காலையிலேயே முனியம்மாவின் திருவிளையாடல் ஆரம்பித்தது. மைனர்ஸ் குழுவைச் சேர்ந்த முனியம்மா வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பிக்பாஸ் விதிமுறை. ஆனால் விதிமுறைகளுக்கும் முனியம்மாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர், அவர் இஷ்டத்துக்கு வீட்டுக்குள் வருவது, துணியை எடுத்துச் செல்வது, குளிக்கப் போவது, ஆடை மாற்றிக்கொண்டு மேக்கப் போட்டுக் கொள்வது, அடுத்த குழுவின் ஆப்பிளை எடுத்து உண்பது என்று சகஜமாக உலாவிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து கடுப்பான கௌபாய்ஸ் குழுவினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவினாஷ், முகேஷ், ஷாதிகா மூவரும் கதறிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவினாஷ், ’உங்கள் குழு மெம்பர் செய்வதைக் கேட்பது உங்கள் பொறுப்புதான்’ என்று சொல்லி நேரே வெளியே சென்று மைனர்ஸ் குழுவினர் சமைத்து வைத்திருந்த, உணவுப் பொருட்களை தூக்கிக்கொண்டு உள்ளே வந்து விட்டார். ’முனியம்மா நாங்கள் சொன்னால் மட்டும் கேட்டுவிடவா போகிறார்? அவர் செய்த தவறுக்கு எப்படி இவன் குழுவின் உணவை எடுத்துப் போகலாம்?’ என்று மைனர்ஸ் குழுவினர் கடுப்பாகினர்.
அவர்கள் சார்பாக ஜேசன் போய்ப் பேசி, மீண்டும் உணவுகளை எடுத்துக் கொடுத்தாலும், அந்தப் பெண்கள் அதை வாங்கிக் கொள்ளாமல், ’அவன் நாங்கள் சாப்பிடக்கூடாது என்றுதானே இப்படிச் செய்தான். அப்படியே நாங்கள் சாப்பிடாமலிருக்கிறோம். ஆனால், அவன் எப்படி எங்கள் ஏரியாவுக்குள் வந்தானோ, அப்படியே நாங்கள் போய் அவர்கள் ஏரியாக்குள் உட்காருவோம்’ என்று சொல்லிவிட்டு எல்லா பெண்களும் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டனர். எல்லாவற்றுக்கும் காரணமான முனியம்மா வந்து, ”என்னாங்கடி விதியை மதிக்காமல் உள்ளே வந்து உக்காந்திருக்கீக? வாங்க வெளியே போவோம்” என்று அந்தப் பெண்களைக் கூப்பிட்டபடி இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்ததுதான் இதில் பெரிய வேடிக்கை.
இந்த முனியம்மாவுக்கு ரூல்ஸ் பிரேக் செய்வது, அதன் மூலம் யாரிடமாவது வம்பிழுப்பது, எதிராளி கொதித்துக் கொண்டிருக்கும் போது அப்படியே அமைதியாகி, வேறு யாராவது ஓர் இளிச்சவாய் பிரச்சினைக்குள் வருகிறார்களா என்று காத்திருப்பது, அப்படி இன்னொரு ஆள் தலையிட்ட பின், அது மற்ற இருவரின் பிரச்சனையாக மாற்றிவிடுவது இதுதான் வேலையே! பிறகு நைஸாக அதற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல விலகிப் போய் விடுவார். வீக்கெண்டில் விஜய் சேதுபதி வந்து கேட்டாலும், ”எனக்கு ஒன்றுமே தெரியாதுண்ணே, நான் ஒரு கிராமத்து பொம்பளை! எனக்கு தெரிந்ததைச் செய்கிறேன்.” என்று அப்பாவி போல நடித்து ஒப்பேற்றி விடுகிறார். அவருக்கும் இவரை என்ன செய்வது என்று தெரியவில்லை.
அடுத்து இன்றைக்கான விளையாட்டாக ஒரு சிறிய கால்பந்து விளையாட்டைக் கொண்டு வந்தார்கள். பந்தைக் காலாலோ, கையாலோ தொடக்கூடாது; கொடுக்கப்பட்டுள்ள ஓர் அட்டையை வைத்து விசிறி அந்தக் காற்றின் மூலமாக பந்தைக் கொண்டு போய் கோல் போட வேண்டும். இரண்டு குழுக்களிலிருந்தும் ஐந்து பேர் உள்ளே புகுந்து குழப்படி செய்து கொண்டிருந்தார்கள். ஒருவராவது பந்தை நகர்த்தி கோல் போடுவது போல தெரியவில்லை. பதிலாகப் பந்தை தட்டி விட்டு எதிரணியினருக்குதான் பெனால்டி பாயிண்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பந்து உலக கோப்பையில் கூட வீரர்கள் இத்தனை சீரியஸாக விளையாடுவார்களா என்று தெரியவில்லை, கொஞ்ச நேரத்தில் இவர்களுக்குள் அத்தனைக் கொந்தளிப்புகள், அடிதடிகள், ஏமாற்று வேலைகள் எல்லாம் நடந்தேறின.
வழக்கம் போல அவினாஷும், அக்சிதாவும் மூர்க்கத்தனமாக விளையாண்டார்கள். ஆண், பெண் வித்தியாசம் இன்றி அவினாஷ் அனைவரையும் இடித்துத் தள்ளியபடி விளையாண்டார். அது போதாது என்று காலையில் தம்மோடு வம்பிழுத்ததால், வெளியில் இருந்த முனியம்மா அவிநாஷைப் பார்த்து, ”என்னடா கோழை மாதிரி முதுகைக் காட்டி ஆடுகிறாய்? வீரனாக இருந்தால் நேருக்கு நேராக விளையாடுடா” என்று கத்தி இயன்றவரை சீண்டிவிட்டுக் கொண்டிருந்தார். இங்கென்ன மல்யுத்தமா நடந்து கொண்டிருக்கிறது, முகத்துக்கு நேராக விளையாட? அதோடு காலையில் சாப்பிடாமல், மூச்சு வாங்க விளையாடிக் கொண்டிருந்த அக்சிதா மயக்கம் போட்டு விழுந்து, மருத்துவர் வந்து பார்க்க வேண்டியதாயிற்று. கடைசியில் இந்தப் போட்டியிலும் கௌபாய்ஸ் அணியே வென்றது.
அதன்பிறகு வீக்லி டாஸ்க் முடித்துவைக்கப்பட்டு, இரண்டு வாரம் கழித்து, பெஸ்ட் பெர்ஃபார்மர்ஸ், ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் தேர்வுகள் நடந்தன. வெற்றி பெற்ற கௌபாய்ஸ் அணியிலிருந்து பெஸ்ட்டாக அன்சாரும், முகேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தோல்வியுற்ற மைனர்ஸ் அணியில் இருந்து தன்யாவும் கரிஷ்மாவும் ஒர்ஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டார்கள். பெஸ்ட் கூட பரவாயில்லை, ஆனால் ஒர்ஸ்ட்டாக விளையாடியது, தன்யா, கரிஷ்மாவை விட அந்தக் குழுவில் இருந்த ஜேசன், முனியம்மா, லட்சுமி பிரியா இவர்கள்தான் என்று நமக்கு தோன்றுகிறது.
அடுத்து எதிர்பாராத விதமாக இன்னொரு மோதல் சம்பவம் நடந்தது. இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லாததால், தன்யாவையும் கரிஷ்மாவையும் சிறையில் போடுவதற்கு ஒருவரைப் பொறுப்பேற்கச் சொன்னார் பிக்பாஸ். அதற்கு அவினாஷ் முன்வந்து, சாவியை எடுத்துக் கொண்டு போய் இருவரையும் ஜெயிலில் போடும்போது, அவர்கள் தலையணை, போர்வை, வாட்டர் பாட்டில் எதுவும் எடுத்துப் போக கூடாது என்று புது விதிகளை விதித்துக் கொண்டிருந்தார். இத்தனை வாரங்களாக எல்லோரும் வாட்டர் பாட்டில், போர்வை, தலையணை எடுத்துக் கொண்டுதான் போகிறார்கள். அதை அந்தப் பெண்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் சேர்ந்து எடுத்துச் சொன்னாலும் அவினாஷ் கேட்கவில்லை. ”அது போன வாரம். இந்த வாரம் நான்தான் இன்சார்ஜ். என் இஷ்டப்படிதான் நடக்கும்” என்று வம்பிழுத்துக் கொண்டிருந்தார்.
பிருத்வியும் வாசனும் ”ஏன்டா இந்த அநியாயம் பண்றே?” என்று மல்லுக்கு நின்ற போது, கோபப்பட்டு சாவியை தூக்கி வீசிவிட்டு போனார் அவினாஷ். அதை வாசன் எடுத்துக்கொண்டார். ஆனால் அடுத்த நிமிடமே ’சாவியைத் தூக்கி வீசிவிட்டோமே, எடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்று வீக்கெண்டில் வைத்துக் கும்மிவிடுவார்களோ’ என்று பயந்து போன அவினாஷ் மீண்டும் வந்து வாசனிடம் சாவியை கேட்க, ’அதுதான் சாவியை வீசிவிட்டுப் போய்விட்டாயே, போடா தரமுடியாது’ என்று சொல்ல, இருவரும் அடிக்க வருவது போல மோதிக்கொண்டார்கள். கையைப் பிடித்து தடுத்த வாசனைக் ’கையைப் பிடித்து முறுக்கிவிட்டான்’ என்று சொல்லி அவினாஷ் சிக்கலை திசை திருப்பி விட்டுக் கொண்டிருந்தார். இந்த சீசனில் எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் மிக மோசமான ஆட்களாக இருக்கிறார்கள். ஏற்கனவே வாசனுக்கு வெளியே பெரிய ஆதரவு இருக்கிறது. மற்றவர்கள் ஆடும் லட்சணத்தைப் பார்த்தால், முன்கோபத்தை மட்டும் அடக்கிக்கொண்டு கவனமாக இருந்தால், இம்முறை வாசன் மிக எளிதாகக் கோப்பையை வென்றுவிடுவார் என்று தோன்றுகிறது.