பலவகையான விமர்சனங்களுக்கு இலக்கானாலும், 'பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன் ’சீசன் 10' வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை 6 மணி முதல் விஜய் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இம்முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
இந்த சீசனின் தொடக்கத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள விளம்பரப்பாடல் சமீபத்தில் வெளியானது. வழக்கமாக, பிரபல நட்சத்திரங்களுடன் சேர்ந்து பொதுமக்கள் சார்பாக ஓரிரு போட்டியாளர்கள் உள்ளே போவதுண்டு. பெரும்பாலும் அவர்கள் யூடியூப், இன்ஸ்டாகிராமில் அறியப்படும் நபர்களாக இருப்பார்கள். இம்முறை அதற்காக 'பிக்பாஸ்: தி காமன் மேன்' (Bigg Boss: The Common Man) எனும் தனி நிகழ்ச்சியே நடத்தப்பட்டு சில போட்டியாளர்கள் தனியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் நான்கைந்து கட்டங்களாக தேர்வுகளை நடத்தியுள்ளனர். முதலில் 2 நிமிட விடியோக்கள் அனுப்பச்சொல்லப்பட்டது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைன் நேர்காணல் நடத்தப்பட்டது. பின்னர் நேரில் அழைக்கப்பட்டு மூன்றாம் கட்டத் தேர்வில் வெற்றியாளர்களாக 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ’பிக்பாஸ்: தி காமன் மேன்’ நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்கள், அந்த நிகழ்ச்சிதான் கடந்த 2 வாரங்களாக தினமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதில் வெற்றி பெறும் சில போட்டியாளர்கள் மற்ற பிரபல போட்டியாளர்களுடன் இணைந்து பிக்பாஸ் சீசன் 10 வீட்டுக்குள் போவார்கள்.
’பிக்பாஸ்: தி காமன் மேன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைப் பார்க்கும்போது சற்றே பயமாகத்தான் இருக்கிறது. கலந்துகொண்ட பெண்கள் அனைவருமே, ‘பெண் விடுதலைக்காக வந்திருக்கிறோம்’, ‘பெண்கள் சமூகத்துக்கே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வந்திருக்கிறோம்’ என்பது மாதிரியான போராளி மோடில் இருக்கிறார்கள். ஆண்கள், ஏதாவது சில்லியான கோமாளித்தனங்களைச் செய்து எப்படியாவது உள்ளே போய்விடலாம் என்று நினைக்கிறார்கள். அனைவருமே முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகிறார்கள். படிக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்ற அவர்களின் சொந்தத் தவறுகளையும், அம்மா இறந்துவிட்டார், அப்பா குடிகாரர் என்பது போன்ற சோகக் கதைகளையும் தூக்கிக்கொண்டு வந்து சிம்பதி கிளப்பி வாய்ப்புக் கேட்கிறார்கள். எதிராளி சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காமல், அரைகுறையாக சண்டை போடுவதற்கும், அர்த்தமில்லாமல் கத்துவதற்கும் தயாராக இருக்கிறார்கள். இவர்களில் சிலர் உள்ளே போனால் என்னவாகும் என்று கலக்கமாகத்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிக்பாஸ் பிரபலங்கள் ஓவியா, ஆரி, ராஜு ஆகிய மூவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இத்தொடர் வழக்கம் போல ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்திலும், ஸ்டார் விஜய் (Star Vijay) தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் தினமும் ஒளிபரப்பப்படவிருக்கிறது. மேலும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ரசிகர்கள் 24 மணி நேரமும் (24x7 Streaming) ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாகக் கண்டு களிக்கலாம்.
சென்ற ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் நமது புதுயுகம் தளத்தில் பிக்பாஸ் தினசரி நிகழ்வுகள் குறித்த நம் பார்வை, தினமும் வெளியாகும். சுவாரசியமான விமர்சனங்களுக்கும், கருத்துப் பரிமாற்றத்துக்கும் நம்மோடு இணைந்திருங்கள்.