முதல் வேலையாக லீடர் போட்டியிலிருந்த வேட்பாளர்களான அன்சாரும், முத்தழகியும் வாக்காளர்களிடம் தங்களுக்காக விளையாடும்படி கேன்வாஸ் செய்து கொண்டிருந்தார்கள். முனியம்மாவும் அந்தப் போட்டியில் இருந்தார். ஆனால், அவருக்கு லீடராவதில் ஆர்வம் இல்லை. அதனால் தனக்காக விளையாடும்படி அவர் யாரையும் கேட்கவில்லை. முனியம்மாவுக்கு, நாம் ஒவ்வொரு வாரமும் எல்லோரையும் படுத்தி எடுப்பதற்குப் பதிலாக, லீடரானால் நம்மை வைத்துச் செய்து விடுவார்கள் என்ற பயம் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் விரைவில் லீடராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். முத்தழகி ஒருபுறம் எதையோ சொல்லி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அன்சார் இன்னொருபுறம், ’எனது ஆட்சியில் பெண்களுக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கும். சிங்கப்பெண் படையை அமைப்பேன். தவறுகளுக்கு தண்டனைகள் எல்லாம் கடுமையாக இருக்கும்’ என்று சொல்லி தீவிரமாக வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
லீடர் தேர்வுக்காக, முதல் முறையாக அடிதடி இல்லாத ஒரு சாந்தமான போட்டி நடத்தப்பட்டது. தாயக்கட்டையை உருட்டி, தங்களுக்குக் கிடைத்த எண்களை அவர்களுடைய வேட்பாளர்களுக்குக் கொடுத்தார்கள் போட்டியாளர்கள். இந்த முறையில் அன்சார் இந்த வாரத்துக்கான லீடராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அன்சார் நினைத்தது போல முழுக்கவும் பெண்களைக் கொண்டு அவருடைய குழுக்களை அமைக்க முடியவில்லை. ’நான் இருக்கும் போது நீ என்ன தனியே திட்டம் போடுவது?’ என்ற மைண்ட் வாய்ஸுடன் பிக்பாஸ் உள்ளே புகுந்து, ’உங்களுக்காக விளையாடிவார்களை மட்டும்தான் நீங்கள் ஆளும் அணியில் வைத்துக்கொள்ள முடியும்’ என்ற புது விதியைச் சொல்லி, முழுக்க பெண்களை மட்டுமே கொண்ட எதிரணியை உருவாக்கிவிட்டுவிட்டார். போனால் போகிறது என்று அந்த அணியில் ஒரே ஒரு ஆணாக வாசன் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
அதன் பிறகு டெமாக்ரசி அறையில், அன்சார் லீடராக பதவி ஏற்றுக்கொள்ள, எதிரணித் தலைவராக முத்தழகி பதவி ஏற்றார். சமையல் குழுவுக்கு ராகவும், கிளீனிங் குழுவுக்கு அஷ்மிதாவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். வழக்கம்போல வளவளவென்று அவரவர் துறைகளுக்கு புதிதாக சில விதிமுறைகளை சொல்லிவிட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்கள்.
படுக்கை அறையில் முனியம்மா முகேஷையும், பிருத்வியையும் பிடித்து வைத்துக்கொண்டு, ”என்னடா பிக்பாஸ் வேக்கப் பாட்டாக -டூ டு டூ டுட்டூட்டூ-னு டபுள் மீனிங் பாட்டு போடுகிறார். வீட்டுக்குள்ள ரெண்டு காதல் எதுவும் ஓடிக்கிட்டிருக்காடா? என்னடா நடக்குது?” என்று கலாய்த்து கொண்டிருந்தார். அது பார்க்க இயல்பாக இருந்தது.
முனியம்மா சந்தேகப்படுவதைப் போலவே ஷாதிகாவுக்கும் முகேஷுக்கும் நடுவே ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு கதை, பிரித்விக்கும் ஷமாவுக்கும் நடுவே என்று பலரும் சந்தேகப்பட்டாலும், அவர்கள் இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்வதையோ, ஒரு இடத்தில் ஒன்றாக உட்கார்ந்து பேசுவதையோ நம்மால் பார்க்க முடியவில்லை. அவர்களுக்குப் பதிலாக இந்த வாரத்தில் புதிதாக முளைத்திருக்கும் மூன்றாவது ஜோடி, ஜேசன் சாந்தினி! சாந்தினி முதல் ஐந்து வாரங்களாக அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் மறந்து, தனக்கு ஆறுதலாக இருந்த ஜேசன் மீது மொத்த ஈடுபாட்டையும் காண்பிக்க ஆரம்பித்து விட்டார். ஜேசன் எங்கிருந்தாலும், சாந்தினி அவர் பின்னாலேயே போய் ஈஷிக் கொண்டிருந்தார்.
எதிரணியில் இருந்த பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த வாரம் முழுவதும் ஏதாவது பிரச்சனையை கிளப்பவேண்டும் என்று திட்டமிட்டார்கள். அதைக் கேமரா முன்பாக வந்து ”சிலபல குழப்படிகளைச் செய்யப்போகிறோம். இந்த வாரம் என்ன நடந்தாலும் அது உங்களுடைய சுவாரசியத்துக்காகத்தான். இறங்கி ஆடப் போகிறோம். தவறாக நினைக்க வேண்டாம்” என்று சொல்லி ஜாமீனும் வாங்கிக் கொண்டார்கள். இப்படிச் சொல்லிவிட்டுச் செய்த எதுவுமே விளங்கியதில்லை, ஏதாவது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்து இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடந்தது. வாசன், கரிஷ்மா என்று யாரோ தொடங்கி வைக்க, அடுத்து வந்த அனைவரும் அவர்களையே குத்தி வேலையை முடித்து விட்டார்கள். அவர்கள் இருவரும் நாமினேசனுக்குத் தகுதியான நபர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு இரண்டு மூன்று ஓட்டுகள் வந்த உடனேயே ஓட்டுக்களை வீணாக்காமல் மாற்றிக்குத்தி மற்றவர்களையும் உள்ளே இழுத்துப் போட்டிருக்கலாம். அதுதான் இப்படியான ஓபன் நாமினேஷனில் உள்ள வசதியே! ஆனால் அதைச் செய்யாமல், எதற்கு எதிரிகளை அதிகப்படுத்திக் கொண்டே போக வேண்டும் என்ற பயத்தில் இந்த நாமினேஷனை சவசவவென்று ஆக்கிவிட்டார்கள் அனைவரும்! வாசன், கரிஷ்மாவோடு ஓரிரு ஓட்டுகள் வாங்கி, முகேஷ், ஷாதிகா, அக்சிதா, ஷமா, சாந்தினி, அவினாஷ் ஆகியோரும் உள்ளே வந்தார்கள்.
தன்னை நாமினேட் செய்த சாந்தினியை கூப்பிட்டு வைத்துக் கொண்டு, ”நான் அக்ரசிவாக விளையாடுகிறேன் என்று சொல்லி என்னை நாமினேட் செய்தீங்களே, ஜேசன் மட்டும் என்ன சாந்தமாகவா விளையாண்டான்?” என்று கேட்டு மடக்கினார். அதற்குப் பதிலாக, ”இங்கே எல்லோரும் உண்மையைச் சொல்லியா நாமினேட் செய்கிறார்கள்? எல்லோருக்கும் அவரவர்களுக்கென்று ஒரு சொந்தக் காரணம் இருக்கிறது. எனக்கும் அப்படித்தான்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சாந்தினி. சரிதான்.
அடுத்து எதிரணியினர், மீட்டிங்குக்காக லீடரைக் கூப்பிட்ட போது, அவர் அவரது அணியுடன் மீட்டிங்கில் இருந்தார். ”போங்க கொஞ்ச நேரத்தில் வருகிறேன்” என்று தன்மையாகச் சொல்லாமல், ”போங்கம்மா, வர்றேன்” என்று சொன்ன அன்சாரின் பாடி லாங்குவேஜில் கொஞ்சம் திமிர்த்தனம் இருக்கத்தான் செய்தது. ஏற்கனவே எதைப்பிடிக்கலாம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் எதிரணியினர், அந்த விஷயத்தை வைத்து கொஞ்ச நேரம் அவரை டார்ச்சர் செய்தார்கள். கடைசியில் பணிந்துபோனார். இந்த வாரம் முழுவதும் அன்சாரால் இந்தக் குடைச்சலைத் தாக்குப்பிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்.