உணவு பாப்புலராக இருந்தாலும் பெயர் காரணம் கேட்டால் பலரிடம் பதில் இருக்காது.
அப்போது, மெட்ராஸாக இருந்த சென்னையில்தான் இந்த சிக்கன் 65 முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழத்தின் அசைவ உணவுக்கு புகழ்பெற்ற ஹோட்டல் ஏ.எம். புகாரிதான் இந்த மொறு மொறு உணவை மக்களுக்குக் கண்டுபிடித்து வழங்கியது. சுவையில் மயங்கிய மக்கள் விரும்பி சாப்பிடத் தொடடங்கினர். இந்த உணவு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1965. இதுதான், சிக்கன் 65 என்று பெயர் சூட்டக் காரணமாக அமைந்தது. வெகு எளிதாக உச்சரிக்கப்படும் இந்த பெயரால், விரைவில் ஆந்திரா, கேரளா , கர்நாடகாவிலும் இந்த உணவு பாப்புலரானது.
அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் கூட்டமாக வரும் நண்பர்கள், சிக்கன் 65 மட்டும் ஆர்டர் செய்து கூல்டிரிங்ஸ் அருந்திக் கொண்டே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த உணவுக்காக மட்டுமே ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
தென்னிந்தியாவில் சிக்கன் 65 பாப்புலரானதையடுத்து, இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் சென்னை புகாரி ஹோட்டலுக்கு வந்து ரெசிபியை கற்றுக் கொண்டு, பரப்பத் தொடங்கினர். ஆனால், சிக்கன் 65 என்ற பெயர் வர பல காரணங்கள் இருப்பதாக மக்கள் நம்பத் தொடங்கினர். 65 நாட்களில் வளர்ந்த கோழியின் கறிதான் சிக்கன் 65 என்றும் என்றும் பலரும் நம்பினர். பெயர் காரணம் அதுவல்ல.1965ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உணவு என்பதால் மட்டுமே இந்த பெயர் வந்தது என்பது மட்டுமே உண்மை.
தற்போது, சிக்கன் 65 பிரியாணி, சிக்கன் 65 ஃபிரைடு ரைஸ், சிக்கன் 65 ரோல், சிக்கன் 65 பிட்ஸா என பல வடிவங்களில் இந்த உணவு மாறியுள்ளது. ஹோட்டல்களில் சர்வதேச உணவு உள்ளிட்ட பல சுவையான உணவுகள் கிடைத்தாலும், மக்கள் முதலில் கேட்பது சிக்கன் 65தான். கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு இந்த உணவு அமர்ந்துள்ளது என்றால் மிகையல்ல. அவ்வளவு ஏன்... மக்கள் மெனு கார்டை பார்க்காமலேயே ஆர்டர் செய்யக்கூடிய ஒரு சில உணவுகளில் சிக்கன் 65 ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.