BB 10 Tamil Day 22 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 22:  'சிட்டிக்கு கோவம் வருது' -களமிறங்கும் தன்யா #BiggBoss10

அஷ்மிதாவாவது எங்காவது வாயைத் திறந்து கோபப்பட முயலுகிறார். ’பாலு பொங்கும் பச்சத்தண்ணி எப்படிடா பொங்கும்’ என்பது போல தன்யாவும், குமரனும், ’இவனுக என்னதான் செய்யச் சொல்லுறானுக’ என்று புரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதி தாமிரா

குமரன், அஷ்மிதா, தன்யா இந்த மூன்று பேரையும் உள்ளே வந்த முதல் நாளிலிருந்து, ’இவர்கள் வாயே திறப்பதில்லை, இவர்கள் இருப்பது யாருக்கும் தெரியவில்லை, இவர்கள் உள்ளே இருந்தாலும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான்’ என்று சக போட்டியாளர்கள் மட்டுமல்லாது, வீக்கென்ட் எபிசோடுகளில் விஜய் சேதுபதியும் சேர்ந்துகொண்டு காய்ச்சி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அஷ்மிதாவாவது எங்காவது வாயைத் திறந்து கோபப்பட முயலுகிறார். ’பாலு பொங்கும் பச்சத்தண்ணி எப்படிடா பொங்கும்’ என்பது போல தன்யாவும், குமரனும், ’இவனுக என்னதான் செய்யச் சொல்லுறானுக’ என்று புரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்யாவும், ஜாவித்தும் ஒரே கயிற்றில் சிக்கிக் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் சுமுகமாக உதவிக்கொண்டிருப்பதைப் பார்த்து, காலையிலேயே அன்சாரும், முனியம்மாவும் கேலி செய்து கொண்டிருந்தார்கள். ’கயிறு கட்டியிருப்பது ஒருத்தருக்கொருத்தர் எரிச்சலூட்டி வெளியே போக வைப்பதற்காகத்தான். அதைச் செய்யாமல் இவர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்லி, படுக்கையில் படுத்தபடி கெக்கே பிக்கேவென்று சிரித்து வெறுப்பேற்றினார் முனியம்மா. தன்யாவுக்கு அப்போதே மைல்டாக கோபம் வந்தது.

இந்த சீசனில் ஒவ்வொரு வாரமும் அடுத்த லீடர் பொறுப்பு ஏற்கும் வரை, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை முந்தின வார லீடரும், குழுக்களும் முன் வந்து செய்யாமல் திங்கட்கிழமை எபிசோடில் அப்படியப்படியே போட்டுவிட்டு எனக்கென்ன என்பது போல சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வாரமும் காலையில் யார் சமைப்பது என்று தகறாறு ஏற்பட்டது. சென்ற வார லீடர் அவினாஷ், ’யாராவது மாவு கரைச்சுத் தாங்க, நானே தோசை சுட்டுத் தொலைக்கிறேன்’ என்பது போல காரியத்தில் இறங்கினார். தன்யாவும், ஜாவித்தும் அவர்கள் இருவருக்குமென்று தனியாகத் தக்காளியை வதக்கிக் கொண்டு, ’அடுப்பைக் காலி பண்ணுடா, நாங்க எங்க ரெண்டு பேருக்கும் தோசை சுட்டுட்டுப் போயிடுறோம்’ என்று அவரிடம் வம்பிழுத்தார்கள். எல்லோரும் சொல்லும் ’சிம்ப்ளி வேஸ்ட்’ என்பது போன்ற கருத்துகள் தன்யாவை வெறுப்பேற்றிக் கடுப்பேற்றி கடைசியில் தன் இருப்பைக் காட்ட இப்படியெல்லாம் அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. தள்ளியிருந்தாலே அடுத்தவர் பிரச்சினையில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கவில்லை என்றெல்லாம் இந்த வீட்டில் கேட்பார்கள். ஆனால், தன்யாவுடன் கைகள் கட்டப்பட்டு கூடவே சுற்றிக்கொண்டிருக்கும் ஜாவித், தன்யாவின் எந்தப் பிரச்சினையிலும் வாயே திறக்காமல் சுற்றிக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. ஒருமுறை வெளியே போய்விட்டு வந்தும் இந்தாள் திருந்தியதாகத் தெரியவில்லை. இந்த வீக்கெண்ட்டில் வெளியேறும் முதல் ஆளாக ஜாவித் இருக்கலாம். 

அடுத்து இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் தொடங்குகிறது என்று அறிவித்தார் பிக்பாஸ். ஆளாளுக்கு இரண்டு இரண்டு பேரைச் சொல்லிவிட்டு உட்கார்ந்தார்கள். அது முடிந்த பின்னர், ’நான் உங்களைச் சும்மாதான் போட்டு வாங்கினேன். இது நாமினேஷனுக்காக அல்ல, யார் எப்படி நாமினேட் ஆகப் போகிறார்கள் என்பதைப் பிறகு சொல்கிறேன்’ என்று சொல்லி எல்லோருக்கும் அல்வா கொடுத்தார் பிக்பாஸ். ஏற்கனவே சொன்னபடி, கயிறுகளால் இணைக்கப்பட்ட சவின்யா-அஷ்மிதா, லட்சுமி-குமரன், தன்யா-ஜாவித் ஆகியோரிலிருந்து மூவர் வெளியே போகவிருப்பதால் இந்த வாரம் மக்கள் வாக்கெடுப்பு இருக்காது என்று தோன்றுகிறது. இந்த லிஸ்ட்டிலிருந்து சவின்யா, ஜாவித், குமரன் ஆகியோர் வெளியேற பெரிதாக வாய்ப்புகள் தெரிகின்றன.

அடுத்து தன்யா என் தக்காளியை நான் எடுத்துக்கொண்டு போகிறேன் என்று சொன்ன மாதிரி, முனியம்மா என் ஆப்பிளை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று ஓர் ஆப்பிளை எடுத்துச் சாப்பிடப்போனார். ஊரே ஒன்று கூடி அதற்கு எதிராகப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள், ’பிக்பாஸ் எதற்காக ஆப்பிள் தந்திருக்கிறாரோ தெரியவில்லை. அதற்கு முன்பாக எடுக்கக்கூடாது’ என்பது அவர்கள் வாதம். ’பிக்பாசு என்ன ஆப்பிளை வைச்சி கோயிலா கட்டச்சொல்லப் போறாக. இதுவரைக்கும் ஒன்னும் சொல்லலைல்ல. நான் திங்கிறேன். அப்புறம் ஆனதைப் பாத்துக்கலாம்’ என்று சொல்லி முனியம்மா அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்துவிட்டு ஆப்பிளை சாப்பிட்டார்.

BB 10 Tamil Day 22

அடுத்து, ’இந்த வாரம் லீடர் கிடையாது, வேலைக்கான குழுக்கள் எதுவுமில்லை, இந்த சீசனின் முதல் மெகா டாஸ்க்கான ’பிக்பாஸ் ஹோட்டல்’ டாஸ்க் ஆரம்பிக்கிறது’ என்று அறிவித்தார் பிக்பாஸ். கயிற்றில் கட்டப்பட்ட ஆறு பேரையும் கெஸ்டுகளாக அறிவித்து, மற்ற அனைவருக்கும் மேனேஜர், சமையல், கிளீனிங், பொழுதுபோக்கு, ரிசப்ஷன், ரூம் சர்வீஸ் என பொறுப்புகளை அறிவித்தார் பிக்பாஸ். மேனேஜராக ஷமாவைச் சொன்னதும், ஜேசன் எழுந்து, ’எந்த அடிப்படையில் ஷமா மேனேஜராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?’ என்று பிக்பாஸையே எதிர்த்துக் கேள்வி கேட்க, ’ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசியில என்னையே கேள்வி கேட்குறியாடா?’ என்ற மைண்ட் வாய்சுடன், ’நீ எந்த அடிப்படையில இந்த வீட்டுக்குள்ள வந்த?’ என்று பதில் கேள்வி கேட்டு மூக்கை உடைத்து அமர வைத்தார் பிக்பாஸ். ஆனால், அந்தாள் இதற்குப் பிறகும் திருந்துவார் என்று தோன்றவில்லை.

டாஸ்க் ஆரம்பித்தது. எல்லோரும் பரபரப்பானார்கள். அத்தனை பேரும் வெளியே சிரித்துக் கொண்டிருந்தார்களே தவிர எல்லோருக்குள்ளும் எரிச்சல் தகிப்பது தெரிந்தது. ஆப்பிள் ஜூஸ், சிக்கன் 65 என கெஸ்டுகள் பட்டையைக் கிளபினார்கள். கூடவே தன்யா, விசிறி வீசிவிடச் சொல்லி ஜேசனைக் கடுப்பேற்றினார். முகேஷை பாட்டுப் பாடு, டான்ஸ் ஆடு, பாட்டுப் பாடிக்கொண்டே டான்ஸ் ஆடு என்று புரட்டி எடுத்தார். முகேஷ் லேசாக டென்சனான போது ’நீயெல்லாம் ஒரு ஆர்டிஸ்ட்டா?’ என்று சொல்லி ஓடவிட்டார். தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ, நாளை பார்ப்போம்.