BB 10 Tamil Day 20 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 20: ஜேசன், ஷாதிகாவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி #BiggBoss10

’ஆனந்தியின் அப்பா காலமான செய்தி இப்போதுதான் கிடைத்தது. அதனால்தான் அவரைத் தொடக்கத்திலேயே அனுப்பி வைத்தோம். அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று மேடையிலேயே விசே காரணம் சொன்னார்.

ஆதி தாமிரா

வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகளில் சொல்லும்படி எதுவும் இல்லை. நிகழ்ச்சியை ஆரம்பித்த விஜய் சேதுபதி தொடக்கத்திலேயே, மக்கள் வாக்கெடுப்பில் வெளியே போக வேண்டிய நபரான ஆனந்தியை வெளியே அழைத்தார். வழக்கமாக இது நிகழ்ச்சி முடிவில் நடக்கும். வழக்கமான அலங்கார இழுத்தடிப்புகள் எதுவுமில்லாமல் உடனடியாக அவரை அனுப்பிவைத்தார்கள். அவர் போனதும், ’ஆனந்தியின் அப்பா காலமான செய்தி இப்போதுதான் கிடைத்தது. அதனால்தான் அவரைத் தொடக்கத்திலேயே அனுப்பி வைத்தோம். அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று மேடையிலேயே விசே காரணம் சொன்னார். ஆனந்திக்கு நமது அனுதாபங்களும் உரித்தாகட்டும்!

அடுத்து வழக்கமான நிகழ்ச்சியை ஆரம்பித்தார் விசே! லட்சுமி வெளியே போனபோது, ’நானும் கூடவே போகிறேன்’ என்று கொந்தளித்த முத்தழகியை எழுப்பி, ’இங்கே எதுக்கு வந்தீங்க? விளையாட வந்தீங்களா? உங்க பாசத்தையும், நட்பையும் காட்டுவதற்கு வந்தீங்களா? இனியொரு தடவை யாராவது இப்படி டிராமா பண்ணிக் கொண்டிருந்தால், கம்பெனி பொறுத்துக்காது, வெளியே அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டி உட்கார வைத்தார்.

’இந்த வாரம் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்று கேட்டார் விசே! நேரடியாகக் கேள்வி கேட்டாலே ஒருத்தரும் ஒழுங்காகப் பதில் சொல்ல மாட்டார்கள். இதற்கு மட்டும் என்ன பதில் சொல்லிவிடப் போகிறார்கள் என்று தோன்றியது. நாம் நினைத்தபடியே வினோத், ராகவ் உள்ளிட்ட பலரும் எழுந்து லீடர் எக்ஸிட் டாஸ்க் பற்றிக் கேட்கலாம் என வளவளவென்று எதையோ சொன்னார்கள். முனியம்மா எழுந்து, ’முயல் டாஸ்க்கில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக குழு சேர்ந்து விளையாடினாக. ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் முதுகில் குத்தப்போவதாக பேச்சு இருந்துச்சு. ஆனால், எல்லா பெண்களும் சேர்ந்து ஆண்களை விட்டுவிட்டு என்னையும் ஆனந்தியையும்தான் குத்தி வைச்சாங்க. அது என்னான்னு விசாரிக்கலாம். அப்புறம் ஸ்பாட் லைட் டாஸ்க்ல பர்ஃபார்ம் பண்ணினா, ஆஹா ஓஹோன்னு பாராட்டுறாங்க, அதே கையோட வந்து வெளியே போகிற போர்ட்ல நம்ம போட்டோவை முதல் ஆளா வைச்சிடுறாங்க, அது என்னான்னு விசாரியுங்க’ என்று அவரது பிரச்சினைகளை முன்வைத்து சொன்னார். ஆனாலும் நியாயமான கேள்விகள்தான்.

அடுத்து ஓர் உப்புக் கிண்ணத்தைக் கொடுத்து, ’இந்த வீட்டில் யாருக்கு ரோஷமே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு ஒரு சிட்டிகை உப்பை கொடுத்து காரணம் சொல்லுங்கள்’ என்று சொல்லி வம்பிழுக்கும் டாஸ்க் ஒன்றைக் கொடுத்தார் விசே. ஆனால், கொஞ்சம் கூட அதற்கு ஒத்துழைக்காமல் எல்லோரும் டிப்ளமேடிக்காகவே பதில் சொல்லி விஜய் சேதுபதியை மீண்டும் மீண்டும் அதே கேள்வியை விளக்க வைத்து வெறுப்பேற்றினார்கள். முதலில் ஷாதிகா எழுந்து ராகவைச் சொல்ல, ஒரு பலியாடு சிக்கிவிட்டதைப்போல வினோத், அவினாஷ், முனியம்மா, ஜேஸன் என வரிசையாக ராகவையே சொல்ல நமக்கே கடுப்பாக இருந்தது. விசேவும் கடுப்பாகி, ’வேற ஆளே கிடைக்கலையா? கொஞ்சமாச்சும் யோசிச்சி விளையாட மாட்டீங்களா?’ என்று திட்டவும், அப்புறம் எழுந்தவர்கள் சற்று மாற்றிச் சொன்னார்கள். அதுவும் பாசமாக, வலிக்காமல் அறிவுரை மாதிரி சொல்லி கடுப்படித்தார்கள். இது விளங்காது என்று அடுத்த கேள்விக்குப் போனார் விசே!

முயல் விளையாட்டு. குறிப்பாக ஜேசன் - ஷமா பஞ்சாயத்தைக் கையிலெடுத்தார். ஆனால் பஞ்சாயத்து தெளிவில்லாமல் போய்க்கொண்டே இருந்தது. பேசுவதற்கு ஷமா மயக்கமடைந்தது உண்மையா, அது உண்மையாக இருந்தாலும் அவர் மாற்றி மாற்றிப் பேசியது சரியா, ஆண்களுக்குள் குரூப் சேர்ந்து ஆடியது சரியா, ஜேசன் ஷமாவின் சீலை பிடுங்கி உடைத்துப் போட்டது சரியா என பல விசயங்கள் இருந்தாலும், எல்லாவற்றிலுமே எல்லோரும் சுற்றலில்விட்டார்கள். விசேவும் அதைத் தெளிவாக ஒரு ரூட்டில் கொண்டுபோக முடியாமல் திணறினார். இந்த பஞ்சாயத்தின் போது, ஜேசன் விதம் விதமாக ரியாக்ட் பண்ணிக்கொண்டே இருந்தது, எழுப்பிக் காரணம் கேட்டால் ரகுவரன் மாதிரி உடல்மொழியோடு ஏறுக்குமாறாகப் பதில் சொல்வது என கடுப்படித்துக்கொண்டே இருந்தார்.

’ஷமா கேமை விட்டுப் போகலைன்னு சொல்றாங்க, அப்படின்னா நான் குத்தினதுல என்ன தப்பு?’ -ஜேசன்.

’நீங்க குத்துனது தப்புன்னு அவங்க சொல்லவே இல்லையே? சொன்னீங்களா ஷமா?’ -விசே.

’இல்லவே இல்லை, அப்பவும் சொல்லல, இப்பவும் சொல்லல’ -ஷமா.

’அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சினை?’ -விசே.

’எனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்ல’ -ஜேசன்.

’அப்புறம் ஏன் கொதிச்சிகிட்டே இருக்கீங்க, இப்பக்கூட நான் குத்தினது என்ன தப்புனு கேட்டீங்களே’ -விசே.

’அப்படியா கேட்டேன்?’ -ஜேசன்.

’ஜேசன், உங்களோட பேச முடியாது. நீங்க பெரிய பிரில்லியண்ட். நாங்கள்லாம் முட்டாப்பசங்க. உக்காருங்க’ -விசே.

அடுத்து ஷாதிகா, அன்சார் பிரச்சினையை எடுத்தார். இதில் அன்சார் உணவு விசயத்தில் அவமானப்படுத்துவதை எடுத்துச் சொல்லாமல், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஷாதிகா அவராகவே மாட்டிக்கொண்டார். அவரையும் முடிந்தவரை ரோஸ்ட் செய்துவிட்டார்.

நாளை வெளியே போன மூன்று பேர், மீண்டும் உள்ளே போகப்போவதாக தகவல்கள் வருகின்றன. யாரார் என்பது நாளை தெரியும்!