BB 10 Tamil Day 15 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 15: எரிச்சலைக் கிளப்பும் கிச்சன் விதிமுறைகள் #BiggBoss10

இந்த வீட்டுக்குள் சாப்பாட்டை முன்னிறுத்தி சுயமரியாதையோடு விளையாடும் போது சிக்கல்கள் எழுகின்றன என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். எதிர்பார்த்தபடியே ஷாதிகாவை, அன்சார் வார்த்தைகளால் காயப்படுத்திவிட, அவர் சாப்பாடு வேண்டாம் என்று போய்விட்டார்.

ஆதி தாமிரா

எடுத்த உடனேயே இந்த வாரத்துக்கான லீடரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் ஆரம்பித்தார்கள். வழக்கத்துக்கு மாறாக வினோத், ஷமா, ஆனந்தி, ஜேசன், அவினாஷ் என ஐந்து பேர் தன்னெழுச்சியாக வந்து வேட்பாளர்களாக நின்றனர். ஓட்டெடுப்பில் அவர்களுள் அவினாஷும், வினோத்தும் வெற்றி பெற, சென்ற வார லீடரான முகேஷுடன் சேர்த்து மூவருக்குமான லீடர் டாஸ்க் வைக்கப்பட்டது. 3 குழுக்களாகப் பிரிந்து அவரவர் ஆட்களுக்காக ஒரு டைனோசரின் படத்தின் துண்டுகளைச் சேகரித்து முழுமையாக்கும் பஸில் போட்டி வைக்கப்பட்டது. இதிலும் அடிதடி நடந்தது.

முத்தழகியிடமிருந்த ஒரு பசில் துண்டை பிடுங்க பிருத்வி முயற்சித்த போது முத்தழகியின் டிஷர்ட்டும் சேர்ந்து அவரது கையோடு வந்ததைக் கவனித்தாரோ இல்லையோ தெரியவில்லை, முத்தழகி எங்கே ஆடை கிழிந்துவிடுமோ என்று பதற்றமாகிவிட்டார். அதற்காக பிருத்வியிடம் கடுமையாகக் கோபப்பட்டார். அது பிருத்வியின் தவறா, அருகிலிருந்த மற்றவர்களின் தவறா அல்லது முத்தழகி அந்தத் துண்டை ஏன் விடவில்லை என்பது எதுவுமே அந்தக் காட்சியில் தெளிவாக இல்லை. வாரயிறுதியில் விசே வந்து தீர்த்து வைத்தால்தான் உண்டு. ஆனால், இந்தப் போட்டிக்குப் பிறகு இதை ஒரு பொருட்டாக நினைத்து இது குறித்து யாரும் பேசிக்கொண்டதாகவும் தெரியவில்லை.

போட்டி முடிவில், வெற்றிகரமாக அவினாஷ் ஆதரவாளர்கள் சேகரித்த டைனோசர் முட்டையை முகேஷ் பிடித்து வைத்துக்கொண்டு ஓர் அழுகுணி ஆட்டம் ஆட முயன்றார். அது விதிமுறையில் இல்லை என்று பிக்பாஸ் சொல்லவும், இந்த வார லீடராக அவினாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்து டெமாக்ரசி அறையில் பதவியேற்பு விழா நடந்தது. சமையல் குழுவின் தலைவராக அன்சாரும், கிளீனிங் குழுத் தலைவராக குமரனும், எதிரணித் தலைவராகவும் ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எதிரணியில் பெண்கள் பலரும் இருந்ததால் ஷாதிகா, லட்சுமி ஆகியோரின் குரல்கள் சற்று பெரிதாகக் கேட்டவண்ணமிருந்தது. சமையல் குழு அன்சார், வரிசையில் காத்துக்கிடந்து, நாங்கள் சொன்னதும் வந்து உணவு வாங்கிக்கொள்ள வேண்டும், இரண்டாவது முறை குழம்பு, காய் வாங்கினால் ஜாலி டாஸ்க் செய்ய வேண்டும் என்று புதிய விதிகளைக் கொண்டு வந்தார்.

BB 10 Tamil Day 15

இந்த வீட்டுக்குள் சாப்பாட்டை முன்னிறுத்தி சுயமரியாதையோடு விளையாடும் போது சிக்கல்கள் எழுகின்றன என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். இதெல்லாம் சற்று அதிகம்தான். எதிர்பார்த்தபடியே ஷாதிகாவை, அன்சார் வார்த்தைகளால் காயப்படுத்திவிட, அவர் சாப்பாடு வேண்டாம் என்று போய்விட்டார். அவருக்கு ஆதரவாக லட்சுமி தவிர வேறு யாரும் வரவில்லை. சாப்பிட நேரமாகிவிட்டது, அனைவரும் பசியில் இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. கடைசியில் கூட்டமாக வந்து உழப்பிவிட்டு, மன்னிப்புக் கேட்காமலேயே ஷாதிகாவின் மண்டையைக் கழுவி, சாப்பிட வைத்துவிட்டார்கள். இந்த லட்சணத்தில் சமையல் குழு சமைத்த உணவை அவர்களாலேயே வாயில் வைக்க முடியவில்லை. எல்லோரும் அதை ஒரு பிரச்சினையாக்காமல் அட்ஜஸ்ட் செய்துகொண்டு சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.

அடுத்து ஆண்களின் லக்சுரி பட்ஜெட் ஷாப்பிங், சென்ற வாரத்தைப்போல எந்தக் குழப்பமும் இல்லாமல், மிக எளிதாக முடிந்தது. அடுத்து இந்த வார நாமினேஷன். கும்பலாகச் சேர்ந்து ஆனந்தியைக் கும்மிவிட்டார்கள். 10 ஓட்டுகள் வாங்கி முதலிடத்துக்கு வந்தார். அதைக் கேட்டு அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. கூடவே லட்சுமி, தன்யா, அன்சார், ஷமா, முனியம்மா, சாந்தினி ஆகியோரும் ஒரு சில ஓட்டுகளை வாங்கி இணைந்து கொண்டனர். சென்ற வாரத் தேர்வான ராகவும் அவர்களோடு இருந்தார்.