காலையிலேயே அஷ்மிதாவும் அன்சாரும் தனியே உட்கார்ந்தபடி கேமிராவைப் பார்த்து, ’இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து, இந்த வீட்டுக்குள் நடக்கும் கிசுகிசுக்களை சொல்லப்போகிறோம்’ என்று சொன்னார்கள். அஷ்மிதா ஏற்கனவே அந்த வீட்டுக்குள் கிட்டத்தட்ட அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். இப்போது அதற்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார், அவ்வளவுதான்.
இரண்டு வாரங்களாக வீக்லி டாஸ்க்கில் கவனம் செலுத்தியதால். வீட்டு லீடர் மற்றும் டெமாக்ரசி அறையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தார் பிக்பாஸ். இப்போதும் டெமாக்ரசி அறையை பற்றி பேச்சு வரவில்லை. ஆனாலும் லீடர் தேர்வுக்கான வழிமுறைகள் நடந்தன. சென்ற வாரம் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்த முகேஷ் மற்றும் அன்சாருடன் மூன்றாவதாக ஒரு ஆளை முன்வரச் சொன்னார். வழக்கத்துக்கு மாறாக வினோத், ஜேசன், லட்சுமி பிரியா, அஷ்மிதா, பிருத்வி, தன்யா என்று கூட்டமாக பலரும் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். கடைசியில் ஜனநாயக வாக்கெடுப்பில் லட்சுமி பிரியா போட்டியளாராகத் தேர்வானார். ஆக அன்சார், முகேஷ், லட்சுமி மூவரும் லீடர் போட்டியில் போட்டியிடுவதாக முடிவாயிற்று.
மூவருக்கும் மூன்று நிறப்பூக்கள் கொடுக்கப்பட்டு அவர்களுக்காக மற்றவர்கள் எந்த நிறப் பூக்களை அதிகம் சேகரிக்கிறார்களோ, அவரே இந்த வாரத் தலைவர் என்று முடிவாயிற்று. கிட்டத்தட்ட இதுவே ஒரு அடிதடி டாஸ்க் போலத்தான் இருந்தது. அதன் முடிவில் லட்சுமி வெற்றி பெற்றார்.
அடுத்து முதல் காரியமாக ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. ஏற்கனவே சென்ற வாரம் விஜய் சேதுபதி ஷாப்பிங் சம்பந்தமாகப் பேசும்போது, முனியம்மாவைக் கண்டித்திருந்ததால் அவர் போவதாக முதலிலேயே முடிவாகியிருந்தது. ஆனால் இம்முறை சூப்பர் மார்க்கெட் அல்லாமல் பிளாஸ்மா டிவி மெனுவிலிருந்து சேகரிக்க வேண்டும் என்பதால் முனியம்மாவை இவர்கள் மாற்றியிருந்திருக்கலாம். ஆனாலும் முனியம்மா முன்வர, புது லீடரான லட்சுமியும் அதற்கு மண்டையை ஆட்டினார். ’முனியம்மாவோடு என்னை ஷாப்பிங் அனுப்பி விடாதீர்கள். முனியம்மாவை சமாளிப்பதே எனக்கு ஒரு தனி டாஸ்காக இருக்கும்’ என்று லட்சுமியிடம் முன்ஜாமீன் வாங்கி புத்திசாலித்தனமாக அதிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார் ஷாதிகா. அதனால் முனியம்மாவுடன் அஷ்மிதாவைக் கோத்து விட்டார் லட்சுமி.
ஷாதிகா பயந்தது போலவே, உள்ளே அஷ்மிதா ஒன்றைச் சொல்ல முனியம்மா வேறொன்றைச் செய்து உழப்பிவிட்டுக் கொண்டிருந்தார். கடைசி 100 பாயிண்ட் 200 பாயிண்ட் இல்லாமல் ஆயிரக்கணக்கான பாயிண்ட்ஸ் வித்தியாசத்தில் அதிகமாக ஷாப்பிங் செய்து வைத்து விட்டார்கள். வெளியே இது சம்பந்தமாக, ’அவர்தான் போகிறேன் என்று சொன்னால் உனக்கு அறிவில்லையா? இப்ப முனியம்மா பண்ணிய கூத்துக்கு நாம உப்பில்லாம கஞ்சியை குடிச்சிகிட்டு கிடக்கணுமா?’ என்று கேட்டு லீடரான லட்சுமியை போட்டு உலுக்கி கொண்டிருந்தார்கள் மற்றவர்கள். லட்சுமியில் லீடர்ஷிப்பில் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது! லட்சுமிக்கு அடுத்த தலைவலியையும் முனியம்மாவே கொண்டு வந்தார்.
அடுத்தக் கொஞ்ச நேரத்தில் சாப்பிடுவதற்காக லைனில் நின்றார்கள். காலங்காலமாக ஒரு கிண்ணத்தில் சோற்றை அழுத்தி, அச்சடித்த ஜெயில் சோறு மாதிரி அழகாகக் கொடுத்து, கொஞ்சம் குழம்பையும் ஊற்றுவார்கள். அதிலேயே பஞ்சாயத்துகள் வருவதுண்டு. ஆனால், அதை மாற்றி முனியம்மா, தாராளமாக கையிலேயே எல்லோருக்கும் பறிமாறிக் கொண்டிருந்தார். ஒருவருக்குக் கூடுதலாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போய்க்கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஜேசன் பஞ்சாயத்தைக் கூட்டினார். ஜேசன், லட்சுமியிடம் கேட்க, அதற்கு முனியம்மா குறுக்கே புகுந்து நிறுத்தாமல் பதில் சொல்லிக்கொண்டிருக்க, அதைப்பற்றி ஷாதிகா விளக்கம் சொல்ல, ஜேசன் முனியம்மாவுக்கு பதில் சொல்லவென்று அந்த இடமே கந்தரகோலமாகிக் கொண்டிருந்தது.
அடுத்து இந்த வார நாமினேஷன் நடந்தது. பிக்பாஸ் எல்லா ஆண்டிலும் பொம்மை டாஸ்க் என்று ஒரு அடிதடி டாஸ்க்கைக் கொண்டு வருவார். இம்முறை அது இல்லை என்ற குறையப் போக்க 14 பொம்மைகளை லான் ஏரியாவில் வைத்து, ஒவ்வொரு பொம்மைக்கும் போட்டியாளர்களின் பெயர் கொடுத்து, அந்த பொம்மைக்கு அருகே இருக்கும் பெட்டியில் ஒரு சாக்லேட்டை போட்டு நாமினேட் செய்ய வேண்டும் என்று சொன்னார். வாக்குகள் பரவலாக விழுந்தன. அதில் முனியம்மா, அவினாஷ், முத்தழகி, அஷ்மிதா, பிருத்வி, வினோத், அக்சிதா, ஜேசன் என எட்டு பேர் நாமினேட் ஆனார்கள். முத்தழகி, அஷ்மிதா இருவரில் ஒருவர் அடுத்த வாரம் வெளியேறலாம். பார்ப்போம்.
அடுத்து இன்னொரு அடிதடி டாஸ்க்கான ’நீங்களே உங்களை ரேங்கிங் செய்துகொள்ளுங்கள்’ டாஸ்க் வைக்கப்பட்டது. ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே 1-ம் இடத்துக்காக முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் மழை வந்துவிட்டது, முடிவு என்னாவாயிற்று என்பது நாளை தெரியும்.