காலையில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, புது வரவான கரிஷ்மா முதல் வேலையாக ஒரு விஷயத்தைக் கொளுத்திப் போட்டார். இரண்டாவது வாரத்தில் ஷமாவுக்கும் லட்சுமிக்கும் இடையே நடந்த டீலிங்தான் அது. அந்த விசயம் வாரயிறுதியில் விஜய் சேதுபதியால் கூட பேசப்படவில்லை. இது மிகப்பெரிய அளவில் வீட்டுக்குள் பேசு பொருளாக ஆனது. ஏற்கனவே ஷமா லீடராக இருக்கும் போது, அதை அவருக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து கொள்கிறார் என்பதான ஒரு பேச்சு பரவலாக இருக்கிறது. அந்த நெருப்பில் கரிஷ்மா சொன்ன இந்த விஷயம் கூடுதலாக எண்ணெயை ஊற்றியது போல் ஆக்கிவிட்டது.
”நாங்கள் டீல் போட்டது உண்மைதான், ஆனால் நான் டீலிங்குக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை. லட்சுமியை சொந்தக்கதை டாஸ்க்கில் கதை சொல்ல தேர்ந்தெடுக்கத்தானே செய்தேன்” என்று ஷமா அதைச் சமாளிக்கப் பார்த்தார். லட்சுமியைக் கதை சொல்ல தேர்ந்தெடுத்தாலும் கூட, அவருக்குப் பதிலாக லீடர் எவிக்ஷன் போர்டில் மனதைத் தொடுமளவுக்குக் கதை சொன்ன குமரனைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார். ஷமா எப்போதும் தான் செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதே இல்லை, மாறாக அதைச் சுற்றி விடுவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார். இருவரும் சேர்ந்து அவர்களுக்கு இடையே நடந்த டீலிங்கை நியாயப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.
முத்தழகியும் கூட, ’வேலையைப் பார்க்காமல் ஸ்டார் ரேட்டிங் குறைவாக வந்ததற்குக் காரணமே லட்சுமிதான், அவர் இப்படி டீல் பேசியிருக்கவே கூடாது’ என்று கூடுதலாக ஒரு கருத்தை வைத்தார். லட்சுமி, ’இல்லையில்லை, அதற்கு ஷாதிகாதான் காரணம்’ என்று சொல்ல, இத்தனை நாட்கள் லட்சுமி குரூப்பின் முக்கிய மெம்பர்களாக இருந்த ஷாதிகாவும் முத்தழகியுமே கூட அதிர்ச்சியடைந்தார்கள். லட்சுமியின் தலைமையிலான ’கேர்ள்ஸ் குரூப்’ இவ்வாறாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
அடுத்து, இந்த வார லீடருக்கான போட்டி நடந்தது. சென்ற வார பெஸ்ட் பர்ஃபார்மர்ஸ், ஒர்ஸ்ட் பர்ஃபார்மர்ஸ் என்றெல்லாம் போகாமல், வைல்டு கார்டு மூலமாக உள்ளே வந்த மூன்று பேரும்தான் இந்த வார லீடர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்தார் பிக்பாஸ். அதன்படி, மூவரும் தங்களுக்கு சப்போர்ட் செய்யும்படி எல்லாரையும் கேட்டுக் கொண்டார்கள். பந்து பொறுக்கும் படியான ஒரு போட்டியும் நடந்தது. அதில் அக்சிதா மிகப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். அதில், அவரது அண்ணனான அவினாஷ் மற்றும் ஜேசன் உள்ளிட்ட அவருடைய பாய்ஸ் குரூப்பின் பெரும் பங்கு இருந்தது. ஒருவேளை அவினாஷ் இல்லாவிட்டால் அக்சிதா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
அடுத்து டெமாக்ரசி அறைக்குப் போய், அக்சிதா லீடராகப் பதவியேற்றுக் கொண்டார். எதிரணித் தலைவராக முனியம்மா, சமையல் குழு தலைவராக லட்சுமி, கிளீனிங் குழு தலைவராக பிருத்வி ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். வழக்கம் போல பாத்ரூம் ஏரியாவில 5 பேரைத்தான் அனுமதிப்போம், முதல்ல நாங்கதான் சப்பிடுவோம், வாட்டர் பாட்டிலைக் கையிலேயே வைத்துக்கொண்டுதான் திரிய வேண்டும் என்பது போல விளங்காத விதிமுறைகளைப் போட்டுக்கொண்டு, அதைப் பற்றியே வளவளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவிநாஷ் லீடராக இருந்தபோது ஆலோசகர் என்ற பெயரில் எந்த அளவுக்கு ஜேசன் அதில் தலையிட்டுக் கொண்டிருந்தாரோ கிட்டத்தட்ட அதே போலவே, இப்போது அக்சிதாவிடமும் நடந்து கொண்டிருந்தார். பல தடவைகள் எழுந்து போய் அக்சிதாவின் காதில் எதையோ ஓதிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து எதிரணியினர் அவர் ஆலோசகராக இருந்தாலும் அதற்காக ஒவ்வொரு வார்த்தையையும் அவர் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இதைப் பார்க்கும் போது நீங்கள் தலைவரா, அவர் தலைவரா என்ற சந்தேகம் வருகிறது என்று சொன்ன பிறகும் கூட அக்சிதா அதை புரிந்து கொள்ளவில்லை. கருத்து சொன்னவர்களை அமைதிப்படுத்தி உட்காரச் சொன்னாரே தவிர, ’உண்மையில் அது அப்படித்தான் தோன்றுகிறது. நாம் ஜேசனை அடக்கி வைக்க வேண்டும்’ என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை.
அடுத்து, நாமினேஷன் நடந்தது. ஷமா, லட்சுமி, சாந்தினி, தன்யா, முத்தழகி, முனியம்மா, ராகவ், அவினாஷ், ஜேசன் ஆகியோர் நாமினேட் ஆனார்கள். சாந்தினி, தன்யா இருவரின் ஒருவர் வெளியேற வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. பார்க்கலாம்.
அதன் பிறகுதான் முக்கியமான சண்டை காட்சி ஒன்று இன்றைக்கு நடந்தேறியது. ஜேசன் அவருடைய செருப்புகளையும், ஷூக்களையும் அவருடைய படுக்கைக்கு அருகே செருப்புக்கடை போல அடுக்கி வைத்திருந்தார். அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் இருந்த தன்யா, என்னுடைய செருப்புகளை நான் எங்கே வைப்பது என்று கேட்டு ஒரு சின்ன பிரச்சினையை தொடக்கி வைத்தார். இதற்கு பதில் சொல்ல வந்த லீடர் அக்சிதா, ’அவர் எங்கே படுக்கையின் மீதா வைக்க முடியும்?’ என்று நக்கலாகச் சொன்னதிலிருந்தே அவர் ஜேசனுக்கு சாதகமாகப் பேசும் தொனி வெளிப்படத்தான் செய்தது. ஜேசனின் அடுத்த பலிகடா அக்சிதாவாக இருப்பார் என்று தோன்றுகிறது.
ஜேசனும் நக்கலாகப் பதில் சொல்ல, வாசன் உள்ளே வந்து ’என்னங்க, அந்தாளு நக்கலா பதில் சொல்றான். நீங்களும் ஒண்ணும் கேட்க மாட்டேங்குறீங்க?’ என்று தன்யாவுக்கு ஆதரவாக வர அதற்கு, ’நீங்க உங்க வாயை மூடுங்க’ என்று கொந்தளித்தார் அக்சிதா. பதிலுக்கு, ’நீங்க வாயை மூடுங்க’ என்று வாசன் சொல்ல, ’எங்க கேப்டனை எப்படி அவமரியாதை செய்யலாம்?” என்று ஜேசன் உள்ளே வந்தார். அவ்வளவுதான், கைகலப்பு ஆகவில்லை எனினும் அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவுக்கு ஜேசனும், வாசனும் முட்டி மோதிக் கொண்டார்கள். ஆளாளுக்கு அவர்களை இழுத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாளை இருவரும் கட்டிக்கொண்டு ஸாரி சொல்லிக் கொள்ளத்தான் போகிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. பார்க்கலாம்.