முதலில், ’இந்த வார வீக்லி டாஸ்க்காக வீடு இரண்டாக பிரிக்கப்படப் போகிறது, நீல அணி, சிகப்பு அணி என்று இரண்டு குழுக்களாக எல்லோரும் பிரிந்து கொள்ளுங்கள், தலைவரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அணி வெல்ல வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மற்றத் தகவல்கள் போகப்போக சொல்லப்படும்’ என்று தொடங்கிவைத்தார் பிக்பாஸ்!
குழு பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே தலைவர் பொறுப்புக்குப் பலரும் போட்டி போட்டார்கள். வினோத், அவினாஷ், ஜேசன், கரிஷ்மா, பிருத்வி என பலரும் முன்வந்து வாக்களிக்கும்படி கேட்டார்கள். இறுதியில் வினோத் தலைமையில் நீல அணி மற்றும் அவினாஷ் தலைமையில் சிவப்பு அணி என இரண்டு குழுக்கள் உருவாக்கின. ஷமாவும் ஜேசனும் ஒரே குழுவில் இருக்க முடியாது என்று முறுக்கி கொண்ட போது வினோத், ஜேசனை தன் குழுவில் இருந்து வெளியேற்றினார். வினோத்துக்கும் ஜேசனுக்கும் ஏற்கனவே ஒரு வாய்க்காத் தகராறு இருக்கிறது, இதில் இந்தத் தகராறையும் லிஸ்ட்டில் வைத்துக்கொள்வார் ஜேசன்.
அடுத்து வீடு ஒரு பெரிய போர்க்களத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. முதலில் பிக்பாஸ் கொடுத்துவிட்ட சாப்பாட்டை எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன காரணமோ தெரியவில்லை, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வாசன் அவருடைய தட்டில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டுபோய் தனியே வைத்தார். அதைப் பார்த்த லட்சுமி கொதித்துப் போய், ’அவன் எதற்கு சாப்பாட்டைத் தனியே எடுத்து வைக்கிறான்?’ என்று உணவு இருந்த பாத்திரத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு வந்து அவருக்கு அருகே வைத்துக்கொண்டார். பிருத்வி சாப்பிட வந்தபோது, ”அவன் ஏன் அப்படிச் செய்தான்? அதைத்தட்டிக் கேள். அது வரை உன்னைச் சாப்பிடவிட மாட்டேன்” என்று வம்பிழுத்தார். ”நான் எதுக்கு கேட்கணும்? உனக்கு வேணும்னா நீ போய்க் கேக்க வேண்டியதுதானே? எனக்குப் பசிக்குது, உணவைக் கொடு” என்று அவரோடு மல்லுக்கு நின்றுகொண்டிருந்தார் பிருத்வி.
இதனால் கடுப்பான முத்தழகி உட்பட பலரும் லட்சுமியைப் பார்த்து, ”சாப்பிட வர்றவனை சாப்பிடவிடாம தடுக்குறியே, அறிவு கெட்டவளே...” என்று கொந்தளித்தனர். அப்போதும் யார் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், ’வாசனை யாராச்சும் கேட்டீங்களா? என்னை மட்டும் கேட்குறீங்க? என்ன எல்லோரும் ஒருதலைப் பட்சமாக விளையாடுறீங்களா?’ என்பது போல எதையோ உளறிக்கொண்டிருந்தார். அதாவது, வாசன் அவரது உணவை எடுத்துத் தனியே வைத்தது, பிருத்வியை இவர் சாப்பிடவிடாமல் தடுத்ததைவிட பெரிய பிரச்சினையாம்! இந்தச் சிக்கல் சார்ந்து கொஞ்ச நேரம் சம்பந்தமில்லாத பலரும் வளவளவென்று பேசி நம்மைக் கடுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அடுத்து, நீல அணியிலிருந்த பெண்களின் பர்சனல் பொருட்கள் அடங்கிய பையைக் கொண்டு வந்து, சிவப்பு அணி பெண்கள் படுக்கைக்கு அருகே வைத்து பெண்களுக்கிடையே ஒரு சண்டையைப் மூட்டிவிட்டார் ஜேசன். ஷாதிகா, அஷ்மிதா, அக்சிதா மூவரும் கச்சாமுச்சாவென்று கத்திக்கொண்டிருக்க, நமக்கு காதுக்குள் குருவி ரிங்கென்று சுழல்வதைப் போலிருந்தது.
அடுத்து இரண்டு குழுக்களுக்கும் இடையே முதல் விளையாட்டு ஒன்றை ஆடச்சொன்னார் பிக்பாஸ். வழக்கம் போல ஒரு அணி கொடுக்கப்பட்ட பிளாக்குகளை அடுக்கி டவர் கட்ட வேண்டும். எதிரணியினரின் தாக்குதலைத் தடுத்து டவரைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரம் எதிரணியினரின் டவரை பந்தைக் கொண்டு எறிந்து சரிக்க வேண்டும். இதில் வெல்லும் அணிக்கு மட்டும்தான் லக்சுரி பொருட்கள் கிடைக்கும், தோற்ற அணிக்கு அடிப்படை உணவு மட்டும்தான் என்றார் பிக்பாஸ். இது கொஞ்சம் சீரியஸான சிக்கல்தான்.
ஆட்டம் தொடங்கியதுமே, ஜேசன் முரட்டுத்தனமாக விளையாடி, பந்தை எறியும் கவணைப் பிய்த்துப் போட்டார். விதியாவது மண்ணாவது என்பது போலிருந்தது ஒவ்வொருவரின் ஆட்டமும். ஹை டெசிபலில் கத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஜேசன், ஷமாவை அடிப்பது போல மிக நெருங்கிப் போய் கத்த, ஷமா கத்திய கத்தில் அவருக்கு தொண்டையே கட்டிக்கொண்டது. எல்லோரும் ஆட்டத்தை உழப்பிவிட்டுவிட்டார்கள். பிக்பாஸும், ’சரி உள்ளே போங்க, நான் இதையெல்லாம் சரி செய்துவிட்டு கூப்பிடுகிறேன்’ என்று அனுப்பிவைத்தார்.
இரண்டாவது தடவை கூப்பிட்டு, ’5 பேர் மட்டும்தான் இறங்க வேண்டும். அவரவர் இடத்தில்தான் நிற்க வேண்டும்’ என்று இப்போது புதிய விதிகளோடு ஆடச் சொன்னதும் மீண்டும் ஆரம்பித்தார்கள். இம்முறை வாசன் அவர் பங்குக்குக் கவணை உடைத்துப் போட்டார். உடைந்த கவணைப் பிடித்துக்கொள்ள, முத்தழகி 6-வது நபராக உள்ளே வந்ததும், ’அதெப்படி 6வது ஆள் உள்ளே வரலாம்’ என்றபடி நீல அணியில் ஷமா உள்ளிட்டோர் இறங்கி பந்துகளைத் தடுக்க ஆரம்பிக்க மீண்டும் ஒரு பெரிய அடிதடியாகிப் போனது. இந்தக் குழப்பத்தில் ஷமா சொன்ன ஒரு வார்த்தை மியூட் செய்யப்பட்டது. அவர் ஒரு தகாத செய்கை காண்பித்தார் என்று சிலர் பேசிக்கொண்டார்கள், அவர் இல்லை என்றார். ஷமா இப்படியான விளையாட்டுகளை கண்மூடித்தனமாக விளையாடுகிறார் என்றே நமக்குத் தோன்றுகிறது.
இம்முறை ஆட்டம் நிறுத்தப்பட்டு வீட்டுக்குள் போகும் போது, வாசனும், முகேஷும் வார்த்தைகளால் உரசிக்கொண்டார்கள். ’காது கேட்கலைன்னா போய் டாக்டரைப் பாருடா’ என்று முகேஷ் சொன்னார். இதெல்லாம் இந்த வீட்டில் ரொம்ப சாதாரணம். அதுவும் அவர்கள் பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டதன் தொடர்ச்சியான இப்படிச் சொன்னார் முகேஷ். அதற்கு வாசன் கொதித்துப் போய் அவர் மீது அடிப்பதைப் போலப் பாய்ந்து, நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார். முகேஷும் நிலைதடுமாறி கண்ணாடிக் கதவில் மோதிக்கொண்டார். நிச்சயம் வாசன் ’தள்ளினார்’ என்று சொல்வதா என்று தெரியவில்லை. மறைமுக கேமராக்கோணம்தான் நமக்குக் காட்டப்பட்டது. அதை ’அடித்த’ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு காட்சி கடந்த 10 சீசன்களில் நாம் பார்க்கவில்லை. மேலும், ஜேசன், பிருத்வி உள்ளிட்ட ஆண்கள் சிலர், வாசனைப் பிடித்து தடுக்க முயற்சித்தபோதும், அவர் திமிறிக்கொண்டு முகேஷை நோக்கிப் பாய்ந்தது முற்றிலும் தவறு. இது ரெட் கார்டு வழங்கத்தக்க செயல்தான். பார்ப்போம், வீக்கெண்டில் விசே என்ன சொல்கிறார் என்று. டிஆர்பிக்காக, எதையாவது உழப்பி விட்டு அவரை உள்ளே வைத்திருக்கவே செய்வார்கள் என்று தோன்றுகிறது. அத்தனை நடக்கும் போதும், பதிலுக்கு எகிறாமல், கத்தாமல் முகேஷ் அமைதியாக நின்றது சிறப்பு.
கடைசியில், மூன்றாவது வாய்ப்பாக ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட் முறையில் முடித்துவைத்தார் பிக்பாஸ். நீல அணி வென்றது.