மனிதர்களுக்கு ஊக்கம் தரும் பானங்களில் தேநீர், காபிக்கு எப்போதுமே முக்கிய பங்கு உண்டு. சமானியன் முதல் மன்னர்கள் வரை தேநீரை விரும்பிக் குடிப்பார்கள். தேயிலையில் பல ரகங்கள் உள்ளன. தேநீர் பண்டைய காலத்தில் இருந்தே மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. கிமு 2737-ம் ஆண்டில் சீனாவின் பேரரசராக இருந்த ஷென்னோங் (Shennong) தேநீரைக் கண்டுபிடித்தார். மன்னர் ஷென்னோங் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் யதார்த்தமாக சில தேயிலை இலைகள் விழுந்துள்ளன. அந்தத் தேயிலை இலைகளை எடுத்து வெளியே போட்டு விட்டு அந்த வெந்நீரைக் குடித்தபோது, சுவை சற்று வித்தியாசமாக இருந்துள்ளது.
மூலிகை மருத்துவரான மன்னர் ஷென்னோங் பின்னர், சில மாற்றங்கள் செய்து தேநீரைக் கண்டுபிடித்துள்ளார். தற்போது, உலகில் ஆண்டுக்கு 7 மில்லியன் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் குடிக்கும் பானமாக தேநீர் கருதப்படுகிறது.
உலகம் முழுக்கப் பல இடங்களில் தரமான தேயிலை விளைகிறது. அவற்றில், விலை உயர்ந்த தேயிலையாகப் பார்க்கப்படுவது 'டா ஹாங் பாவ்' (Da Hong Pao) . சீனாவில் ஃபூஜான் மாகாணத்தில் (Fujian province) வூயி மலைபகுதியின் (Wuyi Mountains) உச்சியிலுள்ள பாறையில் இந்தத் தேயிலை விளைகிறது. இந்த தேயிலைக்குதான் சீனாவில் மவுசு அதிகம். சீனப் பணக்காரர்கள் இந்த டீயை விரும்பிக் குடித்து வந்தனர். இதனால், இதன் விலையும் தங்கத்தை விட அதிகம். கடந்த 2002ம் ஆண்டு இந்த தேயிலை 20 கிராம் ரூ. 25.45 லட்சத்துக்கு ஏலம் போனது. அதாவது, ஒரு கிராம் தேயிலையின் விலை 1.27 லட்சமாகும்.
வுயிஷானின் மலைப் பரப்பில் சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்துள்ளன. சுண்ணாம்புப் பள்ளத்தாக்குகள் மற்றும் சுண்ணாம்புப் பாறைகளில் பெய்யும் மழை, ஓடைகளையும் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகளையும் உருவாக்குகின்றன. இந்த நீர் அலாதியான சுவையைத் தரும் கனிமங்களால் நிறைந்துள்ளது. இந்தத் தண்ணீர் ஓடும் பகுதியில்தான் டா ஹாங் பாவ் தேயிலை செழித்து வளர்கிறது. தாய்ச்செடி என்று அழைக்கப்படும் ஒரே செடியில் இருந்து பறிக்கப்படுவதுதான் டா ஹாங் பாவ் என்கிறார்கள். மொத்தம் 6 தாய்ச்செடிகள் மட்டும்தான் உள்ளன. அதேவேளையில், வுயிஷான் நகரின் பல பகுதிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ரக தேயிலைகளும் கிடைக்கின்றன. இவை, ஒரு கிலோ 100 டாலர்கள் வரை விற்கப்படுகின்றன.
350 ஆண்டுகள் பழமையான இந்த ஆறு தாய்ச் செடிகளில் இருந்து கிடைக்கும் தேயிலைகள் உண்மையிலேயே மிகவும் அரிதானவை. இதனால், 2007-ம் ஆண்டு முதல், தாய்ச்செடிகளில் நல்ல வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, தேயிலைகளைப் பறிப்பதை நிறுத்த சீன அரசு முடிவு செய்தது. எனவே, இப்போது தாய்ச்செடிகளில் இருந்து பறிக்கப்பட்ட இந்த 'டா ஹாங் பாவ்' தேயிலைகள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் தேயிலைப் பறிப்பு பணிகள் தொடங்கும் தினமான மே 1ம் தேதி இந்த தாய்ச்செடிகளின் அருகே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, பாரம்பரிய உடை அணிந்து சீனப் பெண்கள் நடனமாடி, ஆடிப் பாடுவார்கள். ஆனால், இந்த செடிகளில் இருந்து இலைகள் பறிக்கப்பட மாட்டாது.
இந்த தேயிலை ரகத்துக்கு முற்றிலும் ஓய்வு அளிக்கப்பட்டு விட்டது. தேயிலை சுவைக்கும் கலைஞர்கள் சிலரிடத்தில் இந்தத் தேயிலைப் பொடி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் , அவற்றின் விலை உயர்ந்துக் கொண்டே போகிறதாம்.