பாத்ரூம் ஏரியாவில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து அக்சிதா அழுது கொண்டிருந்தார். நேற்று வாசனிடம் வம்பிழுத்து அடாவடித்தனமாக நடந்து கொண்டது, அடிக்க முயன்றது இதைப் பற்றி எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறாரோ என்று நாம் நினைத்தோம். ஆனால் அது அப்படியெல்லாம் இல்லை. நேற்று ஷாதிகாவுடன் பாத்ரூமில் வைத்து நடந்த ஒரு மோதலில், ஷாதிகா அவரைத் திட்டி விட்டதை நினைத்து, ’இதெல்லாம் கேம்தானே, ஒரு கேமுக்காக இப்படியா நடந்துகொள்வார்கள்’ என்று நினைத்து அழுது கொண்டிருந்தாராம். அதை அருகில் வந்த ஷாதிகாவிடமே சொன்னார். ஷாதிகாவும் அதற்காக வருத்தம் தெரிவித்து அவரைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் நாம் யாரிடம் சொல்லி அழுவது என்றுதான் தெரியவில்லை. பிக்பாஸின் புகழ்பெற்ற நடிப்பு அரக்கிகளின் பட்டியலில் அக்சிதாவையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
மற்றொருபுறம் அன்சார், முகேஷைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார். அதுவும் அக்சிதாவின் திருவிளையாடல்தான். நேற்று கௌபாய்ஸ் குழுவினரின் ஏரியாவுக்குள் நுழைந்து உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டபோது அவரை வாசனைத் தவிர வேறு யாரும் தடுக்கவில்லை. குறிப்பாக முகேஷ் எதுவுமே செய்யவில்லை. முகேஷும், மற்றவர்களுக்கும் அக்சிதாவை எந்த விதத்திலும் கண்டிப்பதும் இல்லை, திட்டுவதும் இல்லை. காரணம் அக்சிதாவின் அண்ணன் அவிநாஷின் நட்பு. டாஸ்க்குகளில் அவினாஷ் நன்றாக விளையாடுவதோடு, முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதால் அவரோடு எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்வதைப் போலத்தான் தெரிகிறது.
அவினாஷைப் போலவேதான் ஜேசனும். அவரது பெரிய தோற்றம், கத்தலான பேச்சு, மாக்கிங் செய்யும் குணம் இவற்றுக்கெல்லாம் பயந்து பெரும்பாலும் பெண்கள் யாரும் அவரிடம் குறுக்கிடுவதேயில்லை. நேற்று இரவு ஒரு அரை லிட்டர் பிடிக்கும் அளவுக்கான பெரிய கப்பில் அவருக்கான பாலை எடுத்துக் குடித்தார். மறுநாள் காலை மீதமிருந்த பாலை வைத்து மற்றவர்கள் டீ போட்டுப் பகிர்ந்து கொண்டார்கள். இதைப் பற்றி தன்யா கேள்வி எழுப்பியபோது, ”இப்போது நான் டீ குடிக்கவில்லை அல்லவா, அதனால்தான் நேற்றிரவு எனது பங்கை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டேன். இதிலென்ன தப்பு இருக்கிறது?” என்று சப்பைக்கட்டு கட்டியதோடு இல்லாமல், தன்யாவைப் பேச விடாமல் மாக்கிங் செய்துகொண்டிருந்தார். முடிந்தவரை தன்யாவும் பேசிப் பார்த்துவிட்டு ஓய்ந்துபோனார். அங்கிருந்த யாரும் அதில் தலையிட்டு ஜேசனைக் எதிர்த்துக் கேட்பதாகவே இல்லை.
போலவே எல்லா விளையாட்டுகளிலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு போய் தோற்று, மைனர்ஸ் அணியை தொடர் தோல்வியில் தள்ளி, இப்படி வீக்காக்கியதும் ஜேசன்தான். இன்று முதலாவதாக சின்னப்பந்துகளை ஸ்ட்ராவினால் உறிஞ்சி எடுத்து சேர்க்கும் விளையாட்டின் போது இந்த விசயமும் தன்யாவால் குறிப்பிடப்பட்டதால் தன்யா மீது காண்டில் இருந்தார் ஜேசன். ”சரி இந்த ஆட்டத்தில் நான் விட்டுக்கொடுக்கிறேன், தன்யாவே விளையாடட்டும். வெற்றி பெற்று நிரூபித்துக் காட்டட்டும்” என்று மிரட்டலாகச் சொன்னார். இவர் யார் விட்டுக் கொடுப்பதற்கு? அதோடு இவர் விளையாடித் தோற்கலாமாம், அடுத்தவர் விளையாடி வெற்றிபெற்று இவருக்கு நிரூபித்துக் காட்ட வேண்டுமாம். இந்தாளைத் தட்டிக்கேட்க உள்ளேயும் யாருமில்லை. விஜய் சேதுபதியும் சரியாகக் கேட்பதில்லை.
இந்த ஆட்டத்திலும் மைனர்ஸ் தோற்றுப் போனார்கள். அடுத்து 5 பேர் வட்டமாக மல்லாக்கப் படுத்துக்கொண்டு கால்களால் ஒரு தண்ணீர் ட்ரேவை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று வைக்கப்பட்ட அடுத்த ஆட்டத்திலும் தோற்றார்கள். குட்டையாக இருக்கிற அக்சிதாவுக்கு எதிராக நெடிதுயர்ந்த ஜேசன் படுத்திருந்தால் என்ன விளங்கும்? கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.
அடுத்து, தொடர் வெற்றி பெற்ற கௌபாய்ஸ் குழுவை வீட்டுக்குள்ளும், தொடர்ந்து தோற்றுக் கொண்டிருந்த மைனர்ஸ் குழுவை வெளியே லானில் தங்கும்படி ஆட்டத்தை மாற்றியமைத்தார் பிக்பாஸ். கூடவே வெற்றிக்குப் பலனாக கௌபாய்ஸ், மைனர்ஸ் குழுவிலிருந்து மூவரை வேலைக்காரர்களாக எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, வினோத், பிருத்வி, ஜேசன் என மூவரையும் கூட்டிக்கொண்டு கத்திக்கூப்பாடு போட்டுக்கொண்டே கௌபாய்ஸ் வீட்டுக்குள்ளே போனார்கள். வரவர இந்த நாய்ஸ் பொல்யூஷன் வேறு அவசியமே இல்லாமல் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது.