முகவைப்பட்டணம் எனும் கடற்கரைக் கிராமம் ஒன்றில், வருடம் தோறும் பிரபலமான ஒரு பாய்மரப் படகுப் போட்டி நடக்கிறது. பாய்மரப் படகுப் போட்டி என்பது மீனவர்களின் பாரம்பரியமான ஒரு விளையாட்டு. அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் பயிற்சி என்பது கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது ஏற்படும் எதிர்பாராத சிக்கல்களிலிருந்து இருந்து அவர்களை காக்க உதவும் என்பது அதன் அடிப்படை நோக்கம். காளைகள் விவசாயிகளின் நண்பன், அதனால்தான் ஜல்லிக்கட்டு ஆடப்படுகிறது எனும் அடிப்படையைப் போல!
அந்த ஊரைச் சேர்ந்த சாட்டப்புலி என்பவன் வைத்திருக்கும் சுனாமி ரைடர்ஸ் டீம், அந்தப் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவன் தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியூர் ஆட்களை வரவழைத்து, போட்டியில் வெற்றி பெறுகிறானே தவிர, உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்புத் தர மறுக்கிறான். அந்த வெற்றி அவனுடைய ஃபைபர் போட் தயாரிக்கும் தொழில் வளர அவசியமாக இருக்கிறது. இதில் கடுப்பாகும் மாரி எனும் ஓர் இளைஞன், அவர்களிடம் தகராறு செய்ய, மாரியைக் கொல்ல முயலுகிறான் சாட்டப்புலி. மாரி, அடைக்கலம் தேடி சென்னையிலிருக்கும் தங்கள் ஊரைச்சேர்ந்த முத்துக்காளியிடம் போகிறான். இருபது ஆண்டுகளாக தன் மண்ணை மறந்து வெளியூரில் வசிக்கும் காளியை சூழல், மீண்டும் அவன் மண்ணுக்கே கொண்டு போகிறது. காளி யார், அவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு, ஊருக்குத் திரும்பியதும் என்னவாயிற்று, காளிக்கும், சாட்டப்புலிக்கும் என்ன தொடர்பு, மாரிக்குப் படகுப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததா என்பதெல்லாம் அதன் பிறகான கதை!
சூரிக்குப் பொருத்தமான பாத்திரம் என்பதா, பாத்திரத்துக்கு கச்சிதமாக சூரி பொருந்திப்போனார் என்பதா? சூரியின் நடிப்பு சிறப்பான பங்களிப்பு. சாட்டப்புலி பாத்திரத்தில் நடித்த நடிகர் சுகாஸ்தான் சற்றுப் பொருத்தமில்லாத தேர்வாகப்பட்டது. அவ்வளவு அடர்த்தியான பாத்திரத்துக்கு அவர் பொருத்தமில்லாத சின்னப் பையனைப் போலிருந்தார். மேக்கப்பால் அதை மறைக்க முடியவில்லை. மகிமா நம்பியார், சத்யராஜ் என மற்ற எல்லோரும் அவரவர் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய தூணாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதை ஜி.வி.பிரகாஷ் குமார் சரியாகச் செய்திருக்கிறார். சில இடங்களில் அதிக இரைச்சல், சற்றே கங்குவாவை நினைவுறுத்திப் போனது. சிஜி சற்றே சுமாராக இருந்தாலும் எஸ்.ஆர். கதிரின் அட்டகாசமான ஒளிப்பதிவு படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் படகுப் போட்டியின் பரபரப்பைச் சரியாகத் திரையில் கொண்டுவந்திருந்தார். இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் அவர்கள் வேலையைச் சரியாகச் செய்திருக்காவிட்டால், கிளைமாக்ஸ் படகுப் போட்டி, போட்டியாக இருந்திருக்காது. ’அமைதியான நதியினிலே ஓடம்...’ என்பது போல மெலோடியஸாக, தலைகீழான உணர்வைத்தான் கொடுத்திருக்கும்! அந்த அளவுக்கு படகுப் போட்டி என்பது வெகுஜனங்கள் அறிந்திராத, எளிதாக கனெக்ட் ஆக முடியாத அளவுக்குதான் இருந்தது.
அந்த மாரி எனும் இளைஞன் கதையின் மிக முக்கியமான பாத்திரம். ஆனால், அவனிடம் ஒரு தெளிவு இல்லை. அவனது இலக்கு தெளிவாக இல்லை. படகுப் போட்டி வாய்ப்புக்காக கொலை முயற்சி வரைக்கும் போகும் அவன், பொசுக்கு பொசுக்கென போட்டி வேண்டாம், போட்டி வேண்டாம் என அடிக்கடி முடிவெடுப்பதும், கற்றுக்கொடுக்க வந்திருக்கும் முத்துக்காளிக்கு எதிராகவே திரும்புவதும் பொருத்தமாகவே இல்லை. இப்படித் திரைக்கதையில் சில சிக்கல்கள் இருந்தன. போலவே சண்டைக்காட்சிகளும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தன. நங்கூரத்தை ஒரு தெர்மோக்கோல் அட்டை போல சுழற்றி பத்து பேரை பறக்க விடுவதெல்லாம் டூ மச்! சண்டைகள் இந்தப் படத்துக்கு சற்று ரியலிஸ்டிக்காக இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். இப்படிச் சில குறைகள் இருந்தாலும், அவற்றைப் பெரிதாக கணக்கில் கொள்ளாமல் படத்தைப் போரடிக்காமல் பார்க்க முடிகிறது. நிச்சயம் பார்க்கலாம்.