BB 10 Tamil Day 44 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 44:  முனியம்மாவின் சுயரூபம்! #BiggBoss10

”உன் பேச்சைக் கேட்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தால், வெளியே போய் விடுவேன் என்று சொல்கிறாள். அப்படி இல்லை என்று இந்த வாரம் நான் நிரூபிக்கப்போகிறேன்”

ஆதி தாமிரா

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற நீல அணி, லக்சுரி பொருட்கள் பட்டியலில் இருந்து என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் பிக்பாஸ். அதற்காக ’உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா?’ என்று பிக்பாஸே கதறும் அளவுக்கு, பழங்கள், ஐஸ்கிரீம், இனிப்புகள் என்று எல்லாவற்றையும் ஒரு கடை வைக்கும் அளவிற்கு அள்ளிக் கொண்டு வந்தார்கள் நீல அணியினர்.

ஜேசனுடன் நெருக்கமாகப் பழகும் ஒவ்வொருவரும் அந்தந்த வாரங்களிலேயே எவிக்ட் ஆகி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் விதியா அல்லது ஜேசனின் சதியா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. அந்த வகையில் இந்த வாரம் ஜேசனுடன் நெருக்கமாக இருப்பது முத்தழகி. அதைப் பார்த்த ஷமா, ”இந்த வாரம் நீதான் வெளியில போகப் போகிறாய். ஜாக்கிரதை” என்று முத்தழகியை எச்சரித்திருப்பார் போலிருக்கிறது. ஷமா அப்படிச் சொல்வதற்கு ஜேசன் மீது அவருக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட விரோதம்தான் காரணம். ஆனால், அவர் ஏதோ தன்னை அசிங்கப்படுத்தி விட்டது போல நினைத்துக்கொண்டு முத்தழகி ஜேசனிடமே போய் புலம்பிக் கொண்டிருந்தார்.

”உன் பேச்சைக் கேட்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தால், வெளியே போய் விடுவேன் என்று சொல்கிறாள். அப்படி இல்லை என்று இந்த வாரம் நான் நிரூபிக்கப்போகிறேன்”

”வெரிகுட். அப்படித்தான் ஸ்போர்டிவாக இருக்க வேண்டும். நீ ஒரு திறமைசாலி. உன்னால் செய்ய முடியும்”

என்று ஜேசன் சொன்னதற்கு, அழகாக மண்டையை ஆட்டினார் முத்தழகி.

இன்னொரு பக்கம் முனியம்மா எடுத்து வைத்திருந்த ஒரு தட்டு சோறு வீணாகிப் போயிருந்ததை ஷாதிகா கண்டுபிடித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு முதலில், மொட்டையாக ’சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டு விழுந்து விட்டது’ என்று சொன்னார். அதன் பிறகு விசாரிக்கும் போதுதான், ”வண்டு சாப்பாட்டில் விழவில்லை, என் மேல் வந்து விழுந்து விட்டது. நான் போய் சுத்தப்படுத்திவிட்டு வருவதற்குள் சாப்பிடும் விருப்பமே போய்விட்டது. அதனால் பிறகு சாப்பிடலாம் என்று வைத்திருந்தேன். அது வீணாக்கிவிட்டது போலிருக்கிறது. இப்போ என்ன அதற்கு?” என்று கூலாக கேள்வி கேட்டு எல்லோர் வாயையும் அடைத்தார்.

இதே முனியம்மாதான், ”நான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு வேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டிருக்கேன். வேறு எதுவானாலும் பொறுத்துக்கொள்வேன். சாப்பாடு ஒரு பருக்கை வீணானாலும் பொறுக்கமாட்டேன்” என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீரவசனம் பேசியவர். அதோடு சற்று நேரத்தில் மீண்டும் ஒரு பிரச்சினையையும் கிளப்பினார். ஒரு கேரட்டைத் தின்றபடி, ”வெறும் கேரட்டைத் தின்பது சிரமமாக இருக்கிறது” என்று புலம்பிக்கொண்டிருந்த அன்சாரைப் பார்த்து, ”அப்படின்னா திங்காதே” என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால், அப்படிச் சொல்லியபடியே அவரது கையிலிருந்த அந்தக் கேரட்டைப் பிடுங்கி தரையில் வீசிவிட்டார் முனியம்மா. இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று நமக்குப் புரியவில்லை.

இதனால் ஷாதிகா, ஷமா, முகேஷ் என பலரும் அவரை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரையும் சட்டை செய்யாமல் வெறுப்பேற்றுகிற மாதிரி கெக்கெக்கே என்று சிரித்துக் கொண்டிருந்தார். இதைப் பற்றிப் பேசுவதற்காக பக்கத்தில் போன அன்சார் முகத்தில், குக்கரின் விசில் பகுதியிலிருந்து வரும் நீராவியைத் திறந்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார். முனியம்மா அங்கு யாரையும் மதிப்பதுமில்லை. அவர் பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தமும் இல்லை.

BB 10 Tamil Day 44

அடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று நடத்தப்பட வேண்டிய இரண்டு விளையாட்டுகளோடு வந்தார் பிக்பாஸ். முன்னதாக படுக்கை அறையில், கோடு போட்டு இரண்டாக பிரிக்கப்பட்டு அவரவர் இடத்தில் இருந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. சமையலறையில் கேஸ் அடுப்பு ஒரு அணிக்கும், மின்னடுப்பு இன்னொரு அணிக்கும் என்று சொல்லி, யாருக்கு எதுவென்று முடிவு செய்யுங்கள் என்று சொன்னார். அதில் முடிவெடுக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக உடை, பிரஷ், பேஸ்ட், சோப் தவிர்த்த அத்தனை பர்சனல் பொருட்களையும் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்கச் சொன்னார். இந்த வார விளையாட்டுகளில் வெல்லும் அணி, தோற்கும் அணியைக் கட்டுப்படுத்த இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

ஒருவர் பெட்டியை நகர்த்தி வைக்கும்போது கண்ணைக் கட்டிக்கொண்டு, பின்னர் கண்ணைத் திறந்து யார் நகர்த்தியது என்று ஊகிக்க வேண்டும் என்று ஒரு போட்டி வைக்கப்பட்டது. பார்க்க சுவாரசியமாக இருந்த அதில் சிவப்பு அணி வென்றது. இன்னொரு விளையாட்டாக நடந்த டிக்-டாக்-டோ ஆட்டத்தில் நீல அணி வென்று சமன் செய்தார்கள். அடிதடி இல்லாத இரண்டு விளையாட்டுகளும் சுமுகமாக நடந்து முடிந்தன.