Breaking Bad 
சினிமா

வரலாற்றை மாற்றிய 5 தொடர்கள்! #All-Time Top 5 Series

தொலைக்காட்சித் தொடர்கள் குறித்த எண்ணத்தையே புரட்டிப்போட்ட, வரலாற்றையே மாற்றியெழுதிய தொடர்கள் என்று உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் பேசப்படும் சில பெயர்களைப் பார்க்கலாம்.

ஆதி தாமிரா

ஒரு காலத்தில் சினிமாவோடு தொலைக்காட்சித் தொடர்கள்/ வெப் தொடர்கள் போட்டியிட முடியாது என்ற எண்ணமிருந்தது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் அந்த நிலை முற்றிலுமாக மாறியிருக்கிறது. இன்று, உலகின் சிறந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பலரும் திரைப்படங்களை விட வெப் சீரிஸ்களையே தேர்வு செய்கிறார்கள். காரணம், இரண்டு மணி நேரத்தில் சொல்ல முடியாத அளவுக்கு ஆழமான கதைகளையும், பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரங்களையும், பல ஆண்டுகள் நீளும் வாழ்க்கைப் பயணங்கள் குறித்த கதைகளையும் 20 மணி, 40 மணி, 60 மணி நேரம் என நேரக்கட்டுப்பாடு இல்லாத இந்த வடிவத்தில் சொல்ல முடிகிறது.

இந்தப் புரட்சியை சாத்தியப்படுத்திய முன்னோடியான தொடர்கள் எவை?

ஒவ்வொருவருக்கும் இதுகுறித்து தனிப்பட்ட பட்டியல் இருக்கலாம். ஆனால், தொலைக்காட்சித் தொடர்கள் குறித்த எண்ணத்தையே புரட்டிப்போட்ட, வரலாற்றையே மாற்றியெழுதிய தொடர்கள் என்று உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் பேசப்படும் சில பெயர்கள் இவை.

1. Breaking Bad (2008–2013)

Breaking Bad

வால்டர் ஒயிட் எனும் ஒரு சாதாரண பள்ளி வேதியியல் ஆசிரியர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறான். இழக்க ஏதுமில்லாத நிலையில் குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்புக்காக அவன் எடுக்கும் ஒரு முடிவு, அமெரிக்காவின் மிகப் பெரிய மெத் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக அவனை மாற்றுவது எப்படி என்பதுதான் கதை. இது வெறும் குற்றத் தொடர் மட்டுமேயல்ல. தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிகச் சிறந்த கதாபாத்திர வளர்ச்சி மற்றும் மாற்றம் (Character Arc) கொண்ட தொடராக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு சீசனும் முந்தையதைவிட உயர்ந்த தரத்தில் அமைந்து, இறுதிவரை ஒரே தரத்தைத் தக்க வைத்திருப்பது இதன் மிகப்பெரிய சாதனை.


“I’m not in danger skyler, I’m the Danger”- என்று வால்டர் ஒயிட் தன் மனைவியிடம் சொல்லும் இடம், தொலைக்காட்சித் தொடர் வரலாற்றின் மிகச்சிறந்த ஹீரோயிக் மொமண்டுகளில் ஒன்றாக ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது.

2. Game of Thrones (2011–2019)

Game of Thrones

எஸ்ஸோஸ் மற்றும் வெஸ்ட்ரோஸ் எனும் இரண்டு கற்பனைக் கண்டங்களில் பரவிக்கிடக்கும் ஏழு நாடுகளையும், அவற்றின் தலைமைப் பொறுப்பையும் பற்றிய கதை இது. அதன் தலைமைப்பீடத்திலிருந்த (Iron throne) ஒரு மன்னன் இறந்துபோய்விட, அந்த அரியணைக்காகவும், அதைச் சுற்றியும் நடக்கும் ஒரு பிரம்மாண்டமான கதை இது. கதை மட்டுமல்ல, எடுக்கப்பட்ட விதத்திலும், சினிமா அளவிலான பிரம்மாண்டத்தைத் தொலைக்காட்சிக்குள் கொண்டு வந்த முதல் தொடர் இது.

பல அரச குடும்பங்கள், நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள், அரசியல், போர், துரோகம், டிராகன்கள்—இவற்றைப் பார்க்க உலகமே வாரா வாரம் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது. இறுதி சீசன் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொலைக்காட்சித் தயாரிப்பு அளவை பெரியளவில் மாற்றிய தொடர் இதுதான். புகழ்பெற்ற வசனங்கள் பல இதில் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட, உலக ரசிகர்களை புல்லரிக்கவைத்த, ஹீரோயிக் கணங்களின் உச்சமான ஒரு ஷாட் இதில் உண்டு. எதிர்வரும் ஒரு பெரும்படைக்கு எதிராக ஜான் ஸ்னோ, ஒற்றையாளாக தன் வாளை உருவி நிற்கும், மறக்க இயலாத ஒரு காட்சிதான் அது.

3. The Sopranos (1999–2007)

The Sopranos

ஒரு மாஃபியா தலைவன், குற்ற உலகையும் குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த முயல்வதும், அதற்காக மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும்தான் இதன் மையம். ஒரு குற்றவாளியின் முழுமையான வாழ்க்கைப் பக்கங்களையும் காட்ட முடியும் என்பதை இந்தத் தொடர் நிரூபித்தது. இதற்குப் பிறகுதான் தொலைக்காட்சி தொடர்களை சினிமாவுக்கு இணையாக விமர்சகர்கள் அணுகத் தொடங்கினர். தரமான தொலைக்காட்சித் தொடர்கள் சினிமாவுக்கு இணையான மரியாதையோடு, ஒரு புதிய மீடியமாக உருவெடுக்கவும், அவற்றுக்கென்றே ப்ரெஸ்டிஜ் டெலிவிசன் (Prestige Television) எனும் சொல்லாடல் உருவாகவும் காரணமான முன்னோடி தொடர்களுள் இது முக்கியமானது.

4. The Wire (2002–2008)

The Wire

போலீஸ், போதைப்பொருள் கும்பல்கள், அரசியல், கல்வி, ஊடகம், தொழிலாளர் வர்க்கம் என ஒரு நகரத்தையே கதாநாயகனாக்கிய தொடர் இந்த தி வயர்—இதன் ஒவ்வொரு சீசனும் சமூகத்தின் ஒரு புதிய அடுக்கை ஆராய்ந்தது. ஹீரோ, வில்லன் என்ற எளிய பிரிவுகளுக்குப் பதிலாக, முழு சமூக அமைப்பே எப்படி செயல்படுகிறது என்பதை மிக யதார்த்தமாகக் காட்டியதால், இது பல விமர்சகர்களின் பட்டியலில் எல்லாக் காலத்திற்குமான சிறந்த தொடராக இருக்கிறது.

5. Chernobyl (2019)

Chernobyl

மனித வரலாற்றின் மறக்கமுடியாத நிகழ்வான 1986-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ரஷ்யாவில் நிகழ்ந்த அணு உலை விபத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர், அறிவியல், அரசியல், மனிதத் தவறுகள், பொறுப்பின்மை ஆகியவற்றை பதைபதைக்க வைக்கும் வகையில் பதிவு செய்தது. அந்த நேரத்தில் வெப் சீரிஸ்கள் மணிக்கணக்கான எபிசோடுகள், அனேக எபிசோடுகள் கொண்ட பல சீசன்கள் என்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த போது, உள்ளடக்கத்துக்கேற்ப அதன் அளவை முடிவு செய்யும் சுதந்திரமும் இந்த மீடியத்தில் இருக்கிறது என்று நினைவூட்டிய தொடர் இது. ஐந்து எபிசோடுகள் மட்டுமே இருந்தாலும், ஒரு Limited Series எவ்வளவு உயர்ந்த தரத்தில் இருக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தது.

இந்தப் பட்டியலில் பலருக்கும் பிடித்த Stranger Things,  Friends, The Walking Dead, Better Call Saul, Mad Men, Band of Brothers, போன்ற பல தொடர்கள் இல்லாமல் போயிருக்கலாம். ஒவ்வொரு வகைமைகளுக்குள் அவையும் மிகச்சிறந்த படைப்புகள்தான். ஆனால், இந்த ஐந்து தொடர்களைத் தனித்து நிறுத்துவது அவற்றின் புகழ் மட்டுமல்ல. தொலைக்காட்சி ஊடகம் எதைச் செய்ய முடியும் என்பதற்கான வரம்பையே இவை மாற்றியமைத்தன. இன்று நாம் ரசிக்கும் பெரும்பாலான தரமான வெப் சீரிஸ்களின் பின்னால், இந்த ஐந்து தொடர்களின் நிழல் நிச்சயமாக இருக்கும். இவற்றை இன்னும் பார்க்காதவர்கள் நிச்சயம் இவற்றுக்கென நேரமொதுக்கிடுங்கள்.