ஒரு வழியாக இந்த பாட்டில் டாஸ்க் ஒரு முடிவுக்கு வந்தது. தொடக்கத்திலேயே வலுவான டீம்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டதன் விளைவாக, அவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி விட்டார்கள். அதனால் பொத்தினாப்பல விளையாடிக் கொண்டிருந்த முனியம்மா, முத்தழகி குழு யாரும் எதிர்பாராவண்ணம் வெற்றியைப் பெற்றது. கடைசி நாளான இன்றும் யார் யாரோடு கூட்டுச் சேர்ந்து விளையாடுகிறார்கள் என்பதே புரியாமல் கசகசவென்று விளையாடி முடித்தார்கள். இந்த விளையாட்டின் தொடக்கத்தில் ஜேசனின் ஆதிக்கம் கொஞ்சம் இருந்தாலும், போகப்போக எல்லோரும் எல்லோருடனும் மோதிக்கொண்டார்கள். நெருக்கமாக இருந்தவர்கள் சண்டையிட்டு கொண்டதையும், விரோதிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த சிலர், ஒருவருக்கொருவர் உதவி கொண்டதையும் பார்க்க முடிந்தது.
இந்த காரணத்தினால் ஆட்டம் முடிந்ததும் பிக்பாஸ் முதல் முறையாக எல்லோரையும் அழைத்து, ”ஒரு நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமாகப் பார்க்க வேண்டும் என்றால், அதில் விளையாடுபவர்களுக்கிடையே ஒரு ஈடுபாடு, போட்டி மனப்பான்மை, விடாமுயற்சி போன்றவை இருக்க வேண்டும். அது எல்லாவற்றையும் இந்த விளையாட்டில் உங்களிடம் பார்க்க முடிந்தது. இந்த ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சொல்லிப் பாராட்டித் தள்ளி விட்டார். இது ஓரளவுக்கு சரிதான்.
அடுத்து எல்லோரையும் லிவிங் ஏரியாவுக்கு வரவழைத்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற முனியம்மாவும், முத்தழகியும் அடுத்த வாரம் தலைவர் போட்டிக்கு நேரடியாக தேர்வாகிறார்கள் என்றும், அடுத்த வாரம் அவர்களுக்கு நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் இரண்டு பரிசுகளை அறிவித்தார் பிக்பாஸ். அடுத்து இந்த ஆட்டத்தில் இருந்து முதலில் வெளியேறிய வாசன், கரிஷ்மா, தன்யா, சாந்தினி ஆகிய நால்வருக்கும் பெட்ரூம், லான், பாத்ரூம் என யார் எங்கே போனாலும், அனைவருக்கும் கதவைத் திறந்துவிட வேண்டும் என்று தண்டனை கொடுத்தார். அடுத்து இந்த வாரத்தின் ஒர்ஸ்ட் பர்ஃபார்மர்ஸைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக்பாஸ். பலரும் வாசன், கரிஷ்மாவைச் சொன்னார்கள். நமக்குக்கூட கரிஷ்மா வரும் போது பேசியதை வைத்து கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் அவரிடமிருந்து ஒன்றும் பெயரவில்லை!
ஒவ்வொருவரும் தன் பெயரைச் சொல்லச் சொல்ல, வாசன் கடுப்பாகிக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது. எல்லோரிடமும் குறுக்கே பேசிக் கொண்டிருந்தார். உண்மையில் இந்தத் தேர்ந்தெடுப்பினால் ஏற்பட்ட எரிச்சலை விட இதற்கு முன்பாகவே பாட்டில் டாஸ்க் உட்பட எல்லாவற்றிலும் அவரைத் தனிமைப்படுத்த நினைக்கிறார்கள் என்று அவருக்குத் தோன்றுவதால் ஏற்பட்ட எரிச்சல் அது. வாசனைச் சொன்னதற்குக் காரணமாக, ”வாசனுக்கு இந்த பிக்பாஸ் விளையாட்டு புரியவில்லை. எதுவாக இருந்தாலும் விளக்கம் கேட்கிறார். நாங்க பல தடவைகள் சொன்னாலும் பயனில்லை” என்று பலரும் சொன்னார்கள். அதற்கு, பேச வருபவர்களைப் பேசவிடாமல் எழுந்து நின்றுகொண்டு, ”ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் தெரிந்து கேட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இந்த வாரத்தோட ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்றுதானே பிக்பாஸ் சொல்லச் சொன்னார்? இப்படி விளக்கம் கேட்பதெல்லாம் ஒர்ஸ்ட் பர்ஃபார்மரில் வருமா?” என்று அதற்கும் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார் வாசன். அவர்கள் எல்லோரும் இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருப்பது இதைத்தான் என்பதை அவரே நிரூபித்துக்கொண்டிருந்தார். அதோடு அவரது கோபத்தை ஷமாவின் மீது காண்பிக்க முயற்சி செய்து திமிராகப் பேசியதும் நன்றாக இல்லை.
அடுத்து லீடர் தேர்வுக்குத் தேவைப்படுகிற மூன்றாவது ஆள் ஒருவர் விண்ணப்பிக்கலாம் என்று பிக்பாஸ் சொன்னபோது வினோத், ஜேசன், அன்சார் மூவரும் எழுந்து வந்தார்கள். வாக்கெடுப்பின்படி அன்சார் தேர்ந்தெடுக்கப்பட்டார். நமக்கென்னவோ அன்சார், முனியம்மா, முத்தழகி மூவரிலிருந்து, அடுத்த வாரம் முனியம்மாவை லீடராகத் தேர்ந்தெடுத்து, எல்லோரும் வைத்துச் செய்யப்போகிறார்கள் என்று தோன்றுகிறது.
அடுத்து இத்தனை வாரங்களாக போட்டியாளர்களுக்கு இடையே போட்டி, பொறாமை, கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் வண்ணம் டாஸ்க்களை வைத்து கோள்மூட்டிக் கொண்டிருந்த பிக்பாஸ், முதல் தடவையாக கொஞ்சம் சென்டிமென்ட் கண்டெண்டைத் தேத்தலாம் என நினைத்து; ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களுக்கு பிடித்த இன்னொரு போட்டியாளருக்கு அவர்களை ஏன் பிடிக்கும் என்பது குறித்துப் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு மொட்டைக் கடிதத்தை எழுத சொன்னார். எல்லோரும் யாருக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் கொஞ்சம் நேரம் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் எழுத ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் ஷாதிகா, கேமராவை பார்த்து,
”அப்பப்ப இந்த மாதிரி நல்லவிதமாகவும் டாஸ்க் கொடுங்க பிக்பாஸ். எப்பப்பாத்தாலும் யாரு என்ன தப்பு பண்றா? யாரு உங்களுக்கு பிடிக்கலை? யாரை எப்படிக் கவுக்கலாம்னு யோசிக்கிற மாதிரியே டாஸ்க் கொடுத்து, அப்படியே அதுக்கு டியூன் ஆகிப்போய் இப்பப்பாருங்க, ஒருத்தர்கிட்ட இருக்கிற நல்ல விசயத்தைப் பத்தி யோசிக்கக்கூட முடியவில்லை” என்று வெளிப்படையாகவே கேட்டுக் கலாய்த்துவிட்டார். பதிலுக்கு, ”இல்லைன்னா மட்டும் அப்படியே... செஞ்சுடுவீங்களாக்கும்” என்று பிக்பாஸ் கலாய்க்க, ஷாதிகா வெட்கப்பட்டுக்கொண்டே ஓடியது பார்க்க நன்றாக இருந்தது.
எழுதப்பட்ட எல்லாக் கடிதங்களும் எழுதப்பட்டவர்களுக்கு நெகிழ்ச்சியைக் கொடுத்தன. அந்த உணர்வுகள் பெரும்பாலும் உண்மையாகத்தான் இருந்தன. பலரும் கண்ணீர் விட்டுக்கொண்டார்கள். அன்சாருக்கு முனியம்மாவும், ஷாதிகாவுக்கு முகேஷும், பிருத்விக்கு ஷமாவும் எழுதியிருந்தது போல ஒரு சிலர் எழுதியதை மட்டும் சரியாகக் கணிக்க முடிந்தது.