BB 10 Tamil Day 55 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 55: வாசனை அடித்தாரா அக்சிதா? #BiggBoss10

நாம் கரிஷ்மாவையும் தன்யாவையும் ஒர்ஸ்ட் என்று தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்பினோமே... இப்போது இப்படி மாற்றிப் பேசுகிறோமே என்று ஒருத்தர் கூட சிந்திக்கவில்லை. விஜய் சேதுபதியும் சரியாக அந்த ரூட்டுக்குத்தான் வந்தார்.

ஆதி தாமிரா

ஒரு வார விடுப்புக்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் மேடைக்கு வந்தார். ஆனாலும், அவருக்கு குரல் இன்னும் சரியாகியிருக்கவில்லை. எக்கச்சக்கமான பணம் விளையாடக்கூடிய கமிட்மென்ட் இது. ஓரளவுக்கு மேல் தாக்குப்பிடிக்க வழியிருக்காது, அதனால் வந்துவிட்டார் போலிருக்கிறது! முதலில் வழக்கம் போல வெள்ளிக்கிழமை எபிசோடைப் போட்டு அதில் ஒன்றுமில்லை என்று காண்பித்துவிட்டு, இன்றைய நிகழ்ச்சிக்கு வந்தார்.

முதலில் முனியம்மா கிளப்பிய பாகற்காய் பிரச்சனைக்கு வந்தார். ஓரளவு சமாளித்து காய்கறிகளை எடுத்துக் கொண்டு வந்த தன்யாவைப் பாராட்டிவிட்டு, ’பாகற்காய் எடுத்துக்கொண்டு வரவில்லை என்று அவ்வளவு குற்றம் சொல்லத் தெரிகிறதல்லவா, அப்படியானால் நீங்கள் போயிருக்க வேண்டியதுதானே? இத்தனை வாரங்களில் ஒரு முறையாவது போயிருக்கிறீர்களா?’ என்று முனியம்மாவுக்கு ஒரு கொட்டு வைத்தார். முகேஷை எழுப்பி, ’பல தடவைகள் நீ போயிருக்கிறாயே? உன்னுடைய அனுபவம் எப்படி?’ என்று கேட்டார் விசே. வழக்கம் போல ஒரு வார்த்தையில் பதில் சொல்லி கடுப்பேற்றிய முகேஷிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டு, ”அது ரொம்ப கஷ்டம் சார்”, ”ரொம்ப டென்ஷனா இருக்கும்”, ”அது ரொம்ப கூலாக இருக்கும்”, ”நான் நல்லா பண்ணிடுவேன்”, ”ரொம்ப டென்ஷனா இருக்காது”, ”நான் நல்லா பண்ணிடுவேன்னு நான் நினைச்சிக்கிட்டிருக்கேன்”, ”இல்ல ஆடு திருடு போகவே இல்லை, அப்படிக் கனவு கண்டேன்” என்று விதவிதமான பதில்களை அவரது வாயாலேயே வரவைத்துக் காமெடி செய்தார். மற்றபடி நாம் எதிர்பார்த்த முனியம்மாவின் ரூல்பிரேக்கிங் பழக்கம் பற்றிய கேள்விகள் எதுவுமில்லை. நாளையும் இருக்க வாய்ப்பில்லை.

அடுத்து மைனர்ஸ் குழுவில் ’யார் சரியாக விளையாடவில்லை?’ என்ற கேள்வியைக் கேட்டார். ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் தேர்வின் போது கேட்கப்படும் அதே கேள்வி. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல முனியம்மாவையும், ஜேசனையும் சொன்னார்கள். நாம் கரிஷ்மாவையும் தன்யாவையும் ஒர்ஸ்ட் என்று தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்பினோமே... இப்போது இப்படி மாற்றிப் பேசுகிறோமே என்று ஒருத்தர் கூட சிந்திக்கவில்லை. விஜய் சேதுபதியும் சரியாக அந்த ரூட்டுக்குத்தான் வந்தார். எல்லோரும் சொல்லி முடித்ததும், ”இங்கே இப்படிச் சொல்லிவிட்டு தன்யாவையும் கரிஷ்மாவையும் எதற்கு ஜெயிலுக்கு அனுப்பினீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டார். யாரிடமும் பதில் இல்லை, வாயில் மண்ணையள்ளிப் போட்டது போல அமர்ந்திருந்தார்கள். தன்யா மட்டும் எழுந்து ’இங்கு எல்லோருமே ஜேசனுக்குப் பெரிய அளவில் பயந்து கொண்டிருக்கிறார்கள். அவரை எதிர்த்து எதையும் சொல்வதற்கு தயங்குகிறார்கள்’ என்ற உண்மையைப் பதிவு செய்தார்.

எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இருக்கும்போது, வினோத் மட்டும் எழுந்து, ”அவன் ஏதாச்சும் சொன்னா நாங்க எல்லாரும் கேட்டுப்போம். நாங்க எது சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். அவ்வளவுதான், மற்றபடி அவன் மீது பயமெல்லாம் கிடையாது சார்” என்று சமாளிக்கப் பார்த்தார். அவருக்கும் ஒரு கொட்டு வைத்து அமர வைத்தார் விசே.

அடுத்து கௌபாய்ஸ் அணியின் ’உணவு வேட்டை’ ஆட்டத்தில் அவிநாஷின் அட்டகாசங்கள் பற்றிய பஞ்சாயத்து வந்தது. டாய்லெட் குப்பைகளைக் கொண்டு வந்து வெளியே கொட்டி முகம் சுழிக்கும்படி நடந்து கொண்ட அவிநாஷை நறுக்கென்று நான்கு வார்த்தை கேட்பார் என்று பார்த்தால், ’பார்க்க நல்லாயில்லை’ என்று சொல்லி அதைப் பொத்துனாப்புல முடித்துவிட்டார் விசே. ’பார்க்க நல்லாயில்லை’ என்று விஜய் சேதுபதி ஒவ்வொரு முறையும் சொல்லும்போது ’இதெல்லாம் அசிங்கமாக இருக்கிறது. இப்படிச் செய்ய வெட்கமாக இல்லையா?’ என்றுதான் தாம் திட்டுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ’ஓ குப்பையை கொட்டியது பார்க்க நல்லாயில்லை போலிருக்கிறது, அடுத்தவாட்டி கேமராவில் பார்க்க நன்றாக இருக்கும்படி குப்பையை கொட்டவேண்டும்’ என்று போட்டியாளர்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளும் அளவுக்குதான் அவரது உணர்வு வெளிப்பாடு இருக்கிறது.

அடுத்து இன்றைக்கான முக்கிய பஞ்சாயத்தான, அக்சிதா வாசனைத் தாக்கிய பிரச்சினைக்கு வந்தார். எப்போதும் எல்லோரிடமும் தாட்பூட் என குதித்துக்கொண்டு, ’உன்னை அடிக்க ஒரு செகண்ட் ஆகாது’ என்று வீரவசனம் பேசும் அக்சிதாவின் முகத்தில் மரணபீதி அப்படியே தெரிந்தது. முதலில், ”மைனர்ஸ் குழு வெளியே வந்து உங்களுடைய உணவுப் பொருட்களை எடுத்து வீணாக்கிக் கொண்டிருந்தபோது, ஒற்றை ஆளாக வாசன் 3 பேரை தடுத்துக் கொண்டிருந்தார். நீங்கள் ஏன் தடுக்கவரவில்லை?” என்று அன்சாரைப் பார்த்து கேட்டார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அன்சார், ”அந்த சமயத்தில் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை சார். நான் பிளாங்க்காகி விட்டேன்” என்று எதையோ சொல்லி சமாளிக்கப் பார்த்தார். ”அதே பிரச்சனையின் தொடர்ச்சியாக, எதிரணியில் இருந்த வினோத்தைப் பார்த்து உங்க குழுவைக் கேள்வி கேட்க உனக்கு வக்கிருக்கிறதா, வகை இருக்கிறதா என்று கேள்வி கேட்டீர்கள்தானே? அந்த வக்கு உங்களுக்கு எங்கே போனது?” என்று கேட்டபோது அதற்கு அன்சாரால் பதில் சொல்ல முடியவில்லை. அதில் பாதிக்கப்பட்ட வினோத்துக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி.

அடுத்து ’அக்சிதா, வாசனைத் தாக்கினாரா?’ என்ற கேள்விக்கு வந்தார். ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அக்சிதா ’நான் தாக்கவே இல்லை’ என்று சொன்னார். ’குக்கர் மூடியை நான் வீட்டுக்குள் எடுத்துப் போகத்தான் கையில் எடுத்தேன்’ என்று சொன்னார். ’அக்சிதாவை ஓடிப்போய் நான் தடுத்தேன்’ என்று முகேஷ் சொன்னார். ஆனால் அது எல்லாமே பொய் என்பதை ஒரு குறும்படம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டது. அதன் பிறகும், ’நான் அடிக்கவே இல்லை, என் நோக்கம் அதுவல்ல’ என்று போராடிப் பார்த்தார் அக்சிதா. உண்மையில் கைதவறி சின்னதாக வலுவற்ற ஒரு அடி வாசன் மீது விழுந்திருக்கிறது. ஆனால், அவரது நோக்கம் அதுவல்ல. இந்த வீட்டுக்குள் அப்படியெல்லாம் யாரும் யோசிக்கவும் முடியாது. ஆனால், இப்படிக் கைகலப்பில் இருக்கும்போது கையில் குக்கர் மூடியை எடுக்கிறோமே, தவறுதலாக அடி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை, அதுதான் பெரிய தவறு.

BB 10 Tamil Day 55

”இப்போ சொல்லுங்க, அக்சிதா வாசனை அடித்தாரா அல்லது அடித்தது போலிருந்ததா?” என்று விசே கேட்கவும், எல்லோரும் ”அடித்தார்” என்று சொல்ல, விக்னேஷ் மட்டும் தங்கை பாசத்தில், ”அடித்தது போலிருந்தது” என்று சொன்னார். அடுத்த எழுந்த பாதிக்கப்பட்டவரான வாசனும், ”அடித்தது போல்தான் இருந்தது” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார். ஆஃப்டர் ஆல் இதெல்லாம் ஒரு விளையாட்டுதான், அவரது நோக்கம் அதுவல்ல என்பது வாசனுக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த இக்கட்டான சூழ்நிலையில், சந்தர்ப்பம் கிடைத்தது என்பதற்காக ஒரு பெண்ணை அதில் மாட்டிவிட்டு அதன் மூலம் ஒரு வெளிச்சம் பெறவும் அவர் விரும்பவில்லை. அவர் வாயிலிருந்து ’அடித்தது போல்தான் இருந்தது’ என்ற வார்த்தைகள் வந்ததுமே, விஜய் சேதுபதி புன்னகைத்தபடி ’வாசனே அப்படிச் சொன்ன பிறகு இதில் நாம் பேசுவதற்கு ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டு இடைவேளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். திரும்பி வந்து அக்சிதாவுக்கு ஏதாவது அறிவுரைகள் சொல்லலாம் என்று நினைத்திருப்பார். ஆனால், அதைச் செய்ய முடியாதபடி ஆக்கிவிட்டது அக்சிதாவின் இடைவேளை பெர்ஃபார்மன்ஸ்!

அந்த இடைவேளையில் ’அது என் நோக்கமில்லை, நான் அடிக்கவில்லை’ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து மயக்கம் போட்டுவிட்டார் அக்சிதா. சரியான சமயங்களில் பெண்கள் இப்படி மயக்கம் போடும் டெக்னாலஜியைப் பத்து சீசன்களாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதால் நமக்கு அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இதனால் மீண்டும் வந்தபோது விஜய் சேதுபதி அவருக்கு அறிவுரை சொல்ல முடியவில்லை. பதிலாக ’உடம்பு பரவாயில்லையா?’ என்றுதான் கேட்க முடிந்தது. ஆனாலும், ’இது இரண்டாவது முறை. உங்களால் வீட்டில் இருக்க முடியுமா அல்லது வெளியே வருகிறீர்களா?’ என்று மறைமுகமாக எச்சரித்துவிட்டுப் போனார். இன்னொரு முறை அக்சிதாவுக்கு மயக்கம் வர வாய்ப்பில்லை.