BB 10 Tamil Day 37 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 37:  TTF வாசனை மண்டை காயவிட்ட அக்சிதா, முத்தழகி!  #BiggBoss10

ஏற்கனவே எல்லா நாட்களிலும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்தை வைத்து இடம் பிடிப்பதைப்போல, வாட்டர் பாட்டிலை வைத்துதான் பாத்ரூம் போக, சாப்பிடப்போக என்று எல்லாவற்றுக்கும் இடம் பிடிக்கிறார்கள். பதிலாக ஆளே வந்து உட்கார வேண்டும் என்பது புதிய விதி.

ஆதி தாமிரா

எதிரணித் தலைவராக இருக்கும் முத்தழகி, ”நான் இந்த வாரம் எப்படி விளையாட வேண்டும்? லீடரான அன்சாரிடம் கோபமாக கொள்ள வேண்டுமா அல்லது அன்பாக நடந்து கொள்ள வேண்டுமா?” என்று எதிரணியில் இருந்த ஜேசனிடமே ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனவே மண்டையை கழுவுவதற்கு ஆள் கிடைக்குமா என்று எப்போதும் அலைந்து கொண்டிருப்பவர் ஜேசன். ஆடு கசாப்புக் கடைக்காரனையே நம்புவது போல அவரிடம் போய் தலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த முத்தழகி.

அடுத்து சாந்தினி, இந்த வாரம் முழுதும் ஜேசன் பின்னாலே சுற்றிக் கொண்டிருப்பதை வெளியில் இருந்து நாம் கவனித்ததைப் போலவே உள்ளுக்குள் இருந்து ராகவும் கவனித்திருக்கிறார் போலிருக்கிறது. நல்ல பையனாக சாந்தினியிடமே போய், ”இப்படி இப்படித் தெரிகிறது சாந்தினி. நீ தெரிஞ்சிதான் செய்கிறாயா, தெரியாமல் செய்கிறாயா?” என்று கேட்டார். இந்த விஷயத்தை யார்தான் நேரடியாக ஒப்புக்கொள்வார்கள்? இவரெல்லாம் இதைக் கவனிக்கிற அளவுக்கா நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்ற ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு, ”ராகவண்ணா, நான் இந்த வீட்டிலேயே வந்த முதல் நாளிலிருந்து ஜேசனுடன்தான் நன்றாக கனெக்ட் ஆகியிருக்கிறேன். இப்போதுதான் நீங்கள் கவனிக்கிறீர்கள் போலிருக்கிறது. எல்லாவற்றையும் நான் தெரிந்துதான் செய்கிறேன். யு டோண்ட் ஒர்ரி” என்று சொல்லி ராகவின் வாயை அடைத்து அனுப்பி வைத்தார்.

இன்னொரு பக்கத்தில் உட்கார்ந்து இளம் ஜோடிகளான ஷாதிகாவும், முகேஷும் பேசிக் கொண்டிருந்தார்கள். ”இந்த கேமில் நமக்கு ஏற்படுகிற ஸ்ட்ரெஸ்ஸை போக்குவதற்கு நம்மளுடைய இந்த ரிலேஷன்ஷிப் நமக்கு உதவியா இருக்கணும். அதை விட்டுட்டு ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுனு இது வேற கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்துற மாதிரி ஆகிவிடக் கூடாது. புரியுதா?” என்று வழக்கம்போல ஷாதிகா அவர்களுக்கிடையே இருக்கும் உறவைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அதற்கு வழக்கம்போல முகேஷ் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

பாத்ரூம் செல்வதற்காக, முன்பே வந்து வரிசையில் உட்கார்ந்து இடம் பிடிக்க வேண்டும் என்பது புதிய கிளீனிங் குழுவின் புதிய விதி. மறுநாள் காலையில், எதிரணியில் இருந்து ஷாதிகா, அக்சிதா, ஷமா, முத்தழகி ஆகியோர் வரிசையாக வந்து அதற்காக உட்கார்ந்திருந்தார்கள். முதலில் வந்து உட்கார்ந்திருந்த ஷாதிகாவை, ”நீங்கள் பாத்ரூமுக்குள் போகலாம்” என்று அனுமதித்தார் அஷ்மிதா. அதற்காகவே காத்திருந்தது போல, ஷாதிகா ’ஓகே நன்றி’ என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் போகாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். ’உங்கள் அனுமதிக்காகத்தான் வந்து உட்கார்ந்திருந்தேன். இனி நான் எப்போ போகவேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்’ என்பது ஷாதிகாவின் வாதம். அடுத்து காத்திருந்த முத்தழகியோ ’அப்படியானால் நான் எப்போது போவது?’ என்று வேண்டுமென்றே பிரச்சினையைக் கிளப்பினார். இதெல்லாம் அவர்கள் ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டதுதான்.

அதாவது அவர்கள் ஏற்கனவே எல்லா நாட்களிலும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்தை வைத்து இடம் பிடிப்பதைப்போல, வாட்டர் பாட்டிலை வைத்துதான் பாத்ரூம் போக, சாப்பிடப்போக என்று எல்லாவற்றுக்கும் இடம் பிடிக்கிறார்கள். அதை மாற்றி ஆளே வந்து உட்கார வேண்டும் என்று புதிய விதியைப் போட்டு கடுப்படித்தமைக்கு பழி வாங்கத்தான் இந்த விளையாட்டு. அதன் பின்னர், லீடர் அன்சாரை அழைத்து வந்து இந்த பிரச்சனைக்குப் பஞ்சாயத்து வைத்து, ”இனி முன்பு போல வாட்டர் பாட்டில் அல்லது கர்ச்சீப் போட்டு இடம் பிடித்துக் கொள்ளலாம் ஆள் வந்து உட்கார தேவையில்லை” என்று பிரச்சினையை பேசி முடித்துக் கொண்டார்கள்.

BB 10 Tamil Day 37

அடுத்து வினோத் ஏதோ காமெடி செய்கிறேன் பேர்வழி என்று முத்தழகியைக் கிண்டல் செய்தார். அதற்கு ”எங்கள் எதிர்க்கட்சித் தலைவரை நீங்கள் எப்படி கேலி செய்யலாம்?” என்று நியாயம் கேட்கப் போனார் வாசன். அதுவரை அந்த இடத்தில் இல்லாத முத்தழகி வந்து, ’என்ன பிரச்சனை?’ என்று கேட்க வாசன், ”வினோத் உங்களை டம்மி எதிர்க்கட்சித் தலைவர் என்று பொருள் வரும்படி கேலி செய்தார்” என்று சொன்னார். ”நான் குறிப்பாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை” என்று சொல்லிவிட்டு வினோத் அங்கிருந்து போய்விட்டார். ”அது எப்படி அவர் சொல்லாத ஒரு வார்த்தையை நீங்களாகச் சொல்லலாம்? டம்மி என்பது எவ்வளவு பெரிய கெட்ட வார்த்தை!” என்று வாசனிடம் சண்டைக்குப் போனார் முத்தழகி. ’இது என்னடா வம்பாப் போச்சு? யாருக்கு ஆதரவாக நாம் பேசினோமோ அவரே நம்முடன் சண்டைக்கு வருகிறாரே’ என்ற குழம்பினார் வாசன். இது போதாது என்று முத்தழகிக்கு ஒத்து ஊதிக்கொண்டு அக்சிதாவும் களமிறங்கினார். உண்மையில் அக்சிதாவுக்கு, முத்தழகிக்கு ஆதரவாகப் பேசுவதெல்லாம் நோக்கமில்லை. வெளியே பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் வாசனை எதிர்த்துச் சண்டையிட்டால், அதன் மூலமாக நமக்கும் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும் என்பதுதான் அவரது உள்நோக்கம். இரண்டு பெண்களுமாக சேர்ந்து வாசனை கொஞ்ச நேரம் கடுப்படித்தார்கள். அவரும் முடிந்தவரை மல்லுக்கு நின்றார்.

அடுத்து ’வைரம் திருடும்’ வீக்லி டாஸ்க்கை கொண்டு வந்தார் பிக்பாஸ். வைரத்தின் பக்கத்திலேயே ராப்பகலாக உட்கார்ந்துகொண்டு விளையாட்டைச் சொதப்பிவிடுவார்கள் என்று பயந்தோ என்னவோ, அதனோடு, ’டான்ஸ் மரத்தான்’ வீக்லி டாஸ்க்கையும் சேர்த்துக் கோத்துவிட்டார். அதில் என்னென்ன குழப்படிகளைச் செய்து சொதப்பினார்கள் என்பதை நாளை பார்ப்போம்.