BB 10 Tamil Day 4 Jiohotstar
சினிமா

பிக்பாஸ் 10 | நாள் 4: ஷாதிகா Vs முனியம்மா... சண்டை ஸ்டார்ட்ஸ்! #BiggBoss10

நடந்த சம்பவத்துக்காக ஷாதிகாவை முனியம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வைத்தார்கள். அதிர்ச்சியாக இருக்கிறதா? அதேதான். பிக்பாஸில் கூட்டத்தைக் கூட்டி நியாயம் கேட்டால் இப்படித்தான் நடக்கும்.

ஆதி தாமிரா

சமையல் குழுத் தலைவர் பிளாக் பாண்டி வெளியேறிவிட்டாலும், முனியம்மா காலங்காத்தால எழுந்து போய் தனியாளாக அனைவருக்கும் பொங்கல், சாம்பார் சமைத்து வைத்தார். அது சரிதான், ஆனால், இவரோடு ஏற்கனவே வாய்க்காத் தகராறு இருந்தாலும், ஒரு லீடராக பொறுப்பாக வந்து, ’ஆள் பற்றாக்குறையாக இருக்கிறதே, சமைத்துவிட்டீர்களா, மதியம் என்ன சமைக்கப்போகிறீர்கள், இருப்பதை வைத்து ஏதாச்சும் கூட்டாஞ்சோறு மாதிரி எதையாவது கிண்டி வைத்துவிடுகிறீர்களா?’ என்று முனியம்மா மீதும், சக போட்டியாளர்கள் மீதும் அக்கறையோடு வந்து கேட்டார் ஷாதிகா. அதை சனியம்மாவான முனியம்மா திரித்துவிட்டு சண்டையாக்கியதோடு ’தூ, நீயெல்லாம் ஒரு லீடரா?’ என்று துப்பியும், திட்டியும் திருப்பியனுப்பி வைத்துவிட்டார். நேற்று ஷாதிகா அவரை நாமினேட் செய்ததற்கான முழு பழிவாங்கும் மோடில் முனியம்மா செய்த காரியம் இது என்பது தெளிவு. அதில், சுயமரியாதை பாதிக்கப்பட்ட ஷாதிகா மொத்த வீட்டையும் கூட்டி வைத்துக்கொண்டு நியாயம் கேட்க முயன்றார். இந்த வீட்டுக்குள் கூட்டம் கூட்டி நியாயம் கேட்டால் என்றைக்கு விளங்கியிருக்கிறது?

அதோடு இந்த ஷாதிகா ஒழுங்காக யோசிக்கிறாரே தவிர, அதைச் சரியாக எடுத்துச் சொல்வதோ, செயல்படுத்துவதோ, தன் முடிவில் உறுதியாக இருப்பதோ இல்லை. எல்லோரையும் கூட்டி வைத்துக்கொண்டு, முனியம்மாவைப் பற்றிய குற்றச்சாட்டைச் சொல்லாமல், ’என் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள், குற்றம் குறைகள் இருக்கிறது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அதே பல்லவியில் ஆரம்பித்ததில், முனியம்மாவின் பேச்சை எடுப்பதற்குள்ளாகவே வேறு சிக்கலில் விழுந்துவிட்டார். தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த முனியம்மாவுக்கு ஒரே கொண்டாட்டம். தனியே சிரிப்பதும், ’மூஞ்சியும் மொகறையும் பாரு’ என்று பேசுவதுமாக ஷாதிகாவை மாக்கிங் செய்து கொண்டிருந்தார். தனி நபர் பொறுப்பு, கிச்சனில் ஆள் பற்றாக்குறை, ஆளெடுப்பு என பல விசயங்களையும் பேசிவிட்டு முனியம்மாவுக்கு வந்தார்கள். முனியம்மா வந்து நல்ல பிள்ளை மாதிரி எல்லாவற்றையும் அடுக்கிவிட்டு, ’து’ என்றது ஒரு குற்றமா என்பது போல கேட்க, ’ஆயிரம் இருந்தாலும், அது தப்புதான்’ என்று எல்லோரும் வரிந்துகட்டிக் கொண்டு வந்தார்கள். ஆனால், ’நான் அப்படித்தான் பண்ணுவேன், மன்னிப்பும் கேட்க மாட்டேன்’ என்று பிடிவாதம் செய்துகொண்டிருந்தார். அதன் பின்னர் என்ன நடந்தது தெரியுமா? அப்படியே உல்டா அடித்து, அந்த சம்பவத்துக்காக ஷாதிகாவை முனியம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வைத்தார்கள். அதிர்ச்சியாக இருக்கிறதா? அதேதான். பிக்பாஸில் கூட்டத்தைக் கூட்டி நியாயம் கேட்டால் இப்படித்தான் நடக்கும். இதுதான் ரகுவரன் மாதிரி வளர்ந்திருக்கும் ஜேசனின் தீர்ப்பு. அதை ஷாதிகாவிடம் எடுத்துச் சொல்லி மண்டையைக் கழுவி, அவரை முனியம்மாவிடம் மன்னிப்பும் கேட்க வைத்துவிட்டார். அதற்கும் அடுத்து, முனியம்மா செய்த குற்றத்துக்கு அவரிடமே உங்களை என்ன செய்யலாம் என்று ஆலோசனையும் கேட்டுக்கொண்டிருந்தார்.

BB 10 Tamil Day 4

கடைசியில், லான் ஏரியாவுக்குப் போகச் சொல்லி ஷாதிகா தண்டனை கொடுத்தார். அதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து பிக்பாஸ் முன்னிலையில், ’இவரை ஜெயிலில் போட வேண்டும், சாவி கொடுங்கள்’ என்று கேட்க, அவரும் சம்மதித்து ஜெயில் சாவியைக் கொடுத்தனுப்பவும், அதற்காகவே காத்திருந்தவர் போல ரொம்ப ஆர்வமாக முனியம்மாவும் ஜெயிலுக்குப் போனார். அதாவது அவர் நோக்கமே அதுதான். அவரை ஏதோ கொடுஞ்சிறையில் போட்டது போல, ராகவ் தலைமையில் 4 பேர் சுற்றி உட்கார்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆஹா, இதைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போல நடிப்பு அரக்கி முனியம்மாவும், ’வாழ்நாள் பூராவும் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவ நான். இப்போதுதான் சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசிக்கிறேன், அது இங்கே யாருக்கும் பிடிக்கவில்லை’ என்று வராத கண்ணீரை துடைத்தபடி, கதறியழுது கண்டெண்ட் கொடுத்தார். இரவும், பகலுமாக மற்ற இளைஞர்கள் அவர்களால் முடிந்த ஆக்டிவிட்டி, காமெடி செய்கிறார்கள். அதைக் காண்பிக்காமல், எந்நேரமும் முனியம்மா சமைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது, ஜெயிலுக்குப் போவது என இதையே காண்பித்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் நோக்கம், குறைந்தபட்சம் இன்னும் 50 நாட்களுக்கு முனியம்மாதான் நமக்குக் கண்டெண்ட் என்று பிக்பாஸ் குழு தீர்மானித்துவிட்டதுதான் என்று தோன்றுகிறது!

அடுத்து பாண்டி வெளியேறியதை ஈடு செய்ய, இன்னொரு காமன் மேன் போட்டியாளர் மணிகண்டன் உள்ளே வந்தார். பார்த்தாலே தெரிகிறது, சரியான மொக்கை பார்ட்டியாக இருப்பார் போலிருக்கிறது. அடுத்து நடந்த டெமாக்ரசி அறை டாஸ்க்கில், ’கேள்வி நேரம்’ நிகழ்ச்சி நடந்தது. அதில் எதிரணி கேள்விகளைக் கேட்க, அவை பெரும்பாலும் எதிர்பார்த்தபடி லீடரின் செயல்பாடுகளைப் பற்றியே இருக்கவும், அதை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார் ஷாதிகா. அவற்றை விளையாட்டாகக் கருத முடியாமல், அனைத்தையும் பர்சனலாக எடுத்துக்கொண்டு கதறி அழுதார் ஷாதிகா. கடைசியில் கொஞ்சமும் சிந்திக்காமல் லீடர் பதவியையும் ராஜினாமா செய்தார். மீதமிருக்கும் ஒரு நாளுக்காக இன்னொரு லீடர் வரவேண்டுமாம். அது யாரென்பது நாளை தெரியும்.