BB 10 Tamil Day 26 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 26: களமிறங்கப்போகும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார்? #BiggBoss10

இது போன்ற சமயங்களில், டாஸ்க்கை விட்டு வெளியே வந்து, ’சமைக்க முடியாதுடா, உன்னால் ஆனதைப் பாத்துக்கடா. பேன் கேக்கு வேணுமா? இந்தா இந்த கருகுன தோசைதான் இருக்கு, வேணும்னா சாப்பிடு, இல்லைனா போயி பட்டினி கிட’ என்று எகிறியடித்தால், மாஸாகவும் இருந்திருக்கும்.

ஆதி தாமிரா

நேற்றைய ’தன்யாவைப் பழிவாங்கும் எபிசோடு’தான் இன்றைக்கும் ஓடிக் கொண்டிருந்தது. விடியற்காலை நான்கு மணி வரைக்கும் தன்யாவும் ஜாவித்தும் சமையலறையிலேயே பழியாகக் கிடந்து, அவர்கள் கேட்பவற்றை அறைகுறையாக இருந்தாலும், சமைத்துக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். அப்படி இருந்தும் ஜேசன், விக்னேஷ் போன்றவர்கள் வந்து, பக்கத்திலிருந்த ஜாவித்தை விட்டுவிட்டு தன்யாவைக் குறி வைத்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள். ’ஜேசனைக் கண்டுக்காத, அவன் கிடக்குறான் அட்டன்ஷன் சீக்கர்’ என்பது போல தன்யாவை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார் லட்சுமி. விக்னேஷ் ஒரு படி மேலே போய் வா போ, உனக்கென்ன காது கேக்கலியா, இவ்வளவு நேரமா என்னத்தை கிழிச்சிகிட்டிருக்க என்றெல்லாம் ஒருமையில் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

இது போன்ற சமயங்களில், டாஸ்க்கை விட்டு வெளியே வந்து, ’சமைக்க முடியாதுடா, உன்னால் ஆனதைப் பாத்துக்கடா. பேன் கேக்கு வேணுமா? இந்தா இந்த கருகுன தோசைதான் இருக்கு, வேணும்னா சாப்பிடு, இல்லைனா போயி பட்டினி கிட’ என்று எகிறியடித்தால், மாஸாகவும் இருக்கும், தங்கள் இமேஜையும் காப்பாற்றிக்கொள்ளலாம். பார்வையாளகளுக்கும் அது நிச்சயம் பிடிக்கும். ஆனால், தன்யா ஓர் அடிமை போல, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்துகொண்டும், தனியே உட்கார்ந்து அழுதுகொண்டும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் ஓரிடத்தில், ’யார் சீனியர் செஃப்?’ என்று யாரோ கேட்க, தன்யாவும், ஜாவித்தும் ஒரு பதில் சொன்னார்கள். லட்சுமி வந்து வேறொன்றைச் சொல்லி மாட்டிவிட்டார். அதில் கடுப்பான ஜாவித், ’இப்படியெல்லாம் பண்ணாதீங்க’ என்று லட்சுமிக்கு அறிவுரை சொன்னார். நம்ம லட்சுமிக்குதான் அறிவுரை சொன்னால் ஆகாதே! உடனடியாக சண்டைக்குப் போனதோடு மட்டுமல்லாமல், ’கிச்சன்ல ஆள் கம்மியா இருக்கேன்னு நான் உதவி பண்ணினதுக்கு எனக்கே அட்வைஸ் பண்றியா? இனிமே உதவியே பண்ண மாட்டேன். நீங்க ரெண்டு பேருமே கிடந்து சமாளிங்க’ என்று நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அதோடு ஏற்கனவே ஆடிக் கொண்டிருக்கும் கெஸ்டுகளிடம் போய், ’இனி என்னவானாலும் நீங்களே அவங்களையே கேட்டுக்குங்க, தூக்கிப் போட்டு மிதிச்சாலும் நான் கேட்கமாட்டேன்’ என்பதுபோல போட்டுக்கொடுக்கவும் செய்தார். இந்த லட்சுமியைப் போல வன்மம் பிடித்த ஆளைச் சல்லடை போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

வெளியே மசாஜ் சர்வீஸை அனுபவித்துக் கொண்டிருந்த ஜேசன், பொழுதுபோகாமல், சவின்யாவை அவரது கதையைச் சொல்லச்சொல்ல, அதற்காகவே காத்திருந்தது போல சவின்யா, அவரது சொந்தக்கதை சோகக்கதையை எடுத்துச் சொன்னார். அதில் சில வெட்டுகள் இருந்ததால் நமக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால், கதை முடிந்தபின்னர் எல்லோருமாக வந்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அருகில் அஷ்மிதா என்ன ரியாக்ட் செய்வது என்றறியாமல் தேமேவென்று நின்றுகொண்டிருந்தார்.

BB 10 Tamil Day 26

அடுத்து ஒரு வழியாக ஹோட்டல் டாஸ்க்கை முடித்து வைத்தார் பிக்பாஸ்! முன்னதாக எல்லோரையும் உட்கார வைத்து ரிவ்யூ கேட்டபோது, அன்சார், முனியம்மா, ஜேசன், விக்னேஷ் என எல்லோரும் எழுந்து மேனேஜர் லட்சுமியையும், தன்யாவையும் கடைசியாக ஒருமுறைக் கழுவி ஊற்றினார்கள். அடுத்து, ’ஜாவித்- தன்யா, அஷ்மிதா- சவின்யா இரண்டு ஜோடிகளிலும் தலா ஒருவர் வெளியாக வேண்டும். அதுவும் வயலன்ஸ் இல்லாமல் பேசியே முடிவு செய்ய வேண்டும்’ என்று ஒரு டாஸ்க்கைக் கொடுத்துவிட்டுப் போனார் பிக்பாஸ். நால்வருக்கும் மக்களிடம் வாக்களிப்பு கேட்கப்பட்டிருப்பதால் இந்த டாஸ்க்கே லுலுலாயிக்காகத்தான் இருக்கும். அது தெரியாமல் நமது காதுகள் புளித்துப் போகுமளவுக்கு நான்கு பேரும் பேசித் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது நாளை வீக்கெண்ட் எபிசோடில் தெரிய வரும். எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் யாருக்குப் போகிறது என்பதும் நாளை தெரியலாம். கூடவே ஞாயிறு எபிசோடில் கடைசியாகக் களமிறங்கப்போகும் மூன்று வைல்டு கார்டு போட்டியாளர்கள் யாரென்பதும் அரசல் புரசலாக காதில் விழுகிறது. அறிமுக மேடைக்கு வந்து, உள்ளே போகாமலிருந்த, இப்போது உள்ளே இருக்கும் போட்டியாளரான விக்னேஷின் தங்கை அக்‌ஷிதா, பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், காமன் போட்டியாளர்களில் இறுதி வரை வந்த கரிஷ்மா ஆகிய மூன்று பேர்தான் அவர்கள் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பார்ப்போம்!