காலை நேர திருப்பள்ளியெழுச்சிப் பாடலின் போதே, எதிர்பாராத விதமாக வைல்டு கார்டு எண்ட்ரியாக டிவி நடிகை ஆனந்தி உள்ளே வந்தார். பூவும் பொட்டுமாக பட்டுச்சேலையில் டிரடிஷனலாக வந்திருந்தார் அவர். அதைப் பார்த்த மற்ற பெண்களின் கண்களில், நாமெல்லாம் மாடர்ன் டிரஸில் அல்லவா வந்தோம், இப்படி ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்பது போன்ற ஒரு சின்ன பொறாமை மின்னலைப் பார்க்க முடிந்தது. லட்சுமி பிரியா, ’டிரஸ்ஸு சூப்பர். அழகா இருக்கீங்க, கியூட்டா இருக்கீங்க’ என்று வெளிப்படையாகவே பாராட்டினார்.
ஆனால், இந்த வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருபவர்களிடம் முதல் ஓரிரு நாட்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது லட்சுமிக்குத் தெரியவில்லை. வைல்டு கார்டு எண்ட்ரிகள் எப்போதுமே, ஏற்கனவே நடந்ததைப் பார்த்த அனுபத்தோடும், குழுவின் ஏராளமான வழிகாட்டுதல்களோடும் காற்றடைக்கப்பட்ட பலூன் மாதிரி எனர்ஜிடிக்காக வருவார்கள். அது இறங்க ஓரிரு நாட்கள் ஆகும். அதற்கு முன்பாக அவர்களோடு போய் அன்பாகப் பேசினால் கூட பதிலுக்கு ஆப்புதான் கிடைக்கும். ஆனந்தியும், அந்தப் பாராட்டுக்குப் பதிலாக, ’நீ எப்போதும் ஓவர்லாப்பில் பேசுகிறாய், எடிட்டிங்ல காணாமல் போயிடுவ. ஜாக்கிரதையாகப் பேசு’ என்று அசிங்கப்படுத்தினார். வினோத்தையும், ’என்ன ஒருநாள் முதல்வரா?’ என்று கேலியாக கேட்க, அவர் அதைச் சமாளிக்க, ’ஆமா, நான்தான் புகழேந்தி’ என்று சமாளிக்க, ’அந்த அளவுக்கெல்லாம் சீன் கிடையாது’ என்று கேலி செய்தார். சீக்கிரமே சிக்கலில் மாட்டிக் கொள்ளப்போகிறார் ஆனந்தி.
காலையிலேயே சாப்பிட எதுவும் கொடுக்காமல் அனுப்பியிருப்பார்கள் போலிருக்கிறது. உள்ளே வந்த ஆனந்தி சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்க, எல்லோரும் கல்லு மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சமையல் குழு முகேஷிடம் போய் ’ஒரு பழமாவது கொடுடா’ என்று கேட்க, அவர் புது ஆட்சி பதவியேற்று குழு அமைக்கப்பட்டால்தான் எதுவுமே நடக்கும் என்று முகத்தில் அறைந்தது போலச் சொல்லிவிட, ஆனந்திக்கு பசி ஒருபுறம், அவமானம் ஒருபுறம் என அதற்குள்ளாகவே அழத் தயாராகிவிட்டார். குழு இல்லையென்றால், கிச்சனுக்குள் போய் இருப்பது எதைவாது எடுத்துச் சாப்பிட வேண்டியதுதானே? உண்மையில், அடுத்த குழு பதவியேற்கும் வரை, முந்தைய குழுதான் துறையின் பணிகளைக் கவனிக்க வேண்டும். எல்லாம் இந்த விசேவால் வந்தது. சுவாரசியம் இல்லை, சவாலாக நடந்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்காக சல்லித்தனமான விசயங்களுக்கெல்லாம் முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அடுத்து லீடருக்கான போட்டியில் ஷமா, அன்சாரோடு சேர்த்து கடந்த வார கேப்டன் வினோத்துக்கும் வாய்ப்பு கிடைக்க, அவர்களுக்காக மற்றவர்கள் விளையாடும் டாஸ்க் வைக்கப்பட்டது. லீடருக்காக மற்ற அனைவரும் விளையாடும் இந்த புதிய நடைமுறை நன்றாகவே இருக்கிறது. இந்த சீசன் முழுக்க இப்படியே போகக்கூடும். துப்பாக்கி சுடும் போட்டியில் ஷமாவை வெற்றி பெற வைத்தார்கள் ஹவுஸ்மேட்ஸ்! லட்சுமி, அன்ஷிதா, ஷாதிகா மூவரும் அன்சாரை வெற்றி பெற வைக்க கூட்டுமுயற்சியில் ஈடுபட்டதற்குப் பலனில்லாமல் போயிற்று. அவர்களுடைய கனவை முத்தழகி சிதைத்துவிட்டார். மிக அதிக பாயிண்டுகளை எடுத்து மொத்தத்தையும் அன்சாருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டார். சென்ற வாரம் ஒருநாள் முதல்வராக இருந்த வினோத்துக்கு, யாருமே தன்னைக் கண்டுகொள்ளாமல் போனது சற்று அதிர்ச்சிதான். முதல் டெமாக்ரசி அறை மீட்டிங்கில் ஷமா தலைமையிலான குழுக்கள் பதவியேற்றுக்கொண்டனர். எதிரணித் தலைவராக அன்சார் பதவியேற்றுக்கொண்டார்.
இனி வழக்கமான நான்கு அணிகளுக்கு பதிலாக, சமையல் குழு, கிளீனிங் குழு என இரண்டே குழுக்கள்தான் என்று பிக்பாஸ் புது விதி ஒன்றைச் சொன்னார். வீடு, பாத்ரூம், பாத்திரம் மூன்றையுமே ஒரே அணிதான் கிளீன் செய்ய வேண்டுமாம். ஆனால், இதனால் மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை. அதிகம் பேர் இருந்த கிளீனிங் குழுவுக்குள் அவர்களாகவே குட்டிக்குழுக்களாகப் பிரிந்துகொண்டார்கள். அடுத்து விசே சொன்னது போல சவால் விடுகிறோம் பேர்வழி ஒவ்வொரு குழுவும், ’சோறு சாப்பிட வரும் போது மொத்தமா வரணும், ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் காப்பி’, ’கக்கூஸுக்குப் போனா டோக்கன் போட்டுட்டுதான் போகணும்’, ’லான் ஏரியாவுக்குப் போறதுக்குக்கூட பர்மிசன் வாங்கிட்டுதான் போகணும்’ என்று லுச்சாத்தனம் செய்துகொண்டிருந்தார்கள். டெமாக்ரசி அறையில் மணிகண்டன் காமெடி செய்கிறேன் என்று மொக்கை போட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ’இவர் புடுங்குறது பூராவும் தேவையில்லாத ஆணிதான்’ என்று ஆனந்தி சொல்ல, ஆணியை விட்டுவிட்டு, ’புடுங்குறது’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு ஊதிப் பெரிதாக்கி மொத்த எதிரணியும் வெளிநடப்பு செய்தது. பின்னர் ஆனந்தியை மன்னிப்பும் கேட்க வைத்தது. ஆனந்தி அதைப் பர்சனலாக எடுத்துக்கொண்டு முதல் நாளே அழ ஆரம்பித்துவிட்டார். நவரசமும் இவரிடமிருந்து வெளிப்படும் என்று தோன்றுகிறது.
அடுத்து நாமினேசன் செயல்முறை நடந்தது. கூடுமானவரை குமரன், அவினாஷ், பிருத்வி போன்ற மிக்சர் பார்ட்டிகள் அனைத்தும் நாமினேசனுக்குள் வந்துவிட்டார்கள். அடுத்து, வீட்டுக்குள் நடந்ததற்காகவே முனியம்மா, ஜேசனுக்கு ’ஸ்விம்மிங் பூலில் போய் முங்கிட்டு வா’ என்று டாஸ்க் கொடுக்க கடுப்பான ஜேசனுக்கும், முனியம்மாவுக்கும் ஒரு தகராறு நடந்தது. முனியம்மாவின் இமேஜைக் காப்பாற்ற அது எபிசோடில் வரவில்லை போலிருக்கிறது. ஆட்டம் இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பார்க்கலாம் இந்த சீசன் எப்படிப் போகிறது என்று.