Spider-man : Brand New Day 
சினிமா

புது வில்லனை சமாளித்தானா பீட்டர்? #Spider-Man: Brand New Day

இந்தக் கதையில், உடல்சார்ந்த மரபணு மாற்றங்களால் ஸ்பைடர்மேனின் சக்திகள் இன்னும் மேம்படுகின்றன. அடுத்து வரவிருக்கிற அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே பட வரிசைகளுக்கு இதெல்லாம் தேவைப்படுகிறதோ, என்னவோ!

ஆதி தாமிரா

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து வந்த அவெஞ்சர்ஸ் படங்கள், பல பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை உருவாக்கியிருக்கின்றன. அதில் அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், பிளாக் பேந்தர் என பல முக்கியமான தலைகள் இருந்தாலும் ஸ்பைடர்மேன் நம் அனைவருக்குமே ஃபேவரிட்டான ஒரு பாத்திரம். மற்ற ஹீரோக்கள் தனித்துத் தோன்றிய படங்கள் செய்யாத வசூல் சாதனைகளை ஸ்பைடர்மேன் படங்கள் செய்திருப்பதை வைத்தே உலகளாவிய அளவில் ஸ்பைடர்மேன் எந்த அளவுக்கு ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் என்பதை உணரலாம்.

அதற்குக் காரணம் மற்ற சூப்பர் ஹீரோக்கள், அவர்களுடைய திறமைகளுக்கு ஏற்ற வில்லன்கள், கதைகள் என சீரியஸாக இருக்கும் போது, ஸ்பைடர்மேன் படங்கள் மட்டுமே நம் வீட்டுப் பிள்ளைகளுள் ஒருவனுக்கு இப்படியான சக்திகள் கிடைத்தால் என்னென்ன மாதிரியான, அந்த வயதுக்கேயுரிய சிக்கல்கள், காதல், ஆசைகள், பொறுப்புகள் என மனப்போராட்டத்துக்கு ஆளாவார்களோ, அப்படியாகவே நம்மில் ஒருவன் எனும் உணர்வோடு வடிவமைக்கப்படுகின்றன.

டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேனாக தோன்றி, 2017ல் தொடங்கிய எம்சியு ஸ்பைடர்மேன் படவரிசையில் நான்காவது படமாக, ஸ்பைடர்மேன் –பிராண்ட் நியூ டே இந்த வாரம் வெளியாகி உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஜான் வாட்ஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர்மேன் –ஹோம் டிரைலாஜி என்று சொல்லப்படுகிற 3 படங்களும் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த 4வது படம், டெஸ்டின் டேனியல் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது. வழக்கமான அதிரடிச் சண்டைக்காட்சிகளோடு கூட நிறையவே உணர்வுப்பூர்வமான காட்சிகளோடு வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

முந்தைய படத்தின் இறுதியில், பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் எனும் உண்மை உலகுக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால், அந்த அடையாளத்தை அவன் விரும்பவில்லை. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அதை மாற்றியமைக்கிறார். அதனால் அந்த உண்மை உலகிற்கு மறந்துபோகிறது. அதைத்தான் பீட்டரும் விரும்புகிறான். ஆனால், அதில் அவனுக்கான சிக்கல் அவனது காதலி எம்ஜேவும், நண்பன் நெட் இருவரும் கூட அவனை மறந்துபோகிறார்கள். அது ஒருபுறமிருக்க, இந்தக் கதையில், உடல்சார்ந்த மரபணு மாற்றங்களால் ஸ்பைடர்மேனின் சக்திகள் இன்னும் மேம்படுகின்றன. (அடுத்து வரவிருக்கிற அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே பட வரிசைகளுக்கு இதெல்லாம் தேவைப்படுகிறதோ, என்னவோ!) அதை அவன் கட்டுக்குள் வைத்திருக்க போராட வேண்டியிருக்கிறது. அதே நேரம், இன்னொருவரின் உடலுக்குள் புகுந்து வெளிவரும் திறமை பெற்ற ஒரு புது வில்லன் ஒருவன் வருகிறான். அவனைச் சமாளித்து, தன்னையும் கட்டுப்படுத்தி, பீட்டர் மீண்டும் காதலியை அடைந்தானா என்பதே இந்தப் படத்தின் கதை.

எம்சியுவின் இன்னொரு முக்கியமான சூப்பர் ஹீரோவான பனிஷர் இதில் ஸ்பைடர்மேனின் நண்பராக வருகிறார். அந்தக் கதாபாத்திரம் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் அமைக்கப்பட்டிருந்து. பனிஷரை இதுவரை நாம் டிவி சீரியல்களில்தான் பார்த்திருக்கிறோம். இனி படங்களிலும் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். கேமியோ தோற்றத்தில் ஹல்க் வருகிறார். இரண்டுமூன்று சண்டைக்காட்சிகளே இருந்தாலும் எல்லாமே மிகச்சிறப்பாக இருந்தன. இறுதிக் காட்சியான நிஞ்சாக்களோடு ஸ்பைடர்மேன் தன் புதிய திறமைகளோடு மோதும் காட்சி கூஸ்பம்ஸ் கிளப்புகிறது!! நிச்சயம் வீட்டின் சிறார்களோடும், குடும்பத்தோடும் போய் ரசிக்கலாம்!