BB 10 Tamil Day 7 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 7:  கொளுத்திப் போட்ட விஜய் சேதுபதி #BiggBoss10

உள்ளே இருக்கும் வரை பொத்தினாப்பல இருக்கும் பலருக்கும், வெளியே வந்த பிறகுதான் வீரம் வரும். சவின்யாவும் அப்படியான மோடில்தான் வந்தார்.

ஆதி தாமிரா

முக்கியமான விசயங்களையெல்லாம் சனிக்கிழமை எபிசோடிலேயே முடித்துவிட்டாலும், முனியம்மா ஷாதிகாவைப் பார்த்துத் துப்பியது, நாமினேஷன் குழப்பங்கள் என இன்னும் பஞ்சாயத்து செய்ய வேண்டிய விசயங்கள் சில இருந்தன. ஆனால், முதல் வாரமே நாட்டாமை மோடுக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்தாரோ என்னவோ, முதலில் இந்த ஆட்டத்தை எப்படி ஆடவேண்டும் என்று இவர்களுக்குப் புரியவைப்போம் என்று சொல்லியும், சொல்லாமலும் நாசூக்காக பாடம் நடத்துவதற்கே இந்த முழு எபிசோடையும் எடுத்துக்கொண்டார் விஜய் சேதுபதி.

முதலில், மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேற்றப்பட்ட சவின்யாவை மேடைக்கு அழைத்து, எல்லோரையும் பற்றிப் போட்டுக்கொடுக்கச் சொன்னார் விசே. உள்ளே இருக்கும் வரை பொத்தினாப்பல இருக்கும் பலருக்கும், வெளியே வந்த பிறகுதான் வீரம் வரும். சவின்யாவும் அப்படியான மோடில்தான் வந்தார். ஷாதிகா, சாந்தினி, தன்யா போல ஒரு சிலரைத் தவிர்த்துவிட்டு மற்றவர்களைப்போட்டு வறுத்து எடுத்துவிட்டார். பின்னர் அவரை அனுப்பிவிட்டு, முதல் டைம் பாஸ் கேள்வியைக் கேட்டார் விசே.

’இந்த சீசனில், பிக்பாஸ் உங்களையே விதிகளை ஏற்படுத்திக்கச் சொன்னதற்கு என்ன காரணமாக இருக்கும்?’

’எங்களுக்கு பொறுப்பு வரவேண்டும், புதுமையாக இருப்பதற்காக இருக்கலாம்’ என்று வழக்கம் போல இந்தக் கேள்வியை ஏண்டா கேட்டோம் என்று நினைக்கும் அளவுக்கு அனைவரும் சிறப்பான பதில்களைச் சொன்னார்கள். அதன் பின் மெயின் விசயத்துக்கு வந்தார்.

’உங்களை விதிமுறைகள் ஏற்படுத்தச்சொன்னால், சரியாக, சுமுகமாக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்படி அழகாக அமைத்துக்கொண்டு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறீர்களே... எதிரிகளும், போட்டிகளும், விவாதங்களும் இல்லாமல் வாழ்க்கை எப்படி சிறப்பாக இருக்கும்? எப்படி வளர முடியும்? அதில் சுவாரசியம் எப்படி வரும்? எல்லோரும் நிம்மதியாக உண்டு உறங்கிக்கொண்டிருப்பதை நாங்கள் ஏன் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? இதை யாருமே யோசிக்கவே இல்லையா? அதற்காக நான் சண்டை போட்டுக்கொள்ளச் சொல்லவில்லை. ஆனால், குழுக்கள் ஒருவருக்கொருவர் புதிய விதிகளைப் போட்டுக்கொண்டு பிறருக்குச் சவால் விட்டுக்கொண்டால்தானே ஆட்டம் சூடு பிடிக்கும்?’

இதற்கு மேல் எப்படி புரியவைப்பது என்பது போல நீட்டி முழக்கிச் சொல்லிமுடித்தார். புரிந்துவிட்டது போல சிலர் மண்டையை ஆட்டிக்கொண்டார்கள். ’இனி பாருங்கள், என்னவாகப் போகிறது என்று’ சிலர் முணுமுணுத்துக் கொண்டார்கள். இன்னும் எத்தனை சீசன்கள் ஆனாலும், உள்ளே போகும் பெரும்பாலான போட்டியாளர்கள் இந்த ஆட்டத்தை தொடக்கத்திலேயே புரிந்துகொள்ளப்போவதில்லை. நடக்கும் எல்லாவற்றையும் பர்சனலாக எடுத்துக்கொண்டு, எதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று தெரியாமல் சிரமப்படத்தான் செய்கிறார்கள். இந்த சீசனும் அப்படித்தான் தொடங்கியிருக்கிறது. சாந்தினி, தன்யா, அஷ்மிகா போன்றோர் சிந்திக்கத் தொடங்கியதைப் போல் தெரிகிறது. விசே கொம்பு சீவி விட்டிருக்கிறார். பார்ப்போம் வரும் நாட்களில் என்னவாகிறது என்று.

BB 10 Tamil Day 7

இறுதியாக லீடர் ஆகத் தகுதியில்லாத இருவரைச் சொல்லுங்கள் என்று இன்னொரு டைம்பாஸ் கேள்வியைக் கேட்டார். பலரும் முனியம்மாவைச் சொன்னார்கள். அப்படித்தான் நமக்கும் தோன்றுகிறது. அதன் பின்னர் விசே கிளம்பிவிட்டார். போட்டியாளர்களை சுவாரசியமாக விளையாடுங்கள் என்று டார்ச்சர் செய்யும் விசே, சனி, ஞாயிறு எபிசோடுகளை எப்படி சுவாரசியமாக நடத்தலாம் என்றும் யோசிக்கலாம்.

இருக்கும் தற்குறிகள் போதாதென்று, ஆடியன்ஸ் வரிசையிலிருந்து ஒரு தற்குறியைக் காண்பித்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகவே பார்த்துக்கொண்டிருந்த ஏசி பராமரிப்பாளர் வேலையை விட்டிருக்கிறாராம். சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டால், அப்பா அம்மா எதற்காக இருக்கிறார்கள், அவர்கள் போடுவார்கள் என்கிறார். இந்தத் தற்குறியை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது மூலமாக என்ன சொல்ல வருகிறார்களோ, நிகழ்ச்சி இயக்குநருக்குத்தான் தெரியும்.