பொதுவாக கடந்த வாரத்தில் நடந்த பிரச்சினைகளை முன்வைத்துத்தான் வீக் என்ட் எபிசோடுகளில் விஜய் சேதுபதி பஞ்சாயத்து செய்வார். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடுக்கும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கும் இடைப்பட்ட மதிய உணவு நேரத்தில்கூட ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட்டார்கள். மதிய உணவுப் பிறகு வந்த விஜய் சேதுபதி முதலில் இந்த பஞ்சாயத்து என்னவென்று விசாரித்தார்.
மற்ற நாட்களில்தான் சாப்பாடு நேரத்தில் எக்கச்சக்கமான விதிமுறைகள், பற்றாக்குறைகள், பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். மற்றபடி இந்த வெள்ளி, சனி இரண்டு நாட்கள்தான் பிக்பாஸ் குழுவே சாப்பாட்டை அனுப்பிவைத்து போட்டியாளர்களும் நிம்மதியாகச் சாப்பிடும் நாட்கள். வெள்ளிக்கிழமை வார விடுமுறை ஆதலால், சாப்பிட்டுவிட்டு போட்டியாளர்கள் நன்றாக ஓய்வெடுக்கலாம். சனிக்கிழமை சாப்பிட்டுவிட்டு, நன்கு உடையணிந்துகொண்டு விஜய் சேதுபதியிடம் நாள் முழுக்கப் பேசிக் கொண்டிருக்கலாம். அதன்படி, மதிய உணவு இடைவேளை விடப்பட்டவுடன் லட்சுமி தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிடப் போனார். அப்போது ஷாதிகாவும், முகேஷும் ’எல்லோரும் போய் வரிசையில் நில்லுங்க, நாங்க பரிமாறுகிறோம்’ என்று முன்னே போய் நின்றுகொண்டார்கள். அது பிடிக்காமல், ”இதென்ன புது விதி, இது பிக்பாஸ் கொடுத்தனுப்பும் உணவுதானே, இதை இதற்கு முன்னால் செய்திருக்கிறீர்களா, வீக்கெண்டில் இது அநாவசியம்” என்று கொந்தளித்துவிட்டு தனியே போய் அழுது கொண்டிருந்தார் லட்சுமி.
அதன் பிறகு விசாரிக்கும் போதுதான், அன்று காலை உணவில் கூட முந்திக்கொண்டு முதலாவதாக வந்தவர்கள் அதிக தோசைகளை எடுத்து சாப்பிட்டு விட்டதால் கடைசியாக வந்தவர்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்று ஒரு சிக்கல் உருவானதாக நமக்குத் தெரியவந்தது. அதனால்தான் யாராவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஷாதிகா முன்னே வந்திருக்கிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. இந்த லட்சுமிக்கு உண்மையில் இந்த ஏற்பாட்டின் மீதெல்லாம் கோவம் இருக்க வாய்ப்பில்லை. அவருடைய காண்டு ஷாதிகா மீதுதான். அதைத்தான் இப்படித் திசை திருப்பி விட்டுக் கொண்டிருந்தார். இதையே வேறு யாராவது முன்வந்து செய்திருந்தால் இப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை.
தனியே போய் அழுது கொண்டிருந்த லட்சுமியை எல்லாரும் போய் சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கூட அடங்காமல், ”இதெல்லாம் எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. பிச்சை எடுத்துச் சாப்பிடுவது போல் இருக்கிறது” என்று ஓவராக பில்டப் செய்து கொண்டிருந்தார். அப்படிப் பார்த்தால் அந்த வீட்டில் எல்லோருமே அந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி இதைப் பற்றி விசாரித்தபோது எங்கே நம்மைப்போட்டு வறுத்து விடுவாரா என்று யோசித்த லட்சுமி, ரொம்ப நாசூக்காக அந்தப் பிரச்சினையை திசை திருப்பி விட்டுவிட்டார். அதாவது ’இரண்டு நாட்களுக்கு முன்னர், எல்லோரும் தூங்கிய பிறகு பசிக்கிறது என்று ஜேசன், ஷாதிகா, முகேஷ், சாந்தினி உள்ளிட்ட சிலர் தனியாகச் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். இப்படி உணவு சார்ந்து இந்த வீட்டில் பெரிய ஊழல்கள் நடக்கின்றன’ என்று போட்டுக் கொடுத்துவிட்டார். அவர் நினைத்ததைப் போலவே பிரச்சினையும் திசை திரும்பி விட்டது.
அதை முடித்து வைத்துவிட்டு மற்ற விசயங்களுக்கு வந்தார் விசே. ஜேசன் - அவினாஷ் சண்டையைப் பற்றி விசாரிக்க ஜேசனை எழுப்பியபோது, ஏற்கனவே இந்தச் சிக்கலில் நாம் ரொம்ப ஓவராகப் பேசி விட்டோம், வீக்கெண்டில் நன்றாக மாட்டிக் கொள்வோம் என்று கணித்து வைத்திருந்த ஜேசன், விசே கேட்பதற்கு முன்பாக, நாமே சரண்டராகிவிட வேண்டியதுதான் என்று திட்டமிட்டபடி, ”குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், உன்னுடைய வளர்ப்பு சரியில்லை, பி லைக் அ மேன், இதுவே வெளியே நடந்திருந்தால் நான் யார் என்று காண்பித்திருப்பேன்- இதையெல்லாம் விக்னேஷைப் பார்த்துச் சொன்னேன் சார். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க சார்” என்று விரல்களில் எண்ணியபடியே வரிசையாக ஒப்பித்து விஜய் சேதுபதிக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார்.
அப்படியும் விசே மல்லுக்கட்டியபடி, ”நீங்களே இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வீர்கள். அதன்பின் வீட்டுக்கு வெளியே வந்தால். நான் என்ன பண்ணுவேன் பாருடா என்றும் சொல்வீர்களா? அதை மட்டும் குழந்தைகள் பார்க்கலாமா?” என்று கேட்டதற்கு, ”பார்க்கக் கூடாது சார். சாரி, இனி அப்படி பேச மாட்டேன் சார்” என்றார். ”நீங்க உங்கள பொறுப்பானவரா காட்டிக்கிறீங்களே, ஆனா அப்படி பொறுப்பா நடந்துக்குறீங்களா?” என்று கேட்டதற்கு, ”இல்லை சார், நடக்கல. சாரி, இனி நடந்துக்குறேன் சார்” என்றார். இப்படியான சரண்டர் பதில்கள் எப்போதுமே விஜய் சேதுபதியை எரிச்சலை கிளப்பி மேற்கொண்டு பேச விடாமல் செய்துவிடும். இப்போதும் அப்படியே நடந்தது.
அடுத்து இந்த வார எவிக்சனுக்குப் போனார் விசே! அப்போது எதிர்பாராத விதமாக, ”ராகவின் காயம்பட்ட காலுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது, சமாளித்துக் கொண்டு விளையாடுகிறேன் என்று அவரே விரும்பினாலும்கூட உடல்நலம் முக்கியம் எனும் அடிப்படையில் நாம் அவரை வீட்டுக்குள் வைத்திருக்க முடியாது” என்று சொல்லி ராகவை எவிக்ட் செய்து வெளியேற்றினார்கள். வழக்கம் போல கிடைக்கும் இடத்திலெல்லாம் பெர்ஃபார்ம் பண்ணக் காத்திருக்கும் லட்சுமி, ’நீங்கள் இல்லாமல் இந்த வீட்டில் நான் என்ன செய்யப்போகிறேன் ராகவண்ணா’ என்று கதறியழுதார். அடுத்து இந்தச் சிக்கலால் வழக்கமான வெளியேற்றம் இருக்காதோ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், அதுவும் உண்டு என்று சொல்லி நாம் எதிர்பார்த்தபடியே சாந்தினியையும் வெளியேற்றினார்கள். அதற்கு ஜேசன், சோகத்தோடு தனியாவர்த்தனம் செய்து பெர்ஃபார்ம் செய்துகொண்டிருந்தார்.