பிக்பாஸ் மேடையும், பிக்பாஸ் வீடும் வழக்கம் போல பிரம்மாண்டமாக, கலர்ஃபுல்லாக இருந்தது. வீட்டைச் சுற்றிக் காண்பித்துவிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினார் விஜய் சேதுபதி நமக்கு இனி விசே!
வழக்கத்துக்கு மாறாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் இந்த ஆண்டு ஒரே நாளில் தொடங்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகார்ஜுனா, கன்னடத்தில் சுதீப் ஆகியோர் இந்நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அதனால், விஜய் சேதுபதி உள்ளிட்ட நால்வரும் விடியோ காலில் பேசி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அவரவர் மொழியில் ஸ்பாண்டேனியஸாக பேசும் தன்மை கொஞ்சமேனும் இருந்தால்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தமுடியும். நால்வரும் அப்படிப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால், இந்த கான் காலில் ஸ்பாண்டேனியஸாகப் பேசி மற்ற மூன்று மாநில மக்களையும் கவரும் தன்மை நால்வரிடமுமே குறைவாக இருந்ததாகத் தோன்றியது. மீசை நன்றாக இருக்கிறது, வேட்டி நன்றாக இருக்கிறது என்று கடமைக்குப் பேசிவிட்டு, வாழ்த்துச் சொல்லி முடித்துக்கொண்டார்கள்.
அடுத்து முதல் மூன்று நபர்களாக சீரியல் நடிகைகள் லட்சுமிபிரியா, ஷப்னம், சினிமா துணை நடிகை ஷாதிகா ஆகியோர் வந்தார்கள்.
வழக்கத்துக்கு மாறாக புதுமை செய்கிறோம் பேர்வழி என்று இம்முறை போட்டியாளர்களை உள்ளே அனுப்பப்போவதே மக்கள்தான் என்று ஓர் ஐடியாவோடு ஆட்டம் ஆரம்பித்தது. இந்த விளங்காத ஐடியாவை யார் கொடுத்தார்களோ தெரியவில்லை. மூவரையும் தலா ஒரு நிமிடம் பேச விட்டு நிகழ்ச்சி அரங்கிலிருக்கும் பார்வையாளர்களின் கையிலிருக்கும் ஓட்பேட் மூலமாக ஓட்டுப் போடச் சொல்லி முடிவெடுத்தார்கள். ஒரு நிமிடத்தில் ஒருவரைப் பற்றி நாம் என்ன புரிந்துகொள்ள முடியும்? இது பார்ப்பதற்கு இன்று ஒரு நாள் சுவாரசியமாக இருக்கலாம். டைமரை ஓடவிட்டு யார் உள்ளே போகிறார்கள் என்று டென்சன் பில்டப் செய்து விளையாடலாம். ஆனால், இது எந்த வகையிலும் மேடையில் ஏற்றப்பட்ட அந்த நபர்களுக்கு நியாயமானதாக இருக்கமுடியாது. யாராக இருந்தாலும், அவர்களுக்கென்று கனவுகள், எதிர்பார்ப்பெல்லாம் இருந்திருக்கும். ஒரு நாள் ஃபன்னுக்காக பல கட்ட தேர்வுகளுக்குப் பின் வந்தவர்களின் ஆசையை மேடையிலேயே கலைத்து அனுப்பிவிடுவது நேர்மையான செயலாக இருக்க முடியாது.
லட்சுமிபிரியா, ஷாதிகா, ஷப்னம் மூவரில் ஷப்னம் தவிர்த்த மற்ற இருவரையும் மக்கள் தேர்ந்தெடுக்க, அவர்கள் உள்ளே போனார்கள். வீட்டுக்குள் போகுமுன்பாக வாசலிலேயே, கிராமங்களில் வெற்றிலையில் சூடம் ஏத்தி சத்தியம் வாங்குவது போல, ஒரு துணியில் கைரேகை வைக்கச்சொல்லி, ’இந்த வீட்டுக்குள் போனால் நான் சுவாரசியமாக விளையாடுவேன், ஓர் ஓரமாக சும்மாவே உட்கார்ந்திருக்க மாட்டேன்’ என்று சத்தியப்பிரமாணம் எல்லாம் எடுக்க வைத்து, உள்ளே அனுப்பினார்கள். சுவாரசியமாக விளையாடுவதெல்லாம் தன்னைப்போல் இயல்பாக நிகழ்வது, நிகழவேண்டியது. சத்தியம் பண்ணினால் மட்டும் சுவாரசியம் வந்துவிடவாப் போகிறது? பிக்பாஸ் கோமாளித்தனங்களுள் இதுவும் ஒன்று.
அடுத்து சினிமா விமர்சகர் இட்ஸ்பிரசாந்த், மாடல்கள் ஜாவித், பிருத்வி எனும் மூவர் வந்தார்கள். அதில் உள்ளே போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் ஓட்டெடுப்பில் மயிரிழையில் வெளியேற மற்ற இரண்டு பையன்களும் உள்ளே போனார்கள். உள்ளே செல்பவர்களை ’சீசன் பத்து, உள்ள போறவங்களுக்கு வேணும் கெத்து’ என்று வழக்கமான விஜய் டிவி மொக்கை பஞ்ச் டயலாக்கையே மீண்டும் மீண்டும் சொல்லி உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார் விசே. இந்த விஜய் டிவிகாரர்கள் டயலாக் எழுதிக்கொடுக்கிற ஆட்களையாவது மாற்றித் தொலைக்கலாம்.
அடுத்ததாக, கடந்த மூன்று வாரங்களாக நடந்துகொண்டிருந்த பிக்பாஸ் காமன் மேன் விளையாட்டின் இறுதிப் போட்டியாளர்களான 8 பேரையும் ஒரே டேக்கில் அழைத்தார் விஜய் சேதுபதி. காமன் மேன் நிகழ்ச்சி மூலமாக, அதில் கலந்துகொண்ட 50 பேரிலிருந்து இந்த 8 பேர் தேர்வாகியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சி, போட்டியாளர்களின் திறமை, குணம் போன்றவற்றை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சியாக இல்லாமல், பொறுமையில்லாமல், அடுத்தவர் பேசுவதைக் காதுகொடுத்தும் கேட்காமல், வளவளவென்று சல்லித்தனமாக பேசிக்கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருப்பவர்களாகப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்திருந்தார்கள். அதுதானே இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமும்! பின் வேறெதை எதிர்பார்க்கமுடியும்? இந்த 8 பேரிலிருந்து முனியம்மா, ஷாமா, ஜேஸன் எனும் 3 பேர் உள்ளே அனுப்பப்பட்டார்கள். அதிலும் 8 பேரில் 5 பேர் போகப்போகிறீர்கள் என்று சொல்லி ஒரு தடவை, பின்னர் 3 பேர் மட்டும்தான் என்று ஒரு தடவை என இரண்டு தடவைகளாக பில்டப் செய்து பங்கேற்பாளர்களை முடிந்த வரை வெறுப்பேற்றினார்கள்.
அடுத்து சீரியல் நடிகை முத்தழகி, யோகா மாஸ்டர் கவிதா, மேக்கப் ஆர்டிஸ்ட் அஷ்மிதா மூவரில் முத்தழகியும், அஷ்மிதாவும் உள்ளே போனார்கள். சீரியல் நடிகர் ஆகாஷ், அவரது தங்கை சீரியல் நடிகை அக்ஷிதா இருவருக்கிடையே நடந்த வாக்கெடுப்பில் ஆகாஷ் உள்ளே போனார். சினிமா நடிகர் பிளாக் பாண்டி, மாடல் ரகுநாத், சீரியல் நடிகர் வினோத்பாபு மூவரில் ரகுநாத் வெளியேறினார். துணைநடிகை சாந்தினி, இன்ஸ்டா பிரபலங்கள் மாளவிகா, சவின்யா மூவரில் மாளவிகா வெளியேறினார். அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், சீரியல் நடிகர் புவியரசு, நடிகர் ராகவ் வந்தனர். இதுவரை வந்த ஆட்களில் நீண்டகாலமாக சினிமாவில் இயங்கிக்கொண்டிருக்கும் பிரபல முகம் ராகவுடையது. மூவரில் புவியரசு வெளியேறினார். அடுத்து வந்த சினிமா துணைநடிகை தன்யா, துணைநடிகர் எபி இருவரில் தன்யா உள்ளே போனார். இறுதியாக சீரிஸ் நடிகர் முகேஷ், KPY, CWC போன்றவற்றில் தலைகாட்டி வந்த அன்சர், காஃபி ஷாப் தொழில்முனைவரும், மாடலுமான ராகவ் மூவரில் அன்சரும், முகேஷும் உள்ளே போனார்கள்.
குறிப்பாக இந்த சீசனில் வயது மிகக் குறைந்தவர்களோ, மிக அதிகமானவர்களோ யாரும் இல்லை. ஒரு சிலர் தவிர்த்து அத்தனை பேரும் இளைஞர்களாக இருப்பது இது முதல் தடவை என்று உறுதியாகச் சொல்ல முடியும். போலவே கோமாளித்தனங்கள் செய்து மீடியாவில் புகழ்பெற்ற வாட்டர் மெலன், அகோரி சாமியார் போன்ற வித்தியாசக்கோமாளிகள் யாரும் இல்லாததும் ஒரு பெரிய ஆறுதல். இந்த வித்தியாசம் இந்த சீசனின் சுவாரசியத்துக்கு வழிவகுக்கும் என்று தோன்றுகிறது. வழக்கமாக இந்த அறிமுக நாளிலேயே ஒரு சில அரைவேக்காடுகளைக் கண்டுபிடிக்க முடியும். இம்முறை அது சற்று சிரமமாக இருந்தது. பரவாயில்லை, ஒரு சில நாட்களிலேயே கண்டுபிடித்துவிடலாம்.
இப்போதைக்கு உள்ளே போயிருக்கும் 19 பேரில் வினோத்பாபு, பாண்டி, லட்சுமிபிரியா, ஷாமா, சாந்தினி, ராகவ், முகேஷ் போன்ற போட்டியாளர்கள், இந்த சீசனை சுவாரசியப்படுத்துவார்கள் எனும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். வரும் நாட்களில் வைல்டு கார்டு எண்ட்ரிகளும் இருக்கும். பார்க்கலாம் இந்த சீசன் எப்படிப் போகிறது என்று.
தொடரும் நாட்களில் நிகழ்ச்சி குறித்த நமது கருத்துகளை தினமும் இங்கே பகிர்ந்துகொள்வோம். உடனிருங்கள்.