இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே, விஜய் சேதுபதி அவருடைய புதிய படமான 'பத்தா' படத்தின் குழுவை மேடைக்கு அழைத்து அதற்கான பிரமோஷனைச் செய்து அனுப்பிவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்தார். முதலில் நேற்றைய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக ஜேசனை எழுப்பி, ’எதைக் கேட்டாலும் எல்லாம் புரிந்ததைப் போல முகத்தை வைத்துக் கொள்கிறீர்கள், பேசுகிறீர்கள். ஆனால் அந்த பட்டப் பெயர் வைக்கின்ற டாஸ்க்கில் உங்களை ’மிச்சர் மாமா’ என்று சொன்னது உங்களுக்கு சம்மதமா?’ என்று கேட்டார். அதற்கு ’அந்தப் பெயரை எடுத்துக்கொண்டதே நான்தானே’ என்று பதில் சொன்னார் ஜேசன். ஏனென்று கேட்டதற்கு, ’அந்த டாஸ்க்கில் எங்கள் குரூப் ஜெயிப்பதுதான் முக்கியம், இந்த பெயருக்கு எல்லாம் முக்கியமில்லை என்று நானாக முடிவு செய்து கொண்டேன்’ என்றார். அடப்பாவி, இப்படி எதையாவது கோத்துவிட்டு, உணர்ச்சி வசப்பட வைத்து ஆட்டத்தை சுவாரசியப்படுத்தலாம் என்று நாங்கள் முயற்சி செய்தால், அதை உள்ளே உட்கார்ந்து கொண்டு உப்பு சப்பு இல்லாமல் செய்து விட்டு பதில் வேறு சொல்கிறாயா? என்ற விஜய் சேதுபதியின் மைண்ட் வாய்ஸ் வெளியிலேயே கேட்டது. எதையோ சொல்லி சமாளித்து அவரை உட்கார வைத்துவிட்டு அடுத்த கண்டெண்டுக்குப் போனார் விசே. இந்த ஜேசனுக்கு எவ்வளவு திட்டினாலும் அது மண்டையில் உரைக்கிறதா என்பதே நமக்குப் புரியவில்லை. அந்த நேரத்துக்கு மண்டையை ஆட்டி ஆட்டி கேட்டுக் கொள்கிறாரே தவிர, அடுத்த நிமிடமே ஷமாவையோ, வேறு யாரையோ விசே ரோஸ்ட் செய்தால் அதற்குக் கைதட்டி, சிரித்து உற்சாகமாகிவிடுகிறார். அடுத்து அந்தப் பட்டத்துக்காக கோபப்பட்ட தன்யாவைச் சமாதானப்படுத்திய ராகவ், அதை எந்த ரியாக்ஷனும் இல்லாமல் வாங்கிக்கொண்ட முத்தழகி ஆகியோரையும் கேள்வி கேட்டார்.
அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னே வெளியே போன லட்சுமி பிரியாவை மேடைக்கு வரவழைத்து கருத்து கேட்டார் விசே. வெளியே போகும் போது எவ்வளவு வன்மத்தோடு போனாரோ, அதே வன்மத்தோடுதான் திரும்பி வந்திருக்கிறார் லட்சுமி. மேடையிலிருந்தபடியே அவினாஷையும், ஜேசனையும் போட்டு வறுத்தார். அதன் பின்பு, கடந்த மூன்று வாரங்களாக லீடர் போர்டு டாஸ்க் மூலமாக வெளியேறிய மூன்று போட்டியாளர்களான லட்சுமி, ஜாவித், சவின்யா மூன்று பேரையும் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் விசே! இந்தப் போட்டியின் அடிப்படையே மக்கள் வாக்கெடுப்பில் போட்டியாளர்கள் வெளியேறுவதுதான். அதனால் இந்த லீடர் போர்டு டாஸ்க் என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று தொடக்கத்திலேயே நமக்குத் தோன்றியது. இப்போதுதான் அதன் பின்னணி என்னவென்று புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்த வாரத்தில் இருந்து இந்த லீடர் போர்டு டாஸ்க் இருக்காது என்பதையும் கணிக்கலாம், பார்ப்போம்.
உள்ளே போன மூன்று பேரில் ஜாவித், சவின்யா மீண்டும் தாக்குப் பிடிப்பது சிரமம்தான். லட்சுமி ஓர் அதிரடி ஆட்டம் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். மூவரும், ஆளுக்கொருவரை தேர்ந்தெடுத்து தங்கள் கைகளில் ஒரு டேப்பினால் கட்டிக்கொண்டார்கள். லட்சுமி-குமரன், சவின்யா-அஷ்மிதா, ஜாவித்-தன்யா என கோக்கப்பட்ட மொத்தம் ஆறு பேரில் யார் யார் இந்தக் கட்டிலிருந்து வெளியேறுகிறார்களோ, அவர்கள் வீட்டிலிருந்தும் வெளியேறுவார்கள் என்று பிக்பாஸ் எச்சரித்தார். இது என்னவாகப் போகிறதோ, தெரியவில்லை. குமரனுக்கு ஆபத்துக் கையிலேயே இருப்பதாகத் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!
அடுத்து விஜய் சேதுபதி வந்து, ’இந்த சர்ப்ரைஸ் எப்படி இருந்தது?’ என்று கேட்டார். ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துக்களைச் சொன்னார்கள். கயிற்றில் மாட்டிக் கொண்டவர்கள் முகத்தில் இயல்பாகவே ஒரு வெறுப்பு இருந்தது. மற்றவர்கள் உற்சாகமாக இருப்பது போல் நடித்தார்கள். ’மக்கள் ஓட்டுப் போடாமல் சிலர் வெளியே போனது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அந்த வகையில் என்னை எல்லாம் சீக்கிரமாக வெளியேற்றி விடுவார்கள் என்று நான் பயந்து கொண்டு இருந்தேன். அதனால் இவர்கள் வந்தது எனக்குப் பிடித்திருந்தது’ என்று சொன்னார் முனியம்மா. மிக உற்சாகமாக இருந்த லட்சுமியைப் பார்த்து வெளிப்படையாக, ’உங்களைப் பார்த்தால் பழி வாங்கப் போனது போலவே தெரிகிறது. அடுத்தவர்களை கெடுப்பது என்றால் முகத்தில் எவ்வளவு சந்தோஷம்’ என்று கேலி செய்தார் விசே. பின்னர் 3 எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்களைக் காண்பித்து, ’இந்த வார டாஸ்க்குகளில் வெல்பவர்களுக்கு இது கிடைக்கும். பத்தாவது வாரம் வரை இதை ஒரு முறை பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் விசே!