BB 10 Tamil Day 5 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 -நாள் 5: முதல் வாரமே மிட்-வீக் எவிக்‌ஷன்! #BiggBoss10

நடிப்பு, அட்டன்சன் சீக்கிங், போலியான பேச்சு எல்லாம் வெற்றியைத் தரும் போது, ஒரு மனிதன் எப்படி தன்னையறியாமல் ஆணவம் கொண்டவனாக மாறுகிறான் என்பதைக் கண்முன்னால் முனியம்மா மூலமாகப் பார்க்க முடிகிறது.

ஆதி தாமிரா

ஷாதிகா நேற்று தன் லீடர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக வினோத் பாபு புதிய லீடராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாமினேஷனிலிருந்து விடுதலை, அதிக அட்டென்ஷன் என லீடர் பதவிக்கு என்று சில முக்கியமான பலன்கள் இருப்பதால், என்னதான் கஷ்டம் இருந்தாலும் வழக்கமாக லீடர் பதவிக்கு ஒரு போட்டி இருக்கத்தான் செய்யும். ஆனால், இம்முறை எங்கே நம்மை லீடராக்கி விடுவார்களோ என்று எல்லோர் கண்ணிலும் ஒரு பயம் தெரிவதைப் பார்க்க முடிகிறது. வாலண்டியர் செய்யுங்கள் என்றதும் வினோத் மட்டுமே எழுந்து நின்றார். எதிர்ப்பின்றி வினோத் தேர்ந்தெடுக்கப்படுவாரோ என்று நினைத்த நிலையில், பிருத்வி எழுந்து அவருக்கு எதிராக போட்டி போட்டார். அவருக்கும் போதுமான ஆதரவு இருந்தது. ஆனாலும், ஓர் ஓட்டு வித்தியாசத்தில் வினோத்தே வென்றார்.

அடுத்து நைட்ஸ்டார்ஸ் டாஸ்கில் மோசமாக விளையாடியவர்களில் இருந்து ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டிய வேலையில் இறங்கினார்கள். இந்தப் பத்து சீசன்களில் முதல் முறையாக சக போட்டியாளர்களே தங்களுள் ஒருவரை வெளியேற்றுவது இதுதான் முதல் முறை! ஏற்கனவே, ஷாதிகா தேர்ந்தெடுத்து வைத்து விட்டுப் போன முனியம்மா, தன்யா, சவின்யா மூவரையும் புதிய லீடரான வினோத்தும் அப்படியே வழிமொழிந்துவிட்டு எஸ்கேப்பானார். அதன் பிறகு நாமினேட் செய்யப்பட்ட மூவரும் தாங்கள் ஏன் இந்த வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்கள். தன்யாவும், சவின்யாவும் சாதாரணமாகப் பேச, முனியம்மா மட்டும், ’என்னை மாதிரி ஒரு திறமையான பேச்சாளர், புத்திசாலி, சிந்தனையாளரை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அத்தனை பேரும் என்னைப் பார்த்து பயந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் என்னை உள்ளே வைத்திருந்து என்னோடு போட்டி போட்டுப் பாருங்கள்’ என்று சவடாலான ஒரு சவால் விட்டார்.

அந்த மூவரில் யார் வெளியே போவது என்ற முடிவை வழக்கமாக நாமினேஷனுக்காக கன்பெஷன் அறைக்குப்போவது போல சென்று எல்லோரும் அவரவர் விருப்பத்தை சொன்னார்கள். அதன் முடிவில், இந்த வாரத்தில் அதிகமும் வெளியே தெரியாமலிருந்த சவின்யாதான் வெளியேறினார். ஜேசன் போன்ற ஒரு சிலர் முனியம்மாவின் டம்மி சவாலைப் புரிந்துகொண்டு அவருக்கே வாக்களித்தாலும், பலரும் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், அதில் சிலர் அவருடைய அந்தச் சவாலைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இது ஓர் அட்டன்சன் சீக்கிங் டெக்னிக்; ஆனாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்துவிட்டது போலத்தான் இருந்தது. ஆனால், மொத்தமாக அவர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. அடுத்த வாரத்திலிருந்து மக்கள் ஓட்டுப் போட்டு வெளியேறப்போகும் நிலையில் முனியம்மா வெளியேறுவது இனி சிரமமாகிவிடும்.

எதிர்பார்த்தது போலவே தம் திட்டம் வேலை செய்துவிட்டது என்பதாக முனியம்மாவுக்கு பெரும் மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு. எல்லோரிடமும், ’என்னை தேர்ந்தெடுத்தது மூலமாக நீங்கள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை, அறிவாளிகள் மற்றும் துணிச்சலானவர்கள் என்று நிரூபித்துவிட்டீர்கள்’ என்று பாராட்டிக்கொண்டிருந்தார். இது அப்பட்டமான ஆணவம். நார்சிஸ்டிக் குணம். நடிப்பு, அட்டன்சன் சீக்கிங், போலியான பேச்சு எல்லாம் வெற்றியைத் தரும் போது, ஒரு மனிதன் எப்படி தன்னையறியாமல் ஆணவம் கொண்டவனாக மாறுகிறான் என்பதைக் கண்முன்னால் முனியம்மா மூலமாகப் பார்க்க முடிகிறது. தான் ஒரு மிகச் சிறந்த பிளேயர், இங்கிருக்கும் எல்லோரையும் தம்மால் மேனிபுலேட் செய்ய முடியும் என்று முனியம்மா நினைக்கிறார். பார்ப்போம், அவரது பயணம் எவ்வளவு தூரம் செல்லப்போகிறது என்று!

BB 10 Tamil Day 5

முத்தழகி கேமராவில் வந்து, ’இவனுகளுக்கு நடுவுல வாழ்றது எனக்கு ஒரே மண்டைக் குடைச்சலா இருக்கு, மருத்துவரைப் பார்க்க வேண்டும்’ என்று கெஞ்சினார். அதற்குள்ளாகவா? அதற்கெல்லாம் இன்னும் நாள் இருக்கிறது என்றுதான் நமக்குத் தோன்றியது. அதற்கு பிக்பாஸ் அனுமதித்தாரா என்று தெரியவில்லை. அடுத்து ஜேசன், வேலை பார்க்கும் குழுக்களுக்கு ஸ்டார் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாள் முடிய இன்னும் நேரமிருக்கும் போது முழுமையாக ஸ்டார்ஸை கொடுக்க முடியாது என்று கேனைத்தனமாக ஒரு முடிவோடு அவர் விளையாட, குமரன், ஷாதிகா, பிருத்வி போன்றோர் அதற்கு எதிராக பொலபொலவென புலம்பித்தள்ளிக் கொண்டிருந்தார்கள். யார் என்ன சொன்னாலும், அது ஜேசன் காதில் விழுவதாக இல்லை. அடுத்து, வாரம் முழுதும் மோசமாக விளையாடிய ஒர்ஸ்ட் பிளேயர்களாக முனியம்மாவும், அஷ்மிதாவும் தேர்வானார்கள். தொடர்ந்து அடுத்த வார லீடருக்கான வாலண்டியர்களாக ஷாமா, தன்யா, அன்வர் ஆகியோர் முன் வந்தனர்.

இன்று விசே வருவார். இன்னொரு எவிக்சன் இருக்க வாய்ப்பில்லை. பதிலாக இன்னும் இரண்டு பேரை உள்ளே அனுப்ப வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்!