முதல் வேலையாக லக்சுரி ஷாப்பிங்குக்குத் தேவையான பாயிண்டுகளை கொடுத்து, கிச்சன் குழுதான் வந்து ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று கோர்த்துவிட்டார் பிக்பாஸ். பாண்டி, முனியம்மா, கிஷோர் மூவரில் முனியம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது, பாண்டிக்கும் ஆங்கிலத்தில் தகராறு போலிருக்கிறது. அப்படியானால் மூன்றாவது நபரான முகேஷைத் தேர்வு செய்யச் சொல்லிவிட்டு பாண்டி, பாயிண்ட் குறிக்கப் போயிருக்கலாம். ஆனால், முகேஷ் பாயிண்ட் குறித்துக் கொண்டிருக்க, கிச்சன் குழுத் தலைவர் என்ற முறையில், பிளாக் பாண்டி பொருட்களைத் தேர்வு செய்வதற்காக பிளாஸ்மா முன்னாடி வந்து நின்றுகொண்டு பொருட்களைத் தேர்வு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
அதோடு, இது லக்சுரி ஷாப்பிங் என்ற ஆட்டமே புரியாமல், இந்த ஷாப்பிங்தான் வீட்டுக்குக்கான மொத்த உணவு என்று நினைத்துக் கொண்டு பதற்றத்தோடு அரிசி எங்கே, உப்பு, புளி எங்கே என்று தேடிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் சொதப்பிவிட்டு, கடைசியில் ’லக்சுரி என்றால் என்னவென்று யராவது எனக்குச் சொல்லியிருக்கலாமில்ல’ என்று கண்ணில் நீர் வைத்துக்கொண்டு குறை பட்டுக்கொண்டார். இதற்கு முன்பாக அவர் பிக்பாஸ் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை. லக்சுரி என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனால், கண்ணில் நீர் வைக்கவில்லை என்றால், அதைச் சொல்லியே கண்ணில் ரத்தம் வரவைத்துவிடுவார்கள் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. பிழைத்துக்கொள்வார்.
இரண்டாம் நாள் காலையில் ராகவும், ஜேசனும் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு முனியம்மாவையும், அஸ்மிதாவையும் பற்றிப் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்து கிச்சன் பக்கமாக முனியம்மா தன் இருப்பைக் காண்பிக்க ஏதாவது பிரச்சினை கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு ஒன்று சிக்கியது. லீடர் ஷாதிகாவை அழைத்து, ’சமையல் குழு சமையல் மட்டும்தான் செய்யும், சமையல் முடிந்ததும் அடுப்பையோ, கிச்சன் மேடையோ கிளீன் செய்ய மாட்டோம். அது கிளீனிங் குழுவுடைய பொறுப்பு’ என்று ஒரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டார்.
அதைக் கிச்சன் குழுவிலிருந்த முகேஷ், அவருக்கு விளக்குவதற்காக வாயைத் திறந்த போது, அடேய், நானே கஷ்டப்பட்டு ஒரு பிரச்சினையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறேன், இவன் வேற எனும் மைண்ட் வாய்ஸுடன், ’நீ வாயை மூடு. நான் கேப்டனுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், அவள் பதில் சொல்லட்டும்’ என்று அவரது வாயை அடைத்து விட்டார். காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்திருக்கும் முனியம்மா கிட்டத்தட்ட அனைத்து பிக்பாஸ் சீசன்களையும் கரைத்துக் குடித்துவிட்டுதான் உள்ளே வந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், எதுவுமே தெரியாதவர் போல இந்த சாதாரண பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க முடியுமா என்று முயன்று கொண்டிருந்தார். அட்டென்சன் சீக்கிங் பட்டத்தோடு, நடிப்பு அரக்கி பட்டத்தையும் இவருக்கு சீக்கிரமே நாம் வழங்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
வழக்கம் போல, பிக்பாஸ் வீட்டு லீடர் பதவி என்பது ஓர் அடிமை பதவி என்பதை நிரூபிக்கும் வகையில், ஷாதிகாவும் அடிமை மோடுக்குப் போய், கிச்சன் மேடையைக் கிளீன் செய்வதற்காக, கிளீனிங் குழு, பாத்திரக் குழு என ஒவ்வொருவராகப் போய் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
அடுத்து ஒரு டெய்லி டாஸ்க் வைக்கப்பட்டது. ஒரு ஸ்ப்ரிங் போர்டில் நின்றபடி ஒரு பொம்மையின் வாய்க்குள், பொம்மைச் சிக்கன் ஒன்றை சரியாக வீசி பாயிண்டுகளை சேகரித்துக்கொள்ள வேண்டும். சற்று கடினமான டாஸ்க்தான். சிலருக்கு ஸ்ப்ரிங் போர்டில் நிற்பதே சவாலாக இருந்தது. ஒன்றிரண்டு பேரைத்தவிர யாரும் சரியாகப் போடவில்லை. ஏதாவது டாஸ்க் இப்படிச் சொதப்பினால், தனது வழக்கமான ஒப்பேற்றிவிடுதல் டெக்னிக் படி, மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் கொடுத்து சிலரை பாயிண்டுகள் எடுக்க வைத்தார் பிக்பாஸ்.
அதைத் தொடர்ந்து அந்தப் பாயிண்டுகளை வைத்து, சிறப்புப் பவர்களை பெற்றுக்கொள்ளும் ஆட்டம் ஒன்றும் நடந்தது. நைட் ஸ்டாருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரைக் காப்பாற்றி- தமக்குப் பிடிக்காத ஒருவரை நாமினேட் செய்வது, அடுத்தவருக்கு மேக்கப் போட்டு விளையாடுவது, அன்லிமிட்டட் உணவு எடுத்துக்கொள்ளலாம், இரண்டு பேரை தரையில் தூங்க வைப்பது என நான்கு ஸ்பெஷல் பவர்களை நான்கு பேர் வாங்கிக்கொண்டார்கள்.
அடுத்து நைட் ஸ்டார்ஸ் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது லீடரின் பொறுப்பு. இந்த நைட் ஸ்டார்ஸில் சொதப்புபவர்கள் நேரடியாக நாமினேஷனுக்குப் போகும் வாய்ப்பும் இருப்பதால் இது முக்கியம் பெறுகிறது. அதற்கான லிவிங் ரூம் விவாதத்தில், வினோத் லீடரைப் பார்த்து, ’எந்த அடிப்படையில் இவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்’ என்று கேட்க, அவர் ’காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று சொல்ல, வினோத்துக்கு ஒன்று, ஷாதிகாவுக்கு ஒன்று என வீடு இரண்டு பிரிவானது. பொலபொலவென அனைவரும் புலம்ப ஆரம்பிக்க, லீடரான ஷாதிகாவே கடுப்பாகி வெளியேறினார். போச்சு, இதை வைத்தே இந்தம்மாவை வைத்துச் செய்யப்போகிறார்கள். பின்னர் வந்து, காரணம் சொல்ல ஒப்புக்கொண்டு நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
பின்னர், ஷாதிகா இரண்டு பையன்களை கூட்டிவைத்துக்கொண்டு, ’நான் ஏன் வெளிநடப்பு செய்தேன் தெரியுமா’ என்று கண்ணீர் விட்டுக் கதறினார். அதாவது குழு மீட்டிங் நடக்கும் போது ஒவ்வொருவராக பேச வேண்டும், ஒருவர் பேசும் போது இன்னொருவர் பேசக்கூடாது என்று ஒரு எளிய விசயத்தைத்தானே கேட்கிறேன். அதை மட்டும் செய்யுங்கள், மற்றெல்லா பிரச்சினைகளையும் நான் எதிர்கொள்கிறேன் என்கிறார். ஷாதிகா, நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்த்ததில்லை போலிருக்கிறது. நீங்கள் வந்து 1 நாள்தான் ஆகிறது. நாங்கள் கடந்த 10 வருசமாக அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது நடக்காது, நடக்கப்போவதுமில்லை.