BB 10 Tamil Day 40 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 40: 'என் ஏரியாவுக்கு வந்து பாரு' என்று சவால் விட்ட ஜேசன்! #BiggBoss10

தற்செயலாக மழை வந்தபோது மைக்கைக் கழற்றி வைத்துவிட்டு வெளியே போய் நன்றாக நனைந்து குளித்துக் கொண்டிருந்தார் ஜேசன். அதஜ்ப் பார்த்த அன்சார், ”டேய், நீ குளிக்கக்கூடாது என்று தண்டனை கொடுத்தேன். நீ என்னடா ஜாலியா மழையில குளிச்சிகிட்டிருக்க” என்று கேட்டார்.

ஆதி தாமிரா

போலி வைரத்தை விதிமீறலாக ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டே சுற்றிக் கொண்டிருந்த கரிஷ்மா, கடைசியில் வேறு வழி இல்லாமல் கேமராவுக்காக வைக்கப்பட்டிருந்த இடைவெளி வழியாக, டெமாக்ரசி ரூமுக்குள் தூக்கிப் போட்டார். இது என்ன மாதிரியான ஒரு அழுகுணி ஆட்டம் என்று விஜய் சேதுபதிதான் வந்து விளக்க வேண்டும். இப்படி யாரும் போக முடியாத, அவரே நினைத்தாலும் மீண்டும் எடுக்க முடியாத ரூமுக்குள் போடுவதால் என்ன பயன்? பிறகு ஒரு துணியை எடுத்துக் கொண்டு வந்து அந்த வைரத்தை மூடுவது போல தூக்கிப் போட்டார். போலவே, அந்த அறை ஆட்சி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் போது, எப்போதுமே கும்பலாகத்தான் ரூமுக்குள் போவார்கள். முதல் ஆளாக ஓடிப் போனால் கூட யாருக்கும் தெரியாமல் அதை எடுக்க முடியாது. இப்படி எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஒரு வேலையை செய்து வைத்தார் கரிஷ்மா.

வீட்டுக்கு உள்ளே, வைரத்தைத் தேடுகிறேன் பேர்வழி என்று ஜேசனின் படுக்கைக்கு அருகே அவரது துணி, செருப்புகளை எல்லாம் கலைத்துப் போட்டிருந்தார்கள். அது மட்டுமல்ல, வீட்டையே கலைத்துப் போட்டுத்தான் எல்லோரும் வைரத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய பொருட்களும்தான் கலைத்துப் போடப்பட்டிருந்தன. ஆனால், இவருக்கு மட்டும் அவரது துணிமணிகள், செருப்புகள் மீது கை வைக்கக் கூடாதாம். அதற்காக பக்கத்தில் இருந்த அஷ்மிதாவுடன் சண்டைக்குப் போனார். அந்தச் சண்டைக்கு ஊடாக, அவினாஷ் மூக்கை நுழைத்தார். மீண்டும் அவினாஷுக்கும், ஜேசனுக்கும் இடையே ஒரு சண்டை உருவானது.  ஜேசன் ’நான்சென்ஸ்’ என்று திட்ட, அவினாஷ் ’இரிடேட்டிங் ஃபெலோ’ என்று திட்ட, சண்டை களை கட்டியது.

”ஒரு பொருளைத் தேடுவது மாதிரி ஒரு டாஸ்க் அமைந்தால், எல்லோரும் அப்படிதாண்டா தேடுவாங்க. உன் டிரஸை மட்டும் ஏன் தொடக்கூடாதாம்?” என்று அவினாஷ் கேட்டார்.

பதிலுக்கு வீராவேசமாக, ”இனியொரு தடவை என் டிரஸில் கை வைத்துப் பாருடா, அப்ப தெரியும் நான் யாருன்னு” என்று சவால் விட்டதும், உடனே அபினேஷ், ஜேசனின் இடத்துக்குப் போய் அவரது ஆடைகளை எடுத்து படுக்கையின் மேல் விசிறினார்.

அதற்குப் பதிலாக, ”ஓ... என் டிரஸ்ஸை எடுத்து படுக்கை மேல போட்டுட்டியா, அதை மட்டும் எடுத்துட்டு வந்து ஹால்ல தரையில் வீசிப்பாருடா, நான் யாருன்னு அப்ப தெரியும்” என்று சொன்னார். உடனே அவிநாஷ் போய் அந்த ஆடைகளை ஹாலுக்கு எடுத்து வந்து தரையில் தூக்கி வீசினார்.

”ஓ... தரையிலயும் போட்டுட்டியா? இதை மட்டும் இந்த வீட்டுக்கு வெளியில செஞ்சிருந்தா, நான் யாருன்னு உனக்குக் காமிச்சிருப்பேன். இந்த வீட்டுக்குள்ள நடந்ததுனால என்னால ஒன்னும் செய்ய முடியல!” என்று சொல்லிவிட்டு, கோபத்தை அடக்க முடியாமல் ”அக்லி ஃபெலோ, அக்லி ஃபெலோ” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். ”ப்ளே லைக் எ மேன்”, ”உன் வளர்ப்பு சரியில்லை” என்று நடுநடுவே வார்த்தைகளை வேறு விட்டுவிட்டார். இதெல்லாம் ஏற்கனவே அவர் சொல்லி மாட்டிக்கொண்டு வீக்கெண்டில், கண்டிப்புகளும் அறிவுரையும் வாங்கி, இனி அப்படிச் சொல்ல மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்ட விசயங்கள். இதெல்லாம் அவருக்கு மிகப் பழகிய விசயங்கள், மனமார சிந்திக்காத வரையில் இந்தப் பழக்கத்தையெல்லாம் போலியாக திருத்திக்கொள்ள முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகிறது. அதன் பிறகு கொஞ்ச நேரம், தாம் ஏதோ பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டதைப் போல, சோகமாக சுற்றிக்கொண்டிருந்தார்.

அடுத்து, லீடர் என்ற முறையில் அன்சார் இந்த பிரச்சனைக்குள் வந்து, இருவரையும் கூப்பிட்டு வைத்துப் பஞ்சாயத்து செய்தார். ”நீ வளர்ப்பு சரியில்லை என்று சொன்னது தப்பு. அதைப்போலவே நீ அவனது டிரஸ்ஸை எடுத்துத் தூக்கிப் போட்டது தப்பு” என்று தீர்ப்பு சொல்லிவிட்டு அவிநாஷுக்கு, ’நான் அடுத்து சொல்லும்வரை எங்கேயுமே உட்காரக் கூடாது, நின்றுகொண்டேதான் திரியவேண்டும்’ என்றும், ஜேசனுக்கு ’நான் சொல்லும் வரை குளிக்கக் கூடாது’ என்றும் தண்டனை கொடுத்தார். எல்லாவற்றுக்கும் விளக்கம் பேசிக்கொண்டு தெரியும் ஜேசன் அந்த தண்டனை பிடிக்கவில்லை என்றால் ’பிடிக்கவில்லை, வேறு ஏதாவது கொடு’ என்று சொல்லியிருக்கலாம். இத்தனைக்கும் அன்சார் அவரது நண்பர்தான். அதை விட்டுவிட்டு தனியே போய், ’இதெல்லாம் ஒரு தண்டனையா? நான் சமையல் குழுவில் இருக்கிறேன். சமையல் குழுவில் இருந்து கொண்டு குளிக்காமல் இருப்பது கொஞ்சமும் சரியில்லை. இது ஆரோக்கியமில்லை’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்.  

BB 10 Tamil Day 40

அதன் பிறகு, தற்செயலாக மழை வந்தபோது மைக்கைக் கழற்றி வைத்துவிட்டு வெளியே லானில் போய் நன்றாக நனைந்து குளித்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த அன்சார், ”டேய், நான்தான் நீ குளிக்கக்கூடாது என்று தண்டனை கொடுத்தேன். நீ என்னடா ஜாலியா மழையில குளிச்சிகிட்டிருக்க” என்று கேட்க, ”நான் குளிக்கலை. நான் லான்ல சும்மா நிக்கிறேன். மழை அது இஷ்டத்துக்குப் பெய்யுது. நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். ”அப்போ ஏன் மைக்கை போடாம நிக்கிறே?” என்று அன்சார் மடக்க, ”ஓ, ஸாரி” என்று சொல்லிவிட்டும் மைக்கை மாட்டிக்கொண்டு வந்து மழையில் நின்றார். அன்சாருக்கு மண்டை காய்ந்து போனது. பிக்பாஸுக்கும் மண்டை காய்ந்திருக்கும்.

அடுத்து, பட்டப்பெயர் கொடுத்து அசிங்கப்படுத்தும் அடுத்த டாஸ்க் ஒன்றைக் கையிலெடுத்தார் பிக்பாஸ்! கட்டப்பா, பச்சோந்தி, பாம்பு, நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்று விதம் விதமாக விருதுகளைத் தயார் செய்து, ஒருவரை வைத்து இன்னொருவருக்குக் கொடுக்கச் செய்து பிக்பாஸ் அவார்டுகள் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். எதிர்பார்த்தது போலவே சிலர் விருதுகளை மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு போக, தன்யா, கரிஷ்மா, லட்சுமி போன்றோர் விருதுகளை வாங்கிக்கொள்ளாமல் முறுக்கிக்கொண்டு போனார்கள்.