BB 10 Tamil Day 32 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 32:  கலவரத்தை ஏற்படுத்திய முத்தழகி! #BiggBoss10

”இந்த மாதிரி ஏமாத்தி கேம் விளையாடுறதெல்லாம் கொஞ்சமும் நல்லாயில்லை” என்று கத்திவிட்டுப் போனார். ’நாம் என்னத்தை ஏமாற்றி விட்டோம் என்று இவன் இப்படிக் கத்திவிட்டுப் போகிறான்’ என்று அன்சாருக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆதி தாமிரா

பாட்டில் டாஸ்க்கின் மூன்றாவது நாள் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்றைய எபிசோடு தொடக்கத்திலேயே முத்தழகி ஒரு காரியத்தைச் செய்தார். அது அடுத்த கொஞ்ச நேரத்துக்குள் ஒரு பெரிய கலவரமாகி வீட்டையே புரட்டிப் போட்டுவிட்டது. அதாவது அன்சார்- ஷாதிகா ஜோடி அந்த ரவுண்டிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மற்றவர்கள் பிளாக்கை எடுக்கவோ, அவர்களிடமிருந்து மற்றவர்கள் பிளாக்கை எடுக்கவோ முடியாது. அதனால், முத்தழகி தன்னிடமிருந்த சில பிளாக்குகளை கொண்டு போய் அவர்களது மேடையில் வைத்து, இந்த ரவுண்டில் பாதுகாத்துவிடலாம் என்ற ஐடியாவோடு அங்கு கொண்டு போய் வைத்தார். அன்சாரும் முதலில் முத்தழகி தமக்கு பிளாக்குகளை தருகிறார் என்று நினைத்துக் கொண்டு அதை அனுமதித்தார். ஆனால், தூரத்திலிருந்து வினோத் சொன்னவுடன், ’ஆமா, நாங்க நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் எப்படி விளையாடக்கூடாதோ, அதேபோல எங்களை வைத்து மற்றவர்களும் விளையாடக்கூடாது’ என்று சொல்லி முத்தழகியை அவருடைய பிளாக்குகளை எடுத்துப் போகச் சொன்னார்.

அப்போது அவினாஷ் போன்ற ஒரு சிலர் முத்தழகியைக் குறி வைத்ததால், அவர் பதற்றத்தில் ஏற்கனவே அன்சாரிடம் இருந்த பிளாக்குகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அந்த நேரத்தில் முத்தழகியைப் பலரும் தாக்கிப் பிடுங்கியதில் பிளாக்குகள் சிதறி, அக்‌ஷிதா, வினோத், அவினாஷ் என்று பலரும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்கள்.

’நாங்கள் விதிப்படி முத்தழகியிடமிருந்து பிடுங்கலாம் என்பதால் நாங்கள் விளையாண்டது சரிதான்’ என்பது அவர்களுடைய கருத்து. ’ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எங்களுடைய ப்ளாக்குகள் எப்படி எங்களிடம் இருந்து எடுக்கப்பட முடியும்?’ என்பது அன்சாரின் கருத்து. இதை வைத்து ஒரு பெரிய வாக்குவாதமும், அதைத் தொடர்ந்து வாய்ச்சண்டையும் நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் நடந்து கொண்டிருக்கும் சிக்கல் புரிந்ததோ அல்லது புரியவில்லையோ, அவினாஷ் வந்து அன்சாரைப் பார்த்து, ”இந்த மாதிரி ஏமாத்தி கேம் விளையாடுறதெல்லாம் கொஞ்சமும் நல்லாயில்லை” என்று கத்திவிட்டுப் போனார். ’நாம் என்னத்தை ஏமாற்றி விட்டோம் என்று இவன் இப்படிக் கத்திவிட்டுப் போகிறான்’ என்று அன்சாருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது வினோத் வந்து, ’நாங்க உன் டேபிளில் இருந்துதானே எடுக்கக்கூடாது? நாங்க முத்தழகியிடமிருந்துதானே பிடுங்கினோம். அவரிடம் ஏற்கனவே பிளாக்ஸ் இருந்ததில்லையா? அப்படின்னா நாங்க சரியாகத்தானே விளையாடுகிறோம்’ என்று விளக்கம் கொடுத்துவிட்டுப் போனார். அன்சார் மண்டையை பிய்த்துக் கொள்வது போல ஆகிவிட்டது நிலைமை.

அடுத்து கொஞ்ச நேரம் இடைவேளை விட்டு, எல்லாருக்கும் ஓய்வெடுக்க நேரம் கொடுத்து விட்டு காலையிலேயே டெமாக்ரசி அறையில் கேள்வி நேரம் டாஸ்க்கை வைத்தார் பிக்பாஸ். ஹோட்டல் டாஸ்க், பாட்டில் டாஸ்க் போன்ற இப்படியான வீக்லி டாஸ்க்குகள் நடைபெறும் வாரங்களில், பொதுவாக வீடு சம்பந்தமான சண்டை சச்சரவுகள் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். லீடருக்கும் அவ்வளவாக வேலைகள் இருக்காது, சிக்கலில் மாட்டாமல் எளிதாகத் தப்பிவிடவும் செய்வார்கள். இந்த நிலையில் டெமாக்ரசி அறை, கேள்வி நேரம் இதெல்லாம் அத்தனை சூடு பிடிக்க வாய்ப்பில்லை. அது தெரிந்திருந்தும் இவர்கள் அதை எல்லாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக பிக்பாஸ் இதை வைத்திருப்பார் போலிருக்கிறது. அங்கே எதிரணியினர் லீடரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார்கள். அதற்கு ’நான் இரண்டு அணிகளுக்குள்ளும் எந்த வேறுபாடும் பார்க்கவில்லை’ என்று ஒரு பெரிய உருட்டு உருட்டினார் அக்சிதா. பின்பு கொஞ்ச நேரம் வளவளவென்று பேசிக்கொண்டிருந்து விட்டு எல்லோரும் வெளியே வந்தனர்.

BB 10 Tamil Day 32

சாப்பாட்டுக்காக பனீர் கிரேவி செய்திருப்பார்கள் போலிருக்கிறது. வெளியே வந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். வேறு யார் தட்டிலோ எட்டு பனீர் துண்டுகளைப் பார்த்துவிட்டு, ”என்ன எனக்கு மட்டும் நான்கு துண்டுகள்தான் வந்திருக்கிறது, இவருக்கு எட்டு துண்டுகள் இருக்கிறது” என்று கிச்சன் குழுவில் இருந்த அஷ்மிதாவைப் பார்த்து கேட்டார் அன்சார். ”வழக்கம் போல முதல் ரவுண்டில் எல்லோருக்கும் குறைவாக கொடுத்துவிட்டு, மீதம் இருப்பதை இன்னொரு ரவுண்ட் கொடுக்கலாம் என்று நினைத்துச் செய்தேன்” என்று சொன்னார் அஷ்மிதா. அதற்கு, ”இவரும் முதல் ரவுண்டுதானே வாங்கிக் கொண்டு வருகிறார்” என்று சொன்னதும், ”அவர் கடைசியாக வாங்கினதால் அப்படித் தெரிகிறது. முதலில் வாங்கியவர்களுக்கு நான் இப்போதுதான் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்” என்று மீண்டும் விளக்கினார் அஷ்மிதா.

அதற்குள், ”இப்படி எல்லாம் சாப்பாட்டு விசயத்தில் கேட்டுக் கேட்டு வாங்குவது எனக்கு அசிங்கமாக இருக்கிறது” என்று அலுத்துக் கொண்டார் அன்சார். அது தவறு! அவர் கிச்சன் குழுவில் இருந்த போதும் இந்த மாதிரியான வேலைகளைச் செய்திருக்கிறார். அவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரியும். அப்படி இருந்தும் சாப்பாடு விஷயத்தில் இப்படிக் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அன்சாரின் வழக்கமாகத்தான் இருக்கிறது.

அதே நேரத்தில் கிச்சன் குழுவில் இருந்த லட்சுமியிடம் அஷ்மிதா விசயத்தைச் சொல்ல, ”ஏன் இப்படி நம்மளை அசிங்கப்படுத்துகிறார்கள்? எனக்கு சாப்பாடும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்! இருப்பதையெல்லாம் அவர்களுக்கே போடு. அவர்களே தின்று தொலையட்டும்” என்று தேவையில்லாத வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினார். அவர் சொன்னது அஷ்மிதாவோடு முடிந்துபோனதால் அது பெரிய பிரச்சினையாக இப்போதைக்கு மாறவில்லை.

அடுத்து வெளியே போய் பாட்டில் டாஸ்க்கை மீண்டும் ஆரம்பித்தார்கள்.