வீட்டுத் தலைவர் அவினாஷ், எதிரணித் தலைவரான ராகவை பேசக் கூப்பிட்டிருந்தார். எதிரணியைச் சேர்ந்த இன்னும் சிலரும் கூடவே வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் வந்து நின்ற நேரமும் முனியம்மா வீட்டை பெருக்கும் நேரமும் ஒன்றாக இருந்ததால், அதற்காகவே காத்திருந்த முனியம்மா பிரச்சினையை ஆரம்பித்தார். வந்து நின்றவர்களை டைனிங் மேஜையை முயல் மாதிரி குதித்துக்கொண்டே சுற்றிவரும்படி டாஸ்க் கொடுத்தார். இது விசயமாய் ரொம்ப நேரமாக வளவளவென்று எல்லோரும் பேசி மூச்சைத் தொலைத்துவிட்டு கடைசியில் டாஸ்க்கைச் செய்தார்கள். டாஸ்க்கை முடித்த பிற்பாடு, ’இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தும் பிசிகல் டாஸ்க் தரக்கூடாது’ என்று முத்தழகியும், ’நான் அப்படித்தான் தருவேன், இஷ்டமிருந்தால் செய்ங்க, இல்லைன்னா போங்கம்மா’ என்று முனியம்மாவும் மோதிக்கொண்டார்கள். முனியம்மாவுக்கு எதற்கு எப்படியான டாஸ்க் தரவேண்டும் என்பதில் தெளிவில்லைதான், ஆனால், ’விருப்பமிருந்தால் செய்யுங்க, இல்லையென்றால் போய்த் தொலைய வேண்டியதுதானே’ என்றும் சொல்கிறார். அதன்பிறகும், ஏன் எல்லோரும் அவரிடம் மல்லுக்கட்டிக்கொண்டு அவரை லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இன்று முத்தழகியிடம் பேசும் போது, கூடுதலாக ஒரு வார்த்தை சேர்த்து, ’விருப்பமிருந்தால் செய், இல்லையென்றால் உன் வீட்டுக்குப் போய்த் தொலைய வேண்டியதுதானே’ என்று சொல்லிவிட்டார். ’அதெப்படி என்னை வீட்டுக்குப் போகச்சொல்லலாம், நீ போ முதல்ல’ என்பது முத்தழகியின் வாதம்.
இதே வாதம் டைனிங் டேபிளுக்கும் வந்தது. முத்தழகியோடு ஷாதிகா, லட்சுமி குழுவும் இணைந்துகொண்டு பலமான பிறகும் முனியம்மாவை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆண்களில் சிலருமே அந்தப் பெண்களுக்கு உதவியாக வந்தார்கள். ஆயினும், முனியம்மாவிடம் கதை நடக்கவில்லை. யார் என்ன வார்த்தை சொன்னாலும், அதை அப்படியே ரிப்பீட் செய்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் முனியம்மா. ’நொய் நொய்னு பேசிகிட்டே இருக்காதீங்க’ என்று சொன்னால், ’நீ நொய் நொய்னு முதல்ல பேசாம இரு’ என்கிறார். ’எந்நேரமும் கேமராகிட்டயே போய் இளிச்சிகிட்டு இருங்க போங்க’ என்றால், ’நீ எந்நேரமும் விட்டத்தையே பார்த்து இளிச்சிகிட்டு இரு போ’ என்கிறார். கூடவே ’மூஞ்சைப் பாரு’, ’மூடிகிட்டுப் போ’ என்று எக்ஸ்ட்ரா பிட்டுகளை வேறு சேர்த்துக் கொள்கிறார். ஒரு தடவை லட்சுமி, ’என் மூஞ்சியைப் பாரு என்று பாடி ஷேமிங் செய்துவிட்டார், இதை சும்மா விடமுடியாது’ என்று பஞ்சாயத்து ஆக்கியபிறகும் கூட, எந்தப் பயனும் இல்லை. ’நான் அப்படித்தான் சொல்லுவேன், ஆனதைப் பாத்துக்குங்கடா’ என்று தெனாவெட்டாகவே பேசிக்கொண்டிருந்தார். அவரது ஸ்ட்ராட்டஜியே இதுதான். அது புரியாமல் எல்லோரும் அவருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள்.
அடுத்து இது சார்பாக லீடர் அவினாஷ், ஷாதிகா, லட்சுமி, முனியம்மா மூவரையும் தனியே கூப்பிட்டு பஞ்சாயத்து செய்தார். நம்ம ஷாதிகாவை வைத்துக்கொண்டு பஞ்சாயத்தா? ’நான் ஆயிரம் தப்பு செய்திருப்பேன். என்னிடம் எவ்வளவோ குறைகள் இருக்கலாம். இன்றைக்கும் நான் தவறாக நடந்துகொண்டிருக்கலாம். அதெல்லாம் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால்...’ என்று சுற்றி வளைத்துக்கொண்டு முனியம்மா செய்த தவறுக்கு வருவதற்குள் ’அவரே மன்னிப்புக் கேட்டுவிட்டார். பஞ்சாயத்து முடிந்துவிட்டது’ என்று லீடர் பஞ்சாயத்தை முடித்து வைத்துவிட்டார். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஷாதிகாவுக்கு நடக்கிறது.
அடுத்து, வீக்லி டாஸ்க் என்ற பெயரில் தினமும் நான்கு பேர், வீட்டில் நடந்த விசயத்தைப் பற்றி பர்ஃபார்மென்ஸ் கொடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் சொன்னார். அதில் பிருத்வி, ஷாதிகா, முகேஷ், தன்யா நால்வரும் வந்து பிறரைப் போல நடித்துக் காண்பித்தார்கள். பிருத்வி, முனியம்மாவைப் போல சேலை கட்டிக்கொண்டு நடித்தார். ஷாதிகா, ஆனந்தியைப் போலவும், ஜேசனைப் போலவும் நடித்துக் காண்பித்தார். தன்னைக் கழுவி ஊற்றினாலும் வேறு வழியில்லாமல் நிகழ்ச்சி முடிந்ததும் வந்து ஷாதிகாவைப் பாராட்டிக் கை கொடுத்து, தான் ஸ்போர்டிவாக இருப்பதாகக் காண்பித்துக் கொண்டார் ஆனந்தி.
அதைத் தொடர்ந்து, ’நான் ஒரு மிக்சர் மாமா’, ’நான் ஒரு சோம்பேறி’, ’நான் சிம்ப்ளி வேஸ்ட்’ போன்ற போர்டை மாட்டி மற்றவர்களை அசிங்கப்படுத்தும் டாஸ்க் நடந்தது. ஆனந்தி, தன்யா இருவரும் அதில் கடுப்பானாலும், தனக்கு, ’சிம்ப்ளி வேஸ்ட்’ போர்டு கிடைத்த சாந்தினி தனியே போய் அழவே ஆரம்பித்துவிட்டார்.
ஆனந்தி இப்போதைக்கு தனித்து விடப்பட்டிருக்கிறார். அதற்கு அவர்தான் காரணம் என்றாலும், தன் ஈகோவையும், போலித்தனத்தையும் விட்டுவிட்டு யாரையாவது நட்பாக்கிக் கொள்ளாவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களைத் தாண்டுவது சிரமமாகிவிடும்.
இன்று நடந்த இரண்டு முக்கியமான விசயங்கள் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. ஒன்று, முனியம்மாவுடனான டைனிங் டேபிள் விவாதத்தின் போது போகிற போக்கில் ’முனியம்மா செய்யும் அட்டகாசங்களை யாரும் அட்ரஸ் செய்வதில்லை, அதனால்தான் இப்படி ஆட்டம் போடுகிறார்’ என்று சொல்லி, ஷாதிகா விஜய் சேதுபதிக்கு ஒரு குட்டு வைத்தார். அது உண்மைதான். ஆனால், விசே அதைச் செய்யமாட்டார், ஏனென்றால் முனியம்மாவை அவமானப்படுத்தினால், அது கிராம மக்களை அவமானப்படுத்துவது என்றொரு பிம்பத்தைக் கூட்டமாகச் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இன்னொன்று பட்டப்பெயர் டாஸ்க்கில் சாந்தினி, தனக்குக் கிடைத்த பட்டமான ’சிம்ப்ளி வேஸ்ட்’ பட்டத்துக்கு மட்டும் பிக்பாஸ் ஏன் நான்சென்ஸ் மாதிரி புளி போட்டு மீண்டும் மீண்டும் விளக்கினார் என்று கொதித்தார். பிக்பாஸை அவர் நான்சென்ஸ் என்று சொன்னதில் எந்தத் தவறும் இல்லைதான், ஆனால் அது அந்தப் பட்டம் சாந்தினிக்குக் கிடைப்பதற்கு முன்னால் நடந்த சம்பவம் என்பதால் இந்த விசயத்தில் பிக்பாஸைத் திட்டுவது பொருத்தமில்லை என்பது நம் கருத்து.