நேற்றைய ஸ்பாட்லைட் டாஸ்க்கின் மூலமாக லீடரால் வெளியேற முன்மொழியப்பட்டவர்கள் குறித்த அதே பஞ்சாயத்துதான் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. எங்கே தமது பெயர் போர்டில் வந்து விடுமோ என்ற பயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனாலும் முனியம்மாவை வைத்தது தவறு என்பது அனைவரின் ஒருமித்தக் கருத்தாகவும் இருந்தது. மற்ற அனைவரையும் விட முனியம்மாவும் சாந்தினியும் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சி ஓரளவுக்கு நன்றாக இருந்தது என்பதும் உண்மைதான். இதெல்லாம் சேர்ந்து, இன்றைய டாஸ்க்கில் எவர் சிக்கினாலும், முனியம்மாவையும் முகேஷையும் காப்பாற்றி விடுவது என்ற முடிவுக்கு போயிருந்தார் லீடர் அவினாஷ்.
போலவே எடுத்ததுமே இன்றைய ஸ்பாட்லைட் டாஸ்க் விளையாடப் போவது யார் என்று அறிவிக்க சொன்னார் பிக்பாஸ். ராகவ், ஷமா, லட்சுமி பிரியா, முத்தழகி என்று நான்கு பேரைக் கோத்துவிட்டார் அவினாஷ். இது குறித்து லட்சுமியும் முத்தழகியும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவினாஷ், அவரது பாய்ஸ் குரூப்பை காப்பாற்றுவதற்காக தம்மை கோர்த்து விட்டுவிட்டான் என்பதில் லட்சுமி உறுதியாக இருப்பதோடு, அதை அனைவரிடமும் பரப்பிக்கொண்டும் இருக்கிறார்.
அடுத்து இன்றைய முக்கிய அம்சமான, டெமாக்ரசி அறையில் கேள்வி நேரம் நிகழ்ச்சி தொடங்கியது. எதிரணியில் இருந்த ஷாதிகா முதல் கேள்வியாக சமையல் குழுவைப் பார்த்து, ’உங்களது செயல்பாடுகள் ரேட்டிங்குக்கு முன்னும் பின்னும் முரண்பாடாக இருக்கிறதே, நீங்கள் வெறுமனே ஸ்டாருக்காக மட்டும்தான் வேலை செய்கிறீர்களா?’ என்று கேட்டார். உண்மையில் அன்சார் தலைமையிலான சமையல் குழு அனைவரையும் அவமரியாதையாக நடத்துவதைக் கேள்வி கேட்டு அதை நிரூபித்திருக்க வேண்டும். ஷாதிகா மட்டுமின்றி வேறு யாருமே அதைச் சரியாக ஹைலைட் செய்யவில்லை. மாறாக கேள்வி கேட்கப்பட்ட அன்சார் எழுந்து, ’பொருட்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. சிக்கனமாக இருக்க வேண்டியிருக்கிறது, தவா உள்ளிட்ட சமையல் உபகரணங்களும் குறைவாகவே உள்ளன. அதை மீறி நாங்கள் மிகச்சிறப்பாக செயல் படுகிறோம். உண்மையில் எங்கள் உழைப்புக்கு தேவையான அங்கீகாரம்தான் கிடைப்பதில்லை’ என்று அவரைக் காப்பாற்றிக் கொண்டதோடு மீண்டும் அனைவரிடமும் தெனாவட்டாகவே பேசிவிட்டு அமர்ந்தார். ஷாதிகாதான் இப்படிச் சொதப்பினார் என்றால் எதிரணித்தலைவர் ராகவ் இன்னும் மோசம். இந்த சிக்கன நடவடிக்கையால் அவருக்குக் கொஞ்சூண்டு சட்னி கிடைக்கவில்லை எனும் சொந்தப் பிரச்சினையை பெரிதாகச் சொல்ல, ’இருக்கும் சட்னியை மீண்டும் இரண்டாவது சர்விங் செய்து அனைவருக்கும் கிடைக்குமாறு திட்டமிட்டுச் செய்தோம். ராகவ் விரைவில் சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டதால் அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்’ என்று அதற்கும் சரியான பதில் கொடுத்து அன்சார் தப்பிவிட்டார்.
அடுத்து எழுந்த சாந்தினி, ’உணவை வீணடிக்கக் கூடாது என்று ஒரு முக்கியமான விதியைக் கொண்டுவந்தீர்களே, ஆனால் பலருடைய தட்டிலும் சிறிது உணவு வீணாகியதே... நீங்கள் ஏன் அதைக் கவனிக்கவில்லை, தண்டனை கொடுக்கவில்லை?’ என்று லீடரைப் பார்த்துக் கேள்வி கேட்டார். அவர் கேட்டது சரிதான். ஆனால், அதற்கும் ரொம்ப சாமர்த்தியமாக, ’நான் பார்த்த போது அப்படி எதுவும் உணவு வீணடிக்கப்படவே இல்லை, நான் அவ்வப்போது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். உதாரணமாக உங்கள் அணி தன்யாவுக்கு ஒருமுறை சொல்லப்பட்டது. அதை மீறி நீங்கள் ஏதாவது பார்த்திருந்தால் அப்போதே சொல்லியிருந்தால், தண்டனை வழங்கியிருப்பேனே’ என்று பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பது போல பழியைத் தூக்கி அவர்கள் மேலேயே போட்டு அமரவைத்துவிட்டார்.
அடுத்து எதிரணியினர் வழங்கும் ஸ்டார் ரேட்டிங் வழிமுறையை பற்றி பேசினார்கள். ’எல்லா வேலையையும் ஒழுங்காகச் செய்தால் நான்கு ஸ்டார்கள் தருவேன். அதைத்தாண்டி எங்களை இம்ப்ரஸ் செய்தால் மட்டுமே ஐந்தாவது ஸ்டாரை தருவேன்’ என்று ராகவ் சொன்னதைப் பிடித்துக் கொண்டு ஜேசன் உள்ளிட்ட ஆளும் அணியினர் பலரும் அவரைப் போட்டு வறுத்து எடுத்தார்கள். ’நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். அதை சிறப்பாகச் செய்வதற்கு ஐந்து ஸ்டார்கள் தர வேண்டும் என்பது பிக்பாஸ் கொடுத்த விதிமுறை. அதைத்தாண்டி உங்களை இம்ப்ரஸ் செய்வதற்காக யாரும் இங்கே வரவில்லை. நாங்கள் உங்கள் பணியாளர்கள் கிடையாது’ என்று பிரச்சினையை திசை திருப்பிவிட்டார்கள். குறிப்பாக ஜேசனின் உடல்மொழியெல்லாம் நமக்கே எரிச்சலைக் கிளப்புவதாக இருந்தது. ஆனால், அதற்குச் சரியாக ராகவால் பதிலளிக்க முடியவில்லை. குழுப் பெண்கள் எழுந்து அருகில் வந்து, ராகவுக்கு பாயிண்ட்ஸ் எடுத்துக்கொடுத்தும் ராகவால் ஜேசனை சமாளிக்க முடியவில்லை. ஆளும் அணியை இன்று ஓடவிட்டாக வேண்டும் என்று திட்டம்போட்டு கேள்வி நேரத்துக்கு வந்த லட்சுமியும் கூட பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை. கேள்வி நேரமும் முடிந்தது.
அடுத்து ஸ்பாட்லைட் டாஸ்க் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நால்வரும் கடுப்பேற்றும்படியாக ஒரு பர்ஃபார்மென்ஸைச் செய்தார்கள். திட்டமிட்டது போலவே அவினாஷும், வெளியேற்றத்துக்கான முன்மொழிவிலிருந்து மிக எளிதாக முனியம்மாவையும், முகேஷையும் காப்பாற்றி, அதில் லட்சுமியையும், முத்தழகியையும் கோத்துவிட்டுவிட்டார். லட்சுமி உள்ளிட்ட எல்லோருமே மிக எளிதாக போர்டிலிருக்கும் ஆனந்தி வெளியேறிவிடுவார், நாம் பதறத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆளும் அணியில் அதிகம் பேர் இருப்பதாலும், தவறிப்போய் ஆனந்தி ஆளும் அணியில் இருந்ததாலும் அவர் தப்பிவிட்டார், லட்சுமியை வெளியேற்றிவிட்டார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இப்போதைக்கு இந்த வீட்டில் தப்போ, சரியோ கண்டெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் நான்கைந்து பேரில் லட்சுமியும் ஒருவர். வீக்கெண்ட் மக்கள் வாக்கெடுப்பு என்றால் நிச்சயம் லட்சுமி தப்பியிருப்பார். இது வீட்டுக்குள்ளிருக்கும் போட்டியாளர்களின் தேர்வு, அதுவும் மூவரில் ஒருவர் எனும் இறுக்கமான போட்டி என்பதால், இந்த சீசனில் எதிர்பாராத பலரும் சீக்கிரமே வெளியேறுவதைத் தவிர்க்க முடியாது.