வாசன் விதிமுறைகளை மீறி, நீல அணியின் உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை வினோத், ’இது திருட்டு, நீ திருடன்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கடுப்பான வாசன், ’ஓகே, இது திருட்டு தானே... அப்படியானால் ஆனது ஆகிவிட்டது, இன்றிரவு எல்லாவற்றையும் ஆட்டையைப் போட்டு விடுகிறேன்’ என்று கேலி செய்ய, சிவப்பணியில் இருந்த மற்றவர்கள் அதற்கு சிரித்துக் கொண்டிருந்தார்கள். வினோத்துக்கு அது கூடுதல் எரிச்சலைக் கிளப்பியது.
வினோத்தின் கோபத்தைப் பார்த்த வாசன், கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அன்சாரிடம் போய், ’இனி எதையும் எடுக்க மாட்டேன் போதுமா?’ என்று சொல்ல, அவர் ’நீ சொன்னதை என்னைக்குடா ஃபாலோ பண்ணியிருக்க?’ என்று பதிலுக்குக் கலாய்த்தார். போலவே, மதிய உணவு நேரத்தில் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நீல அணியினர் அசைவம் சாப்பிடுவதைப் பார்த்து டெம்ப்ட்டான வாசன், ”அன்சார், உன்கிட்ட கொடுத்த வாக்குறுதியை வாபஸ் வாங்கிவிடலாமா என்று நினைக்கிறேன்” என்று மீண்டும் விளையாட ஆரம்பித்தார். முனியம்மா, ”சரி தம்பி, வா வா வந்து எதையாச்சும் எடுத்துக்கொடு, சாப்பிடலாம்” என்று எழுந்தார். அதற்கு, ”அட நீ வேற என்னை சிக்கல்ல மாட்டிவிடப் பாக்குறியா, விடுக்கா, நான் சும்மா சொன்னேன்” என்று ஃபன் பண்ணிக் கொண்டிருந்தார். போன வாரம் ஆக்ஷன் மோடிலிருந்த வாசன், இந்த வாரம் முழுதும் காமெடி மோடுக்குப் போய் விளையாடிக் கொண்டிருந்தார்.
தன்யா, முனியம்மாவை ’முறுக்கு வேண்டுமா?’ என்று வெறுப்பேற்றியபடியே முறுக்கு தின்றதில் கடுப்பான முனியம்மா, தன்யாவின் மேல் பாய்ந்து முறுக்கைப் பிடுங்குவது, அதன் பின் முறுக்குப் பாக்கெட்டை எடுப்பது, அதை நீல அணியினர் தடுப்பது என ஒரு தள்ளுமுள்ளுக் காட்சி நடந்தது. தன்யா செய்தது தப்பு என்று நாம் ஒரு முடிவுக்கு வருவதற்குள், ”நீங்கள் திருடித் தின்பது உங்கள் ஸ்ட்ரேட்டஜி என்று சொன்னால், இப்படி வெறுப்பேற்றியபடி சாப்பிடுவது எங்கள் ஸ்ட்ரேட்டஜி” என்று இன்னொரு வாதத்தைக் கொண்டு வந்தார்கள்.
அதன் பிறகு, ஜேசன் நீல அணியில் இருக்கும்போது நடந்த ஏதோ ஒரு ரகசியத் திட்டத்தைக் போய், சிவப்பு அணியில் சொல்லிவிட்டார் போலிருக்கிறது. அதைக் கண்டுபிடித்த அஷ்மிதா அந்தப் பஞ்சாயத்தைப் பொது வெளிக்குக் கொண்டு வந்துவிட்டார். இதனால் ஜேசன் இரண்டு அணிக்குமே லாயலாக இல்லை, சோற்றைத் தின்பதற்குத்தான் நீல அணிக்குப் போனார் என்பது எல்லோருக்கும் தெரிந்துபோய்விட்டது. இதில் நீல அணியினருக்கு கடும் அதிர்ச்சி. அதனால் ’நேர்மையற்றவன்’ என்று ஜேசனைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார்கள்.
இதனால் கடுப்பான ஜேசன், ”நான் இப்போது இன்னொரு ரகசியத்தை சொல்கிறேன். நானா நேர்மையற்றவன்? உங்கள் தலைவரும் கூட நேர்மையற்றவன்தான். நான் உண்மையில் நீல அணியை சேர்ந்தவன்தான். குழு பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே வினோத் என்னை கூப்பிட்டு நீ என் அணி. ஆனால், எதிரணிக்கு போய் ஸ்பையாக இரு. தேவைப்படும்போது நான் கூப்பிட்டுக் கொள்கிறேன், வந்துவிடு என்று சொன்னார். ஆனால், பிக்பாஸ் இந்த டாஸ்க்கில் ஒரு குழுவில் எட்டு பேர் இருந்தாக வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டதால், அந்த திட்டம் நடக்காமல் போய்விட்டது. ஆனாலும் நான் சிவப்பு அணியின் டாஸ்க்குகளை மிக நேர்மையாகத்தான் விளையாண்டேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
அது என்ன மாதிரியான டீலிங், அதனால் யாருக்கு என்ன நன்மை நடந்துவிட்டது என்பது ஜேசனுக்கும் புரியவில்லை, வினோத்துக்கும் புரியவில்லை. அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கும், வேலை மெனக்கெட்டு அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும்கூட புரியவில்லை.
ஆனால், அது ஏதோ ஒரு பெரிய குற்றம் என்பது போல வினோத்தை டார்கெட் செய்தார் ஜேசன். வினோத்தும் தன் அணியினருக்கு விளக்கமளிப்பது, தனியே போய் உட்கார்ந்துகொண்டு கண்ணீர் உகுப்பது என்று திரிந்துகொண்டிருந்தார். எந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டாலும், இன்னொரு ஆளை நேக்காக அதில் மாட்டிவிட்டுவிட்டு தப்பி விடுவது ஜேசனுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது.
கடைசியாக இந்த வாரத்தின் இறுதி டாஸ்க்காக டங் டிவிஸ்டர்ஸ் டாஸ்க்கைக் கொண்டு வந்தார்கள். ’யார் தச்ச சட்டை, எங்க தாத்தா தச்ச சட்டை’ என்பது போன்ற வார்த்தை விளையாட்டுகள் நிரம்பிய 18 வாக்கியங்களைக் கொடுத்து, அனைவரையும் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் சொன்னார்கள். ஆட்டம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் 17 பேர் சரியாகச் சொல்லி நம்மையும், பிக்பாஸையும் ஒருசேர அசர வைத்துவிட்டார்கள். அவினாஷ் மட்டும் ஒரே ஒரு வார்த்தையைத் தவறாகச் சொல்லி மாட்டிக் கொள்ள, அதனால் கடைசி போட்டியிலும் சிவப்பு அணி தோற்றுப் போனது. சிவப்பு அணியின் சமையலறை, பர்சனல் பொருட்கள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாவதாக மிச்சம் இருந்த படுக்கை அறையையும் நீல அணியினரால் தடை செய்யப்பட்டது. அதனால் அவர்கள் இன்றும் நாளையும் வெளியே லானில்தான் தூங்க வேண்டும் என்று முடிவாயிற்று.
இந்த வாரம், விஜய் சேதுபதி வந்து பஞ்சாயத்து செய்வதற்கு, வாசன் முகேஷைத் தாக்கியது உட்பட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால், ஆவலாக நாம் விஜய் சேதுபதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அவரது தொண்டை இன்னும் சரியாக வில்லையோ என்னவோ தற்காலிக விடுப்பில் போய்விட்டார் போலிருக்கிறது. அதனால், இந்த வாரம் வரப்போவது ரம்யா கிருஷ்ணன். ரம்யாவுக்கு இந்த நிகழ்ச்சியை ஸ்பாண்டேனியஸாக நடத்தும் அளவுக்கு பேச்சு வன்மை கிடையாது. நிகழ்ச்சி இயக்குனர் ’டாக் பேக்’ மூலமாகக் காதில் சொல்வதை அப்படியே சொல்லி ஒப்பேற்றி விட்டுப் போய்விடுவார். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!